செய்திகள்

நவ. 23 உருவாகும் புதிய காற்றழுத்த பகுதி: தமிழ்நாட்டில் நவ. 30 வரை தொடரும் மழை

சென்னை, நவ. 20–

கிழுக்கு இலங்கை–அந்தமான் இடையே 23 ந்தேதி ஏற்படும் புதிய காற்றழுத்தம் காரணமாக, தமிழ்நாட்டில் 30 ந்தேதி வரை மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

வட தமிழகத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து நேற்று இரவு அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதையடுத்து, தமிழ்நாடு கடலோரப் பகுதியில் படிப்படியாக மழை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும். மேலும் 22 ந்தேதி வரை தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெய்யும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கிழக்கு இலங்கை – அந்தமான் இடையே, 23 ந்தேதி ஏற்படும் குறைந்த காற்று சுழற்சி, 24 ந்தேதி மேலும் தீவிரம் அடைந்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிக்கு நெருங்கி வரும். இதனால் 23ம் தேதி முதல் வட கிழக்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கும். வெறும் வெப்ப சலன மழையாக இல்லாமல், 25 ந்தேதி வரை அடிக்கடி மழை பெய்யும், பின்னர் அந்த காற்றழுத்தம் தீவிரம் அடைந்து வட தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களை நெருங்கும்.

30 ந்தேதி வரை மழை

அப்போது ஏற்படும் காற்று குவிப்பின் காரணமாக , தமிழ்நாடு முழுவதிலும் மழை பெய்யும். குறிப்பாக, தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் அதாவது விழுப்புரம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்களில் 30 ந்தேதி வரை மழை பெய்யும். அதற்கு பிறகு இந்த காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றுவிடும் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு பிறகு, டிசம்பர் 1 ந்தேதி நாகப்பட்டினம்- வட இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகும். இது வெறும் காற்றழுத்தமாக இல்லாமல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே உருவாக உள்ளது. அது மேலும் வலுப்பெறும் போது புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் டிசம்பர் 1 ந்தேதி முதல் 4 ந்தேதி வரை மிக மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *