புதுடெல்லி, ஜூலை 27–
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க இன்று இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.
கடந்தஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை மணிப்பூர் விவகாரம் இரு அவைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. நேற்று எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் ஏற்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற இன்று காலை 6வது நாளாக கூடியது. அப்போது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர்.
ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சட்டா இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் அளித்தப் பேட்டியில்,”மணிப்பூர் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராகவும், அங்கே நிகழும் காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்தும் இன்றைய தினம் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து வந்துள்ளோம். இது ஓர் அடையாளப் போராட்டம். மணிப்பூர் மக்களின் துயரில் நாங்கள் துணை நிற்கிறோம் என தெரிவித்தார்.
இன்று காலை மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அவையில் அமளி ஏற்பட்டது. இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.