செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது

தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு

சென்னை, மார்ச். 7-–

அண்ணா தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது. அந்த கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலை அண்ணா தி.மு.க. கூட்டணி அமைத்து சந்திக்கிறது. அந்த வகையில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.

ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் அண்ணா தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் 29ந் தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவை, அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், பென்ஜமின் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, 2 கட்சிகள் இடையே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தே.மு.தி.க. சார்பில் 7 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே தேர்தல் தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. சார்பில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழுவில் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கைபரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

2-ம் கட்ட பேச்சுவார்த்தை

இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று அண்ணா தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. 2 கட்சிகளையும் சேர்ந்த பேச்சுவார்த்தை குழுவினர், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசினார்கள்.

இதில் அண்ணா தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், பென்ஜமின் மற்றும் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும், தே.மு.தி.க. சார்பில் துணைச் செயலாளர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் வி.இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.

அப்போது தே.மு.தி.க. சார்பில் 7 தொகுதிகள் வரை அதாவது கள்ளக்குறிச்சி, விருதுநகர், மேற்கு மாவட்டத்தில் ஒரு தொகுதி உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் அண்ணா தி.மு.க. சார்பில் 4 தொகுதிகள் வரை ஒதுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் உள்பட 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய உறுதியளிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

கூட்டணி உறுதி

இதேபோல 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் கூட்டணியும் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தொகுதி பங்கீட்டில் மட்டுமே இழுபறி நீடித்து வருகிறது. எனவே அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது தொகுதி பங்கீட்டை முடிவு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர், தே.மு.தி.க. அவைத்தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது. நாங்கள் எங்கள் தரப்பு கருத்துக்களை கூறினோம். பதிலுக்கு அவர்களும் அவர்கள் தரப்பு கருத்துக்களை கூறினார்கள். அண்ணா தி.மு.க. – தே.மு.தி.க. இடையே மிகப்பெரிய வெற்றி கூட்டணி அமையும். தற்போது 2ம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும். நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதியாக அமைப்போம் என்று பேசினோம்.

2ம் கட்ட பேச்சுவார்த்தையில் பேசிய கருத்துக்களை பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் தெரிவிப்போம். தொகுதி பங்கீடு முடிந்தவுடன் கட்டாயம் தெரியப்படுத்துகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *