செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது

Makkal Kural Official

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

அதானி விவகாரத்தை விவாதிக்கக் கோரி கோஷம்

புதுடெல்லி, நவ. 25–

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

16 மசோதா தாக்கல் செய்ய

மத்திய அரசு திட்டம்

இந்த கூட்டத்தொடரில், வக்ப் வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா, வா்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா உள்ளிட்ட 5 மசோதாக்கள் புதியவை ஆகும். வக்ப் திருத்த மசோதா, முசல்மான் வக்ப் (ரத்து) மசோதா உள்பட 8 பிற மசோதாக்கள் மக்களவையில் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டு நிலுவையில் இருப்பவையாகும். பாரதிய வாயுயான் விதேயக் உள்ளிட்ட 3 மசோதாக்கள், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இந்த பட்டியலில் பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்த) மசோதாவும் இடம்பெற்றுள்ளது. இது டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த வகை செய்கிறது. இந்த மசோதாக்கள் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்துக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதானி, மணிப்பூர் விவகாரம்…

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை தொடங்கினார். மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்த சபாநாயகர் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவையில் இருந்த பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி மீதான அமெரிக்கா குற்றச்சாட்டு தொடர்பாகவும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாகவும் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையை 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷமிட்டன. அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கோரினர். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையிலும் அமளி…

இன்று துவங்கிய மாநிலங்களவைக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை வகித்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாநிலங்களவை 11 மணிக்கு தொடங்கியது. அவை தொடங்கியது முதல் மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஐகோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 11.45 வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இனி புதன்கிழமை (27–ந்தேதி) காலை 11 மணிக்குக் கூடும் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். அரசியல் சாசன நாள் கொண்டாடப்படுவதால் நாளை நாடாளுமன்ற அமர்வு இல்லை என்பது நினைவுகூரத்தக்கது.

முதல் நாளிலேயே

இரு அவைகளும் முடக்கம்

இதனால் இரு அவைகளும் புதன்கிழமைதான் மீண்டும் கூடும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இரு அவைகளும் அலுவல் ஏதும் நடைபெறாமல் முடங்கியுள்ளது.

சபாநாயகரை சந்தித்த

எதிர்கட்சி எம்.பி.க்கள்

வக்ப் (திருத்த) மசோதா, 2024ல் பல்வேறு பங்குதாரர்களின் கருத்துக்கள் நிலுவையில் இருப்பதால், கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தில், “வக்ப் திருத்த மசோதா, தற்போதுள்ள சட்டத்தில் பல பெரிய மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான சட்டமாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த மாற்றங்கள் இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும் பகுதியை பாதிக்கும். எனவே, அறிக்கை இறுதி செய்யப்படுவதற்குவெறும் 3 மாத கால அவகாசம் போதுமானதாக இல்லை என்பது மட்டுமல்லாமல், முறையற்ற பரிந்துரைகளையும் விளைவிக்கலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *