செய்திகள்

நவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த நெப்டியூன் கோளின் துல்லிய ஒளிப்படம்: நாசா வெளியீடு

நியூயார்க், செப். 23–

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக துல்லியமாக படம் பிடித்துள்ள நெப்டியூன் கிரகத்தின் ஒளிப்படத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களுடன் இணைந்து, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது. கடந்த ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மிக நவீன தொழிற்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, சில மாதங்களுக்கு முன் படம்பிடித்து அனுப்பிய பிரபஞ்சத்தின் தொடக்க கால ஒளிப்படங்கள் விண்வெளி ஆர்வலர்களை மட்டுமின்றி, அனைத்து தரப்பினரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக, சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழனை கடந்த மாதம் துல்லியமாக படம் பிடித்திருந்தது.

துல்லியமான ஒளிப்படம்

இந்த நிலையில், சூரிய குடும்ப கிரகங்கள் வரிசையில் எட்டாவது கோளும், பூமியில் இருந்து மிகவும் தொலைவில் உள்ள கிரகமுமான நெட்டியூனை தற்போது துல்லியமாக படம்பிடித்துள்ளது ஜேம்ஸ் வெப்.

நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் நெப்டியூன் கிரகமும், அதன் வளையமும் துல்லியமாக காணப்படுகிறது. கடந்த 33 ஆண்டுகளில் நெப்டியூன் கிரகம் குறித்து எடுக்கப்பட்ட துல்லியமான ஒளிப்படம் இதுதான் என்று சொல்லும் அளவுக்கு இந்தப்படம் சிறப்பாக இருப்பதாக மகிழ்ச்சி தெரவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

நெப்டியூன் பூமியை விட சூரியனிலிருந்து 30 மடங்கு தொலைவில் அமைந்துள்ளதால், அந்த தொலைவில் இருந்து சூரியன் மிகவும் சிறிதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Leave a Reply

Your email address will not be published.