நாகர்கோயில், ஏப். 4–
நாகர்கோயிலில் பாரதீய ஜனதா, காங்கிரசார் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்த நிலையில், 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததை தொடர்ந்து அவருடைய எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் அக்கட்சியினர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருந்து செட்டிக்குளம் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.
செட்டிக்குளம் செல்லும் சாலையில் உள்ள மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் தங்கள் அலுவலகம் முன்பு அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சியினரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
13 பேர் கைது
பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியினர் கையில் இருந்த கொடிகம்புகளை பறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு காங்கிரஸ் கட்சியினரும் கொடிகம்புகளால் தாக்குதல் நடத்தியதுடன் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸின் தலைப்பகுதி உடைந்து ரத்தம் சொட்டியது. அவர் தலையில் காங்கிரஸ் கொடியை கட்டிவிட்டு கோஷம் எழுப்பினார். இதையடுத்து கோட்டார் பார்வதிபுரம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸார் அங்கு சென்று இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இதில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பா.ஜ.க மாவட்ட தகைவர் தர்மராஜ் உள்பட 7 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், மாநகர தலைவர் நவீன்குமார் உள்ளிட்ட 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க-வைச் சேர்ந்த 3 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.