புதுடெல்லி, டிச. 13
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதன் 23ம் ஆண்டை முன்னிட்டு, தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாடாளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலில் உயிர்தியாகம் செய்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்த தாக்குதலை தனது எக்ஸ் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, “2001 நாடாளுமன்ற தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் தியாகம் என்றென்றும் நம் தேசத்தை ஊக்குவிக்கும். அவர்களின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.