சென்னை, மார்ச் 7–
அண்ணா தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 2 ஆயிரத்து 475 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி, பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
3 முனை போட்டி ஏற்படக்கூடிய நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.கவும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்வதற்கு முன்னே விருப்ப மனுக்களை வினியோகம் செய்து வருகின்றன.
அண்ணா தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், கடந்த மாதம் 21–ந்தேதி முதல் தொண்டர்கள் விருப்ப மனுக்களை வாங்கி அதனை தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனுக்களை பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.20 ஆயிரம், தனித் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.15 ஆயிரம் கட்டணத் தொகையை செலுத்தி வாங்கினர்.
விருப்ப மனுக்கள் விநியோகம் கடந்த மார்ச் 1–ந்தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்து தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று நேற்று வரை நீட்டிக்கப்பட்டது, விண்ணப்பப் படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 5 மணியுடன், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி மொத்தம் 2 ஆயிரத்து 400 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளித்துள்ளனர்.
இந்த விருப்பு மனுக்கள் அடிப்படையில் மாவட்ட செயலாளர்களுடன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்தாலோசித்து வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.