அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி.
கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும்,
விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் ஒன்பது விதமான உணவு வகைகள், ஒன்பது விதமான துர்க்கையின் வடிவங்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். ஊரைக் கூட்டி உறவுகளைக் கூட்டி, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கொலுப் பொம்மைகளின் வரலாறு சொல்வதில் சுந்தரிக்கு அப்படியொரு அலாதி ஆனந்தம்.
இன்று நவராத்திரி விழாவைப் பற்றிச் சொன்னாள். மகிஷாசுரனை துர்க்கை எப்படி எல்லாம் வதம் செய்தாள் ? எப்படி ஒன்பது அவதாரங்களில் வந்து தீமையை ஒழித்தாள்; என்றெல்லாம் அவள் சொல்லும் அழகே சிறப்பாக இருந்தது.
அன்று சுந்தரியின் வீட்டிற்கு வந்திருந்த ஆட்கள் எல்லாம், பாடல் பாடி, நவராத்திரி விழா கொண்டாடிக் கொண்டிருந்த போது, சுந்தரியின் வீட்டின் முன்னால், அழுக்குப் படிந்த உடையில் முனியம்மாள் என்ற பெண்ணும் அவளின் சிறிய வயது மகளும் நின்றிருந்தனர். அவர்களைப் பார்த்த சுந்தரிக்கும் கொலுவிற்கு வந்திருந்த ஆட்களுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது.
” ஏய், சுந்தரி என்ன இது? நல்ல நாளும் பொழுதுமா, இப்படி வந்து அசிங்கமா யாரோ நின்னுட்டு இருக்காங்க? அவங்கள அந்தப் பக்கம் போகச் சொல்லு ” என்று சுந்தரியிடம் ஒருத்தி சொல்ல முனியம்மாளையும் அவள் சிறிய வயது மகளையும் வெறிக்கப் பார்த்த சுந்தரி
” ஏம்மா, நாங்க அச்சர சுத்தமா கொலு வச்சு நவராத்திரி விழா கொண்டாடிட்டு இருக்கோம். நீங்க இப்பிடி வந்து அழுக்கா நின்னுட்டு இருந்தா, நல்லா இருக்குமா என்ன? கொஞ்சம் தூரப் போறீங்களா?
என்று முனியம்மாளை விரட்டினாள் சுந்தரி.
எதுவும் பேசாத முனியம்மாளும் அவள் மகளும் திரும்பித் திரும்பிப் பார்த்த படியே அந்த இடத்தை விட்டு, நகர்ந்தார்கள்.
அவர்களை விரட்டி விட்டு வந்த சுந்தரி மறுபடியும் நவராத்திரியின் மகிமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது,
” ஏய் , சுந்தரி, அங்க பாத்தியா?” என்று சுந்தரியை ஒரு பெண் கூப்பிட
” நான் என்ன செய்றது? தினமும் இப்படித் தான் வாராங்க? இப்பத் தான், ஒருத்தவங்கள துரத்தி விட்டேன் . அதுக்குள்ள இன்னொருத்தவங்களா? என்று சலித்துக் கொண்ட சுந்தரி
” ஏம்மா, இங்க என்ன மாதிரியான விழா நடந்திட்டு இருக்கு. இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம் ?
என்று கோபப்பட்டுப் பேசினாள்சுந்தரி
” போங்கம்மா, அந்தப் பக்கம் ” என்று தொழு நோயாளியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைத் துரத்தி விட்டாள்.
இப்படி முதல் நாள். இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று சென்று கொண்டே இருந்தது, நவராத்திரி விழா.
அன்று, கடைசி நாள். சுந்தரியின் வீட்டிற்கு நோயுற்ற ஒரு வயோதிகக் கிழவி வந்திருந்தாள். அவளைப் பார்ப்பதற்கு, அங்கிருந்தவர்களுக்கு அருவருப்பாக இருந்தது. அவளைப் பார்த்தவர்கள் எல்லாம் முகம் சுளித்தார்கள். வீட்டிற்குள் வந்து விடுவாளோ? என்று சுந்தரிக்கும் நவராத்திரி கொலுவிற்கு வந்த ஆட்களுக்கும் பதைபதைப்பாக இருந்தது. அந்த நோயுற்ற கிழவி வீட்டின் வெளியே நின்று கொண்டே இருந்தாள்.
எப்போதும் போல கொலுவிற்கு வந்திருந்த பெண்கள் சுந்தரியிடம் புகார் செய்தார்கள்.
” என்ன சுந்தரி, நானும் எத்தனையோ வீட்டு கொலுவுக்கு போயிருக்கிறேன். ஆனா உன் வீட்டுக் கொலுவுல தான் இவ்வளவு பிரச்சின ? “
” ஆமா. தெனந்தோறும் ஏதாவது ஒரு பிரச்சினை வருது” என்று சொல்லிய சுந்தரி, வெளியே நின்று கொண்டிருந்த அந்த நோயுற்ற அவளைப் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது.
