புதுடெல்லி, மார்ச்.26-–
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேலும் 5 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதில் 5 பேர் கொண்ட 6-வது பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று வெளியிட்டது. மொத்தம் 190 தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
நெல்லை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வக்கீல் ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.
ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பிரகலாத் குஞ்சாலை காங்கிரஸ் களமிறக்கி இருக்கிறது.
ராஜஸ்தான் முன்னாள் பா.ஜ.க. முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் நெருங்கிய ஆதரவாளரான பிரகலாத் குஞ்சால், கோட்டா சட்டசபை தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி கடந்த 21-ந் தேதிதான் காங்கிரசில் இணைந்தார். பிரபல தலைவரான இவரது வருகை ஹடோட்டி பிராந்தியத்தில் காங்கிரசுக்கு பலம் கொடுக்கும் என கருதப்படுகிறது.
இதைப்போல ராஜஸ்தானின் அஜ்மேர் தொகுதியில் ராம்சந்திர சவுத்ரி, ராஜசமந்த் தொகுதியில் சுதர்சன் ராவத், பில்வாராவில் தமோதர் குர்ஜார் ஆகியோரை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது.
விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக, தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாரகை கத்பட் அறிவிக்கப்பட்டுள்ளார்.