சிறுகதை

நல்ல விசயத்தை செய்யவே விடமாட்டாங்க

கோயிலின் வாசலில் இருந்தது ஒரு பழைய பீரோ.
அதில் எட்டு மர அடுக்குகள் இருந்தன. ஒன்று உணவுக்கானது. இன்னொன்று உடைக்கானது. மற்றொன்று சிறு குழந்தைகளுக்கான பொருட்கள் வைக்கும் இடமென அந்த பீரோ அலமாரி முழுவதும் அன்பால் நிறைந்த வழிந்தது. ஒருவர் அந்த பீரோவில் உள்ள ஒரு அடுக்கிலிருந்து, தனக்கு தேவையான உணவினை எடுத்துக் கொண்டு வெளியேறினார் . அவரை தொடர்ந்து ஒரு பெண்ணும் தனக்கு தேவையான உணவினை எடுத்துக் கொண்டிருந்தாள். அவர்கள் எடுக்கும் உணவைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியை அந்த பெண் ஒரு மாதிரியாக பார்த்தாள்.
என்ன…. சாப்பாடு வேணுமா? என்றபோது,
“ஆமா” என்று தலையாட்டியது அந்த குழந்தை.
தனக்கு தேவையான பொருட்களை எடுத்த பெண் அந்த குழந்தைக்கும் கொஞ்சம் உணவை எடுத்து கொடுத்தாள். அதைக் கைகளில் வாங்கிய அந்தக் குழந்தையின் முகம் பளிச்சென மின்னியது.
“இங்க, இருக்கிற இந்த பீரோவுல. அன்பு நெறஞ்சு வழியுதுங்க. யார் யாருன்னு தெரியாத ஆளுகளெல்லாம் மனுசங்களுக்கு தேவையாதை இங்க கொண்டு வந்து வச்சுட்டு போறாங்க.
இதனால எவ்வளவு பேரோட வயிறும் மனசும் நெறையுதுன்னு தெரியுமா? அவங்க நல்லா இருக்கலாம் என்ற படியே மக்கள் முகம் தெரியாத மக்களை புகழ்ந்து பேசினர்.
ஒரு பெரியவர் தனக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
இங்க இருக்கிற கோயில் செய்யாத விசயத்த, இந்த பீரோ செய்யுதுங்க.
கோயிலுக்குள்ள போனாக்கூட காசு பணம் குடுத்திட்டு தான் உள்ள போகனும். ஆனா இந்த பீரோ அப்பிடியில்ல. நிறைய மனுசங்களுக்கு நல்லது பண்ணுது.
உண்மையிலயே இது பெரிய விசயமுங்க என்ற சிலர் அந்த பீரோவைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றனர்.
ஒரு பெண் தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவுப்பொருட்களை வைத்தாள். ஒருவர் துணிமணிகளை வைத்தார். அந்த இடமே உறவின் நிறைவுப் பாலாமாக நிறைந்து இருந்தது. கோயில் வாசலுக்குள் நுழைபவர்களை விட மக்கள் இந்த பீரோவுக்கு தரும் மரியாதையும் மதிப்பும் அதிகமாக இருந்தது.
இதனால் கோயிலில் கூட்டம் குறைந்தது பீரோவுக்கு கூட்டம் கூடியது.
வரவர இந்த பீரோவே நமக்கு கோயிலா போகும் போல. மக்கள் எல்லாம் பீரோவையை பெருசா நினைக்கிறாங்களே.
“ஆம, கோயிலுக்குள்ள போனா மனசு மட்டும் தான நிம்மதியடையுது. ஆனா இந்த பீரோ அப்படியில்ல மனுசங்களோட நல்ல குணத்த பிரதிபலிக்குது. எனக்கு தெரிஞ்சு இந்த கோயில விட இந்த பீரோ தாங்க பெருசு என்று பேசிக்கொண்டனர் மக்கள். நாட்கள் நகர்ந்தன.
மக்களுக்கு பெரிய பணிகளைச் செய்தது அந்த பீரோ.
பீரோவுக்கு சந்தனம், குங்குமம், பூ, மாலை எனப் போட்டு பூஜிக்க ஆரம்பித்தனர் அந்த ஊரில் உள்ளவர்கள்.
ஏன் அதையும் தாண்டி பீரோவின் பெருமை கூடியது.
பொருள் வைப்பவர்களும் பொருள் எடுப்பவர்களுமென பீரோவைப் பற்றிப் புகழ்ந்தனர்.
இப்படிப் போய்க் கொண்டிருக்கையில் திடீரென ஒரு காலை அந்த ஊர் மக்கள் எல்லாம் பீரோ இருக்கும் இடத்தில் நின்று கொண்டு வருத்தப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். இது தப்புங்க பீரோவ யார் எடுத்தது? இது ரொம்ப மோசமான செயல் ஆமா!.
இத நாம போயி கேக்க முடியாது. இதென்ன நம்ம இடமா என்ன? மனுசங்களே இப்படிதாங்க. ஒரு நல்ல விசயத்தை செய்யவே விடமாட்டாங்க.
வேற ஏதாவது ஒண்ணுன்னா கூட கேட்டுரலாம் இப்படியா? என்று பீரோ இருந்த இடத்திலிருந்து பேசிக் கொண்டனர் மக்கள்.
ஒரு குழந்தை, பசியோடு பீரோ இருக்கும் இடத்தில் நின்று அழுது கொண்டிருந்தது. மனநிலை சரியில்லாத ஒருஆளும் பசியால் அங்கு நின்று கொண்டிருந்தார்.
ஒரு பெண் தன் கையில் உணவு பொட்டலத்துடன் வந்து நின்றாள். பீரோ இருந்திருந்தாலாவது இங்க ரெண்டு நல்லது நடக்கும். ஆனா ஆனா என்று இழுத்தார் ஒருவர்.
இது அத்தனையும் பார்த்தபடியே இருந்தது பீரோ இடத்தில் இருந்த புதிய கடவுள் சிலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *