செய்திகள்

நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இஸ்லாமாபாத், ஏப். 8–

பிரதமர் இம்ரான் கான் ஆலோசனையை ஏற்று, நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும், 9 ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் இம்ரான் கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட், கூட்டணி கட்சிக்கு அளித்த தனது ஆதரவை அண்மையில் வாபஸ் பெற்றது. இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

ஆனால் இதனை அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறிய துணை சபாநாயகர், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்தார். நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று இம்ரான் கான் அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பை ஏற்றுகொண்ட அதிபர் ஆரீப் அல்வி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதனையடுத்து, 90 நாட்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்த துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. மிகவும் முக்கியமான இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட தடையில்லை என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மேலும் நாளை ஏப்ரல் 9 ந்தேதி இம்ரான் கான் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பிரதமர் இம்ரான்கானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.