செய்திகள்

நள்ளிரவில் சைக்கிளில் ரோந்து சென்ற பெண் போலீஸ் இணை கமிஷனருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மார்ச்.26-

பெண் போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதிக்கு முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

வடசென்னை போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வரும் ரம்யா பாரதி. இரவு நேரத்தில் வட சென்னையில் போலீசின் இரவு நேர ரோந்துக்களம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்வையிட ரம்யா பாரதி விரும்பினார்.

போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் அதிகாலை 2.45 மணிக்கு சைக்கிளில் வடசென்னையில் ரோந்து பணியை அவர் தொடங்கினார். கிட்டத்தட்ட 1½ மணி நேரம், 9 கிலோ மீட்டர் தூரம் ரம்யா பாரதி சைக்கிள் ரோந்து பணி சென்றார்.

கோட்டை போலீஸ் எல்லையில், வாலாஜா பாயிண்ட், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, எஸ்பிளனேடு போலீஸ் நிலைய எல்லையில், ராஜாஅண்ணாமலை மன்றம் சந்திப்பு, குறளகம் சந்திப்பு, பூக்கடை போலீஸ் எல்லைக்குள் என்.எஸ்.சி.போஸ் சாலை வழியாக சைக்கிள் சென்றது. அடுத்து யானைக்கவுனி போலீஸ் எல்லைக்குள் நுழைந்து, ஆர்.கே.நகர், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைகளில் எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக சென்று, இறுதியாக தண்டையார்பேட்டை போலீஸ் எல்லைக்குள் நுழைந்தது. அதிகாலை 4 மணியளவில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனது சைக்கிள் ரோந்து பணியை முடித்தார்.

வழியில் ஆர்.கே.நகர், தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். வழி நெடுக போலீசார் ரோந்து வாகனங்களில் தூங்குகிறார்களா, அல்லது விழிப்போடு பணியாற்றுகிறார்களா, என்பதையும் பார்வையிட்டார். சென்ற இடங்களில் எல்லாம் போலீசார் விழிப்போடு பணியாற்றியபடி இருந்ததை கண்டார். ரம்யா பாரதியின் இந்த பணிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்தநிலையில் ரம்யா பாரதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரம்யா பாரதிக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை குறைக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி.க்கு ஆணையிட்டுள்ளேன்.

தமிழ்நாடு காவல்துறை சட்டம்–ஒழுங்கை நிலை நிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.