செய்திகள்

நாங்குநேரி சம்பவம்: 2 பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு துணைநிற்கும்

அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

நெல்லை, ஆக. 12–

நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கும், அவரது தங்கைக்கும் படிப்பில் தடை எதுவும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி பள்ளியில் சாதி ரீதியாக மாணவன் சின்னதுரைக்கு சில மாணவர்கள் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், சின்னதுரையின் வீடு புகுந்து சின்னதுரையையும், அவரது தங்கையையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அமைச்சர் நேரில் ஆறுதல்

பள்ளி மாணவர்களிடையே சாதி வெறி இவ்வளவு தீவிரமாக இருப்பது அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறியை களைய வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரை நேற்று கைது செய்தனர். இந்நிலையில் மேலும் ஒரு சிறுவனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரின் தாயாரிடம் வீடியோ காலில் நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:–

அரசு துணைநிற்கும்

‘பாதிக்கப்பட்ட மாணவர்களை, முதலமைச்சர் உத்தரவின் பேரில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். முதலமைச்சர் மாணவன் சின்னத்துறையின் தாயிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு அனைத்து வகையான உயர் சிகிச்சை வழங்கப்பட்டு தற்போது மாணவன் நலமுடன் இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பில் தடை எதுவும் ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு என்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தங்கம் தென்னரசு கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *