நாகை, செப். 23–
2 சக்கர வாகனத்திற்குள் சிறு அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி நூதன முறையில் சாராயம் கடத்திய சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், வெளி மாநில மதுப்பாட்டில்கள் கடத்தல் மற்றும் சாராய விற்பனையை தடுக்க, காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர். உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான தனி படை போலீசார் நாகூர் வெட்டாறுபாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
5 பேர் கைது
அப்போது 2 சக்கர வாகனத்திற்குள் நூதன முறையில் சீட்டுக்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மறைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து 90 மில்லி அளவு கொண்ட 250 புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் புதுவை சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மது கடத்தலில் ஈடுபட்ட வாஞ்சூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, தேவூரை சேர்ந்த ராம்குமார், வெளிப்பாளையத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அதேபோல் நரிமணம் பாலம் அருகில் நடைபெற்ற சோதனையில் புதுச்சேரியில் இருந்து சட்ட விரோதமாக 500 பாக்கெடுகளில் கடத்தி வரப்பட்ட புதுச்சேரி சாராயமும், மற்றும் மூட்டையில் இருந்த 50 லிட்டர் புதுவை சாராயமும், கடத்த பயன்பட்ட இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயக்கடலில் ஈடுபட்ட செல்லூரைச் சேர்ந்த நித்தீஸ் மற்றும் ஒரு சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுபோல தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.