செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள்

வெற்றியை உங்கள் காலடியில் சமர்ப்பிப்போம்: மாநாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை

சேலம், ஜன.22-

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு வாய்ப்பு தாருங்கள். வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்போம் என்று சேலம் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

சேலத்தில் நேற்று நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

ராமேசுவரத்தில் ஒருவர் (பிரதமர் மோடி) இருக்கிறார். 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாதசுவாமியை நோக்கி பார்க்க போய்க்கொண்டு இருக்கிறார். ஆனால், நாம் இங்கே மாநில உரிமை காக்க 22 தலைப்புகளில் நம் பேச்சாளர்கள் ஆற்றிய உரை நம்முடைய ராமசாமியை (தந்தை பெரியார்) நோக்கி அமைந்துள்ளது.

10 ஆண்டுகால பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான படை இங்கே இருந்து புறப்பட தயாராக இருக்கிறது. இது, என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். இந்த மாநாடு முடிந்ததும் கருணாநிதி நூற்றாண்டு பணிகளை 100 சதவீதம் செய்து முடிப்போம்.

மாணவர்களின் மருத்துவ கனவை பறிக்கின்ற ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று 85 லட்சம் கையெழுத்துகளை பெற்றுள்ளோம். இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, டெல்லிக்கு சென்று போராட்டம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டால் அதை செய்யவும் இளைஞரணி தயாராக உள்ளது.

மாநில உரிமை மீட்பு முழக்கம்

மாநில உரிமையை பறிப்பதையே மத்திய அரசு முழுநேர வேலையாக செய்து வருகிறது. அதற்காகத்தான் ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ என்ற பெயரில் மாநாட்டை நடத்தி வருகிறோம். அண்ணா தி.மு.க. உதவியோடு, எடப்பாடி பழனிசாமி துணையோடுதான் நமது உரிமைகளை மத்திய அரசு பறித்தது. வெளியுறவுத்துறை, ராணுவம் மட்டும் மத்திய அரசிடம் இருந்தால் போதும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் கொள்கை. ஆனால், இன்று எல்லா துறைகளையும் மத்திய அரசு தனது கையில் வைத்துள்ளது.

இப்போது மருத்துவம் மட்டுமல்ல எல்லா பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வரப்போகிறது என சொல்கிறார்கள். மொழி நமது உரிமை மட்டுமல்ல. தமிழ்மொழி நமது உயிர். இதுவரைக்கும் உங்களால் தமிழ்நாட்டில் கால்வைக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உங்களால் வெற்றி பெற முடியாது. தமிழர்களது அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்கள் எண்ணத்தை தி.மு.க. ஒரு போதும் அனுமதிக்காது. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறையை வைத்து பயமுறுத்த நினைக்கிறார்கள்.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். ‘இ.டி.’ (அமலாக்கத்துறை)க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம். உங்களது உருட்டல், மிரட்டலுக்கெல்லாம் தி.மு.க. தொண்டன் அல்ல தொண்டன் வீட்டு சாதாரண கைக்குழந்தை கூட பயப்படாது. அதற்கு காரணம் நமக்கு கிடைத்திருக்கும் தலைவர்.

இந்த இயக்கத்தை பாதுகாத்தால்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதி காப்பாற்றப்படும். அதற்கு 40 தொகுதியிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். முதலமைச்சர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமராக வர வேண்டும். அதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.

சமூகநீதி வண்ணத்தை பூச உறுதி ஏற்போம்

கருணாநிதி மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற போது, ‘எனக்கு ஒரு கனவு இருக்கிறது. மிக மிக முக்கியமாக நாடெங்கும் காவி சாயம் பூச நினைக்கின்ற ‘பாசிஸ்டு’களை வீழ்த்த வேண்டும்’ என்றார்.

முதலமைச்சரின் இந்த கனவை நனவாக்கி தர வேண்டியதுதான் எங்களது அடுத்த வேலை. இந்த லட்சியம் தனிப்பட்ட உதயநிதியின் லட்சியம் அல்ல. லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியம். இந்தியா முழுவதும் காவி சாயம் பூச நினைக்கின்ற ‘பாசிஸ்டு’களை வீழ்த்துவதே அந்த லட்சியத்தின் முதல்படி. காவி சாயத்தை அழித்துவிட்டு சமூகநீதி வண்ணத்தை பூச எல்லோரும் உறுதியேற்று உழைப்போம்.

இளைஞரணிக்கு நான் செயலாளராக இருந்தாலும் இந்த அணிக்கு எப்போதும் நீங்கள் (முதலமைச்சரை பார்த்து) தான் செயலாளர். நான் பெயரளவுக்குதான் செயலாளர். இது உங்களுடைய குழந்தை. இந்த அணிக்கு தாயும், தந்தையும், எல்லாமும் நீங்கள்தான். இப்போது இந்த குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள்.

எனவே, இந்த குழந்தைகளுக்கு நிறைய பொறுப்பு கொடுங்கள். நிறைய வேலை கொடுங்கள். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் தகுதியான இளைஞர்களுக்கு போட்டியிடுகிற வாய்ப்பை கொடுங்கள். வெற்றியை உங்களது காலடியில் சமர்ப்பிப்போம். இது இளைஞரணி அல்ல. கலைஞர் அணி. இங்கு கூடியிருக்கிற இளைஞர் படை டெல்லியில் கூடியிருக்கக்கூடிய ‘பாசிஸ்டு’களை விரட்டி அடிக்கப்போவது உறுதி.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *