மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி
சென்னை, பிப்.24-–
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றிபெற வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காணொலி காட்சி மூலம் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டிய அவசர, அவசியம் காரணமாகத்தான் சட்டமன்றம் முடிந்தவுடன் காணொலி வாயிலாக நடத்துகிறோம்.
நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதியின் நினை விடமும், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது. தாய் தமிழ்நாட்டையும் – தி.மு.க.வையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவிட
திறப்பு நிகழ்ச்சி…
விழாவாக இல்லாமல், நிகழ்ச்சி யாக நாம் நடத்துவதால், அந்த நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளு மன்ற தொகுதி வாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக்காட்டி விட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டி.வி.யில் பார்த்து பிரமித்தேன்.
அனைத்து தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் தி.மு.க.வினரை உற்சாகப்படுத்தி இருக்கின்றன.
தேர்தல் பணிகளைப் பொறுத்த வரையில் நாம் மிக வேகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம்தான் (தி.மு.க. கூட்டணி) முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும்.
எளிமையாக பிரச்சாரம்
செய்யுங்கள்
நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாக புரியும் வகையில் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மத்திய பாரதீய ஜனதா அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் வருகிற 26-ந் தேதியன்று ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை தொடங்குவது.
டெல்லியிலும்
முதலமைச்சரின் குரல்
இதற்கென வரும் 24, 25 ஆகிய நாட்களில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி யிலும் தனித்தனியாக, தொகுதி பார்வையாளர்கள், பிஎல்ஏ-2, பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு கூட்டங்களை நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிக்கவும், 26-ந் தேதி முதல் ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்தி, முதலமைச்சரின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்திட வேண்டும்.
திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும், தொகுதி பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக கலந்துகொண்டனர்.