” ஏய், சுந்தரி அவங்களுக்கு ஏதாவது குடுத்து அனுப்புறியா? என்று அங்கு வந்திருந்த ஒரு பெண் சொல்ல,
எதுவும் கொடுக்காமல், அந்தக் கிழவியை விரட்டுவதற்குத் தான் வெளியே சென்றாள் சுந்தரி.எதையாவது கொடுத்து அனுப்பலாம் என்றால் அந்த நோயுற்ற கிழவியிடம் யார் போய் கொடுப்பது? அவளைப் பார்ப்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறதே? அவளிடம் நின்று எப்படிக் கொடுப்பது ? “
என்று முகம் சுளித்தபடியே அவள் அருகே போகாமல் இருந்தாள், சுந்தரி. நின்று நின்று பார்த்த அந்த நோயாளி கிழவி, வேறு வழியின்றி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
அன்று , நவராத்திரியின் இறுதி நாள் முடிந்து, நவராத்திரி கொலுப் பொம்மைகளை எல்லாம் அடுக்கி வைத்து விட்டு, இரவு தூங்கச் சென்றாள் சுந்தரி. அந்த இரவு, திடீரென்று அடுக்கி வைக்கப்பட்ட ஒரு கொலு பொம்மை கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது.அசந்து தூங்கிக் கொண்டிருந்த சுந்தரி, திடீரென உலுக்கி எழுநதாள். ” ஐய்யய்யோ, இது என்ன அபசகுணம்? ஏன் இந்த கொலு பொம்மை உடைஞ்சது ? “
என்று வருத்தப்பட்டுத் தேம்பினாள். அப்போது, ஒரு அசரிரீ குரல் கேட்டது.
” சுந்தரி, ஒன்பது நாள் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடினாய். சுண்டல், பட்டாணி அவித்துக் கொடுத்தாய். சொந்த பந்தங்களைக் கூட்டி பஜனை பாடினாய். விதவிதமான பொம்மைகளை அடுக்கி வைத்தாய். கடவுள், நீ வணங்கும் பொம்மைகளில் இல்லை. மனிதர்களிடம் தான் இருக்கிறது. விதவிதமாகப் பட்டுப்புடவை கட்டி அத்தர் பூசிய பெண்களை வீட்டிற்குள் அழைத்து வந்து விதவிதமாக பொரியல், சுண்டல் செய்து கொடுத்து ஆடம்பரமாக நவராத்திரி விழாவை நீ கொண்டாடினாய். அவர்களை வரவேற்றாய். வாழ்த்துப்பாடினாய். நான் ஒன்பது நாளும் உன் வீட்டிற்கு வந்தேன்.
நீ தான் என்னைக் கண்டு கொள்ளவில்லை. மாறாய் என்னை விரட்டி விட்டாய். ஒரு நாள் தொழுநோயாளியாய். ஒரு நாள் நோயுற்ற கிழவியாய் , ஒரு நாள், வறுமை சூழ்ந்த பெண்ணாய்; இப்படி வந்து உன் வாசலில் நின்றேன் .ஆனால் என்னை விரட்டுவதற்கு தான் நீ தயாராக இருந்தாயே ஒழிய என்னைக் கூப்பிட்டு ஒருகைப்பிடிஉணவளிக்க உன்னால் முடியவில்லை . காரணம் ஆடம்பரத்தையும் அலங்காரத்தையும் தான் நீ அங்கீகரித்தாய். அழுக்கையும் வறுமையையும் புறம் தள்ளினாய். உன் வீட்டில் இப்போது உடைந்து விழுந்ததும் நான் தான். வெளியே அந்த நோயற்ற கிழவி, தொழுநோயாளி இப்படி ஒன்பது அவதாரங்களில் வந்து நின்றதும் துர்கா தேவியாகிய நான் தான் ” என்று சொல்லிய அந்த அசரிரீக் குரல் திடீரென மறைந்தது .
” ஐயோ நான் தவறு செஞ்சிட்டேன் என்னை மன்னிச்சிரு சாமி “
அம்மா என்று அலறினாள் சுந்தரி.அவளின் அலறல் சத்தத்தைக் கேட்டு, குடும்பமே எழுந்தார்கள்.
“அம்மா எனக்கு ஒரு சந்தேகம்”
என்றாள், சுந்தரியின் பத்து வயது மகள்
“என்ன ? ” என்று குடும்பமே கேட்க,
” கோயில்ல இருக்கிற சிலைகள சாமின்னு சொல்றோம். நவராத்திரி கொலுவில வைக்கிற சிலைகளை மட்டும் ஏன் கொலு பொம்மைன்னு சொல்றோம்”
என்று அந்தச் சிறுமி கேட்ட போது பதில் ஏதும் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றனர் சுந்தரியும் குடும்பத்தினரும்.