ஆர். முத்துக்குமார்
2022 விடைபெற இருக்கும் இத்தருணத்தில் அதன் சிறப்புகளை புரட்டிப் பார்த்தால் கொரோனா ஏற்படுத்திய உயிர்ச்சேதங்கள், ஊரடங்கு காரணமாக பொருளாதார சரிவுகள் என்பதுடன் உக்ரைன் பதட்டம் போன்ற இருள் சம்பவங்களே நினைவுக்கு வருகிறது.
ஆனால் வருங்காலம் பிரகாசமாக ஜொலிக்க இவ்வாண்டில் பல விஞ்ஞான ஆய்வுகள் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள், அவை நம் அடுத்த தலைமுறைக்கு பல புதுப்புது வசதிகளை அவர்கள் கையில் தவழ விடப்போகிறது.
இன்றைய செல்போன் யுகத்தில் உலக ஜனத்தொகையில் 90% பேரிடம் இருக்கும் ஓர் கருவி செல்போன்கள் ஆகும்.
1960 களில் சோவியத் காஸ்மோ நாடுகளும் அமெரிக்க ஆஸ்ட்ரோ நாடுகளும் விண்வெளியிலிருந்தும் சந்திரமண்டலத்தில் இருந்தும் பூமியில் இருந்த தொலைத்தொடர்பு தலைமையாகத்துடனும் குடும்பத்தாருடனும் பேசிய தங்களது சாதனைகளையும் உயிருடன் இருக்கிறேன் என்று நிரூபிக்கவும் உருவான தொலைத்தொடர்பு வளர்ச்சிகள் 60 ஆண்டுகளில் ஒவ்வொரு சாமானியனின் கையிலும் அதிவேக தொலைத்தொடர்பு உன்னதமாக வந்து விட்டது அல்லவா?
மை ஊற்றி எழுத்தப்பட்ட ‘பவுண்டன்’ பேனாக்கள் ‘பால்பாயிண்ட்’ பேனாவாக மாறிய மாற்றமும் அதே விஞ்ஞானிகளால் உருவானது என்பதுதான் வரலாறு.
ராக்கெட்டில், புவியீர்ப்பு பிடியில் இருந்து வெளியேற இங்கு பேனாவால் முடியாது போனதால் புதுமையான மை அங்குள்ள அறவேயில்லாத புவியீர்ப்பு பகுதியில் எழுத தேவை எழ உருவான ‘பால்பாயிண்ட்’ பேனாக்கள் 80களில் அனைவரின் கையிலும் தவழ வந்து விட்டது.
இப்படி பல அதிரடி கண்டுபிடிப்புகள் விண் ஆய்வாளர்களால் உருவாகி இன்று நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்டது.
அந்த வகையில் இந்தியாவும் விண்வெளி ஆராய்ச்சியில் முழுமையாக மூழ்கி ஆழ்கடலில் முத்து எடுப்பது போல் பல்வேறு புதுப்புது சிக்கல்களுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவதில் சாதித்து வருகிறது.
அதில் நமக்கு ஆச்சரியத்தைத் தரும் ஒரு நிகழ்வு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் அரங்கேறி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பன்றியின் இருதயத்தை நவீன தொழில்நுட்ப முறையில் வளர வைத்து அதாவது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பன்றியின் இருதயத்தை அறுவடை செய்து ஒரு மனிதனுக்கு பொருத்தி அவரை எல்லோரையும் போல் எழுந்து நடமாட வைத்து விட்டனர்.
வரும் காலத்தில் விஞ்ஞானக் கதைகளில் வருவது போல் மருத்துவமனைகளில் ஒரு கடையில் நமது ஆதார் அட்டையை காட்டி தனக்கேற்ற உடல் உறுப்புகளை உருவாக்கச் சொல்லி மாற்று அறுவை சிகிச்சையை ஜெராக்ஸ் பிரதிகள் எடுப்பதுபோல் ‘உண்மையான அசலை’ வாங்கி உடல் உறுப்புகளை புத்தம்புதிதாக, ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான முதல் அடியை வெற்றிகரமாக நாம் எடுத்து வைத்திருப்பது 2022ல் தான்!
அடுத்த பெரிய விஞ்ஞானி வெற்றி. ‘முப்பரிமாண புரத அமைப்பை ‘ படம் எடுத்தது! நம் உடலில் உள்ள கிட்டத்தட்ட 2000 கோடி புரத அணுக்களை அடுத்தக் கட்டத்தில் எப்படி நகர்ந்து காட்சி தரும் என்ற கணிப்பை தரும் நுண்ணறிவு விஞ்ஞானமாகும். இதை நொடிப்பொழுதில் செய்து காட்டி இருப்பது தான் 2022ன் சாதனையாகும்.
இப்படி அமீனோ புரதங்களின் மாற்ற நிலைகளை கணித்துத் தரும் அதே நொடியில் அது நம் உடலுக்கும் உயிருக்கும் ஏற்படுத்தக்கூடிய கெடுதல்கள், மாற்றங்களையும் புரிந்து செயல்பட மனிதனின் செயல்பாடுகளும் புதியப் பாதையில் உன்னதமாக ஆரோக்கியமாக அறிவுப்பூர்வமாக நடைபோட வழிவகுக்கிறது.
அடுத்த சில மாதங்களில் இந்திய பெண் அல்லது ஒரு ஆண் ‘ககன்யான்’ திட்டத்தின்படி விண்வெளியில் பயணிக்க தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள்.
2024 ல் குறைந்தது ஒரு மாதமாவது விண்வெளியில் பயணித்து ஆய்வுகள் செய்து விட்டு மீண்டும் உயிருடன் பூமியில் தரை இறங்குவார்கள்.
இதற்கான முதல் பரிசோதனை திட்டமாக 2023ல் 250 கிலோ மீட்டர் வெளி வட்ட பாதையை கடந்து 3 மணி நேரம் நிலை நிறுத்தப்பட்டு பிறகு மீண்டும் புவியீர்ப்புக்குள் நுழைந்து இந்தியாவின் அருகில் உள்ள பெருங்கடலில் உயிருடன் திரும்பி விட திட்டம் தயாராகி விட்டது.
அப்பெண் அல்லது ஆணின் பெயர் 2023 ன் நட்சத்திர அந்தஸ்து வழங்கி வரவேற்க நாடு தயாராகி விட்டது.