செய்திகள்

நவம்பர் 1 பள்ளிகள் திறப்பு: மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

திருச்சி, அக்.8-

பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பழையகோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததால் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ–மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் 1ந் தேதி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ–மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். 1-ம் வகுப்பு படிக்கும் மாணவ–மாணவிகள் முதல்முறையாக பள்ளிக்கு வருகை தருகிறார்கள். அவர்கள் எவ்வாறு முககவசம் அணிவது, எவ்வளவு நேரம் அணிய வேண்டும் என்று தெரியாமல் இருப்பார்கள். அதேபோல் முகக்கவசங்கள் கழன்று விழவும் செய்யலாம்.

ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை கையோடு பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பறையில் அமரவைத்து, அருகில் அமர்ந்து இருக்கலாம். குழந்தைகளால் முகக்கவசம் அணிந்துகொண்டு நீண்ட நேரம் உட்கார முடியாவிட்டால், எப்போது வீட்டுக்கு செல்ல நினைக்கிறார்களோ, அப்போது குழந்தைகளைக் கையோடு அழைத்துச் சென்றுவிடலாம்.

அரசைப் பொறுத்தவரை மாணவர்களின் நலனுக்காகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வகுப்புகளுக்குக் கட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, உலக சுகாதார நிறுவனம் அதுகுறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *