செய்திகள்

‘‘நல்ல ஸ்கிரிப்ட்டோட வாங்கோ; நாடகத்தில் நடிக்க நான் ரெடி:’’ 88 வயது சவுகார் ஜானகி அறிவிப்பு

சென்னை, ஆக. 11–

‘‘எனக்கு இப்போது 88 வயது ஆகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் போனால் 90 வயசைத் தொட்டு விடுவேன். எனக்கு உடம்பில் தெம்பும் இருக்கிறது; நல்ல நினைவாற்றலும் இருக்கிறது. சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்றாலும் நாடகத்தில் மீண்டும் நடிக்க அழைப்பு விடுத்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்’’ என்று பிரபல நடிகை சௌகார் ஜானகி மகிழ்ச்சியோடு அறிவித்தார்.

‘சினிமாவுக்கு தாய்வீடு நாடக மேடைதான். இன்றைக்கு மியூசிக் அகாடமியின் பொன்விழாவில் சாதனையாளர்கள் விருது பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கையால் வாங்குகிறேன். இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. 3–வது விருதை சங்கிலித் தொடராக அவர் கையாலேயே வாங்கி இருக்கிறேன்’’ என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில், மயிலாப்பூர் அகாடமியின் பொன் விழா கொண்டாட்டத்தை ஒட்டி சினிமாவிலும், நாடக மேடையிலும் சாதனை படைத்திருக்கும் கலைஞர்களுக்கு விருது அளிப்பு விழா, கடந்த ஆண்டு மேடை ஏறியதில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், நாடகம்– விருதளிப்பு விழா மிகச் சிறப்பாக நடந்தது.

இதில் சவுகார் ஜானகி தன் ஏற்புரையில் கூறியதாவது:

‘‘1960–70 காலகட்டம். அப்போது கே பாலச்சந்தர், நாடகங்களில் பிரபலமாகி இருந்தார். நான் எம்ஜிஆர், சிவாஜி ஜெமினி என்று முன்னணி நாயகர்களுடன் நடித்து கொண்டு இருந்த நேரம்.

ஒரு நாள் மேஜர் சுந்தர்ராஜன் நீங்கள் நாடகத்தில் நடிக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டார்; நானும் என்று சம்மதம் சொல்லி விட்டேன். இதை மேஜர், பாலசந்தரிடம் சொல்லி இருக்கிறார். அவர் அதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

‘‘நிஜமாகவா…’’ என்று கேட்டு பாலச்சந்தர் என்னை முதலில் மேடையேற்றிய நாடகம் மெழுகுவர்த்தி எதிர்நீச்சல், நீர்க்குமிழி அடுத்தடுத்து என்று நாடகங்களை மேடை ஏற்றினார். எதிர்நீச்சல் நாடகத்தில் நான் போட்ட பட்டு மாமி கேரக்டர் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேச வைத்தது. அதையே திரைப்படமாக எடுத்தபோது ஸ்ரீகாந்துடன் நான் ஆடிப்பாடும் ‘‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா’’ என்ற பாட்டு கலக்கு கலக்கியது. என்னை புகழின் உச்சிக்கு கொண்டுபோய் சேர்த்தது. அதை விரும்பிக் கேட்காத ரசிகர்களே இருக்க முடியாது.

இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறேன். இப்பவும் நல்ல ஸ்கிரிப்ட்டுடன் யாராவது இருந்தால் வாருங்கள். நான் மேடையில் நடிக்க தயாராக இருக்கிறேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

தன் மூத்த மகள் யக்ஞ பிரபாவுடன் வந்திருந்த சவுகார்ஜானகி, தன்னுடைய பேத்தி வைஷ்ணவியையும் அவருடைய மகள் அதாவது தன்னுடைய கொள்ளுப்பேத்தியையும் மேடையில் அறிமுகப்படுத்தி ஆனந்தப்பட்டார்.

‘‘வைஷ்ணவி நல்ல நடிகை. சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் நடித்து இருக்கிறாள். நாடகங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்து விருது வாங்கியிருக்கிறார். குடும்பப் பொறுப்பு காரணமாக சமீபகாலமாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர், மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆகவே அவளுக்கும் பொருத்தமான நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் கூப்பிடுங்கள் அவளும் மேடையில் நடிப்பார்’’ என்று வைஷ்ணவி தரப்பிலும் உறுதி மொழியை மேடை ஏற்றினார் சவுகார் ஜானகி.

நாடக மேடையில் 40 ஆண்டு காலமாய் வெற்றி நடை போட்டு வரும் டைரக்டர் விசு, வெண்ணிறஆடை’’ நாயகன் ஸ்ரீகாந்த், டிடி சுந்தர்ராஜன், சிவாஜி சதுர்வேதி, காத்தாடி ராமமூர்த்தி, ஏ.ஆர்.சீனிவாசன் (ஏ.ஆர்.எஸ்.) ஆகியோருக்கும் சாதனையாளர் விருதுகளை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார். அமைசச்சர் பாண்டியராஜன், நீதிபதி ஜெகதீசன் (அகாடமி தலைவர்) எம்.எல்.ஏ. நடராஜ் (முன்னாள் டிஜிபி), தொழிலதிபர் நல்லி குப்புசாமி, வைத்யநாதன் (தலைவர்), டிடி சதாசிவம், கே.ஜே.சூரியநாராயணன் (கவுரவ செயலாளர்கள்) ஆகியோர் பங்கேற்றார்கள்.

பெண்கள் நடத்தும் நாடகக்குழுவுக்கான விருதுகளை நடிகை சச்சு, பாம்பே ஞானம், பிரேமா சதாசிவம், தாரிணி கோமல், பாத்திமா பாபு ஆகியோர் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *