செய்திகள் நாடும் நடப்பும்

நவீன விஞ்ஞானத்தை வசப்படுத்தும் இந்திய ஆய்வுக்கூடங்கள்


ஆர்.முத்துக்குமார்


கடந்த ஒரு மாதமாக சர்வதேச ஊடகங்களில் இந்தியாவின் பெயர் வெளிவராத நாளே இருக்காது! சந்திரயான்–3 நிலவில் தரையிறங்கியது, ஆதித்யா சூரியனை நோக்கி வெற்றிப்பயணம் துவங்கியது மற்றும் ஜி20 அமைப்பின் தலைமையை ஏற்ற ஓர் ஆண்டு முடிவில் உச்சி மாநாட்டில் பல சிறப்பான முடிவுகளுக்கு அனைத்து உலக தலைவர்களின் ஒப்புதலை பெற்றது என்பன இருந்தது.

இதில் விண்வெளித்துறை வெற்றி பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் என்பதால் இப்படி நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும், தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்கும் முதலீடு செய்வதால் என்ன நன்மை என சாமானியன் கேட்க ஆரம்பித்து விட்டான்.

‘கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போறானாம்!’ என்று கூறி கிண்டல் அடிக்கும் முன், ஏவுகலன்கள் அனுப்புவது மட்டுமா இஸ்ரோ விஞ்ஞானிகளின் பணி? இஸ்ரோ ஆய்வுகளில் பற்பல விஞ்ஞான அமைப்புகளின் ஆய்வு சமாச்சாரங்களினால் கிடைத்த பாடங்களையும், கருவிகளையும் கொண்டே வெற்றி பெற முடிகிறது.

அதிக கண்டுபிடிப்பு உரிமங்கள் வைத்திருக்கும் இந்திய அமைப்பு சி.எஸ்.ஐ.ஆர். ஆகும். 2971 உரிமங்களை பெற்றுள்ள இந்நிறுவனமே உலகில் அதிக உரிமங்கள் வைத்திருக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ராணுவ தளவாடங்கள் உருவாக்க நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வடிவமைப்புகளில் டி.ஆர்.டி.ஓ. முன்னணியில் இருக்கிறது. ஒலியை விட அதிக வேகத்தில் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை உருவாக்கிய நிறுவனமாகும்.

அவர்கள் தான் சமீபத்தில் நமது ராணுவத்திற்கு ஆயுத ஊடுருவல்களை கண்டறியும் ரேடார் கருவிகளை நாட்டிற்கு அர்ப்பணித்தது.

மாசு – தூசு – நச்சுகள் காற்று மண்டலத்தில் இருக்கும் அளவை கண்டறிய எளிய அளப்பான் கருவியான ‘இன்மாஸ்’ கருவியையும் உருவாக்கிய பெருமை அதற்கு இருக்கிறது.

விபத்தினால் ரத்தம் சீறி வெளியேறும்போது அதை உடனே தடுக்க ‘நானோ இன் மாசிஸ் களிம்பு’ என்ற அதிசய மருந்தை கொண்டு தடவிய சில நிமிடங்களில் ரத்தம் வெளியேற்றத்தை தடுத்து விடலாம். இதுவும் டி.ஆர்.டி.ஓ. கண்டுபிடிப்பாகும். இது ஓர் நானோ மருத்துவப் புரட்சியாகும்.

தற்சமயம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலில் இருக்கிறதா என ஆய்வு செய்ய ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த தேசிய கடல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவரும் இதில் 3 மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ், ஹைட்ரோ தெர்மல் சல்பைடு மற்றும் காஸ் ஹைட்ரேட்ஸ் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் வங்கக் கடலின் ஆழ்பகுதியில் இருக்கிறதா என ஆய்வு செய்வது தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இதுகுறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் எம்.ரவிச்சந்திரன் கூறும்போது, “மத்ஸ்யா நீர்மூழ்கி வாகனத்தின் முதல்கட்ட சோதனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும். சென்னை கடற்கரைக்கு அருகே வங்கக் கடலுக்குள் 500 மீட்டர் ஆழம் வரை இந்த சோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.

மொத்தத்தில் எல்லா துறைகளிலும் நமது விஞ்ஞானிகள் பல புதுமைகளை உருவாக்கி அதை மனிதனின் நல்வாழ்விற்கும், அடுத்த தலைமுறை வளர்ச்சிகளுக்கும் வழிகண்டு வருகிறார்கள்.

விரைவில் பல மனிதர்களால் செய்யப்பட்டு வரும் அவலமான பணிகளுக்கு, குறிப்பாக பாதாள சாக்கடைகளில் இறங்கி கையாளும் பணிகள் இயந்திரமயமாய் மாறுவதுடன் அவை நவீன முறைகளில் கையாளப்படும், கையாளப்பட வேண்டும்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *