சிறுகதை

நல்ல மனம் வாழும்! – ஃபாத்திமா

மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை சலீம்பாய்க்கு. விடிந்ததும் அலமாரியைத் திறந்தார். பணக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தனது தோள்பையில் அடுக்கினார்.

காஃபி எடுத்துக் கொண்டுவந்த மனைவி சபீரா,”மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பணம். கொரோனா வைரஸ் பிரச்சினையால் ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தைத் தள்ளி வச்சிருக்கோம். பேங்கும் அடைச்சிருக்கு. இப்போ ஏன் அலமாரியில இருக்குற பணத்தை பையில வைக்கிறீங்க?” சற்று உரக்கவே கேட்டார்.

காஃபியை வாங்கிய சலீம்பாய்,”சபீ, நாளையிலிருந்து எல்லாக் கடைகளையும் அடைச்சிரணுமாம். நம்ம கடையை சுற்றிலும் வண்டியில் காய், பழம் விக்கிறவங்க, நடைபாதை வியாபாரிங்க, கூடையில் கீரை விக்கிற பொம்பளப் பிள்ளைகள், செருப்புத் தக்கிற வயசானவங்க, கூலித் தொழிலாளிங்க அப்படினு நெறைய பேர் இருக்காங்க. இவங்கள்லாம் தினம் வேலை செஞ்சு அந்த வருமானத்த வச்சுதான் சாப்பாடு, வீட்டு வாடகை மத்த செலவெல்லாம் செய்வாங்க. முன்னறிவிப்பு ஏதுமில்லாம கொரோனா தொற்று வரக்கூடாதுனு கடையை மூட சொல்லிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கணும்னா என்ன செய்வாங்க? கைக் குழந்தைகளோட நெறைய தாய்மார்கள் கெழங்கு, மீன் எல்லாம் விக்கிறத பாத்துருக்கேன். இதையெல்லாம் நெனச்சு ராத்திரி தூக்கமேயில்லை. அவங்களுக்கு நம்மால முடிஞ்சத செய்யணும். சாப்பாட்டுக்குத் தேவைப்பட்ற சாமான்களை மட்டும் இந்தப் பணத்துல வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்றேன். மக கல்யாணத்துக்கு நிச்சயம் ஏதாவது ஒரு வழி பிறக்கும்” காஃபி கிளாசை சபீராவிடம் கொடுத்துவிட்டு சாமான்கள் வாங்கப் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

பதிலேதும் சொல்லமுடியாமல் வாயடைத்துப் போய் நின்ற சபீராவின் மனதிற்குள் மகளின் கல்யாணத்துக்கு பணம் வேணுமே. என்ன செய்யப் போறோம் எப்படி நடத்தப்போறோம்,மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொல்லப் போறாங்களோ இப்படி அடுக்கடுக்கான கேள்விகள், கவலைகள். ஒன்றுமே செய்யப் பிடிக்காமல் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்.

செல்போன் சத்தம் கேட்டு மெதுவா எழுந்துபோய் எடுத்தால் அதில் மாப்பிள்ளையின் அம்மா பெயரைப் பார்த்ததும் மயக்கமே வந்துவிட்டது சபீராவுக்கு. பேசாமலிருந்தால் நல்லாயிருக்காதே, ஆண்டவா இதென்ன சோதனை? ஆன் செய்து காதில் வைத்தவுடன், “சபீரா ஒரு முக்கியமான சேதி, கல்யாணத்துக்கு நீங்க ஒரு செலவும் செய்ய வேணாம். எல்லாம் நாங்க பாத்துக்கறோம். பொண்ணுக்கு நகைகள், துணிமணி உள்பட எல்லாமே எங்க பொறுப்புதான். கொரோனா தொற்று சீக்கிரமா போகட்டும். ரொம்ப சிம்பிளா கல்யாணத்த நடத்திருவோம். நம்ம வழிப்படி மாப்பிள்ளை வீட்டில இருந்துதான் எல்லாமே செய்யணும். அதுதான் சிறப்பு. வேறென்ன சேதி?”என்றவரிடம், நல்ல சேதிய நீங்கதான் சொல்லியிருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். அவங்க வந்தவுடனே சொல்லிட்றேன். செல்போனை வைத்துவிட்டு கணவரின் வருகைக்காக காத்திருந்தார் சபீரா.

இவ்வளவு சீக்கிரம் மகள் கல்யாணத்துக்கு நல்ல வழி காண்பித்த இறைவனுக்கு நன்றிகள் கூறிக் கொண்டு கொரோனா வைரஸ் விலகிட பிரார்த்தித்துக் கொண்டு நல்ல மனம் என்றென்றும் நன்றாகவே வாழும் என்ற உண்மையையும் கணவர் உருவத்தில் உணர்ந்தார். கவலைகள் விலகி மனதில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது சபீராவுக்கு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *