போஸ்டர் செய்தி

நளினியின் பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

Spread the love

சென்னை, செப். 12–

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இவர்களுடைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்ய 6 மாதம் பரோல் கேட்டு நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். நளினிக்கு, ஒரு மாதம் பரோல் வழங்கி ஜூலை 5-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த அவருக்கு, மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நளினி சத்துவாச்சாரியில் தங்கி தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.இந்நிலையில், அக்டோபர் 15 வரை பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் சென்னை வந்து விடுவார் என்பதாலும் பரோலை அக்டோபர் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமாக அனுப்பிய கோரிக்கை மனுவை அரசு நிராகரித்து விட்டதாகவும் நளினி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதிலளிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் எனவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருகின்றனர் எனக் கூறி, பரோல் நீட்டிப்பு வழங்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

முதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போதும் நீட்டிப்பு வழங்க கோருகிறார். சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என, பரோல் நீட்டிப்பு வழங்க நீதிபதிகள் மறுத்தனர்.

இதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நளினியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால் வரும் 15-ம் தேதி மாலை 6 மணியுடன் அவரது பரோல் முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *