சிறுகதை

நல்ல மனம் : கரூர் அ.செல்வராஜ்


அலுவலக வேலையை முடித்துக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தாள் ஜெயந்தி. வழக்கமான நேரத்துக்கு வரவேண்டிய பஸ் வராததால் பொறுமையாய்க் காத்திருந்தாள். அப்போது முகக்கவசம் அணிந்த அழகான பெண் ஒருத்தி ஜெயந்தியின் முன் வந்து நின்றாள்.

முகக்கவசத்தை சரி செய்து கொண்டு ‘‘மேடம், நீங்க ஜெயந்தி தானே’’ என்று கேட்டாள் .

‘ஆமாம், நீங்க யாரு?’ என்று கேட்டாள் ஜெயந்தி.

ஆள் அடையாளம் தெரியாமல் கேள்வி கேட்ட ஜெயந்தியை முகக்கவசம் அணிந்திருந்த பெண் முகக்கவசத்தைத் தாடைப் பகுதிக்கு இறக்கி விட்ட பின்பு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

‘ஜெயந்தி மேடம், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியலியா? என் பேரு இனியா. அடுத்த தெருவிலே இருக்கிற அப்பார்ட்மெண்டலதான் குடியிருக்கிறேன். நீங்க எனக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கிறீங்களா? நானும் உங்க தங்கச்சி லதாவும் ஒரே ஸ்கூல்லே தான் படிச்சோம். அப்புறம் என்ஜினீயரிங் படிப்பிலே தனித்தனியாப் பிரிஞ்சுட்டோம். அந்தக் கதை ஒரு பக்கம் ஓரமா மனசிலே இருக்கட்டும். இப்ப நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நீங்க போக வேண்டிய பஸ் பிரேக்டவுன் ஆயிருச்சுன்னு கேள்விப்பட்டேன். நீங்க என்னோடு வாங்க கார்லே கொண்டு போயி வீட்டுலே விடறேன்’ என்றாள் இனியா.

இனியாவின் பேச்சைக் கேட்ட ஜெயந்தி இனியாவிடம் ‘இனியா! உனக்கு எதுக்கு சிரமம்? பஸ் லேட்டா வந்தாலும் பரவாயில்ல. நான் பஸ்ஸிலேயே வீட்டுக்கு வர்றேன்; நீ கிளம்பும்மா’ என்றாள் ஜெயந்தி.

ஜெயந்தியின் பிடிவாதமான பதிலைக் கேட்டு மனம் வருந்திய இனியா மீண்டும் ஜெயந்தியிடம் பேசத் தொடங்கினாள்.

‘ஜெயந்தி மேடம்! பிடிவாதம் பிடிக்காதீங்க. நன்றி மறப்பது நல்லதல்லன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீங்க எனக்கு சரியான நேரத்திலே பல உதவிகள் செஞ்சிருக்கீங்க. அதை எல்லாம் ஒரு வேளை நீங்க மறந்திருக்கலாம், ஆனா நான் மறக்கலே. நீங்க செஞ்சது பெரிய உதவி. நான் செய்ய நினைக்கிறது ரொம்ப ரொம்பச் சின்ன உதவி. அதைக் கூட செய்ய விடமாட்டீங்களா?’ என்று கேட்டாள் இனியா.

இனியாவின் இரக்க மனதை அறிந்துகொண்ட ஜெயந்தி, இனியாவிடம் ‘இனியா! நான் அப்படி என்ன பெரிய உதவி செஞ்சேன்?’ என்று கேள்வி கேட்டாள். அதற்கு இனியா பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

‘ஜெயந்தி மேடம்! நான் என்ஜினீயரிங் படிப்பு முதல் வருஷம் படிக்க 10 ஆயிரத்தை வட்டியில்லாத கடனாகக் கொடுத்தீங்க. ஸ்கூட்டியிலே போனபோது நடந்த விபத்துலே எனக்கு ரத்த தானம் செய்யறவங்க மூலமா ரத்தம் வாங்கித் தந்தீங்க. இந்தப் பெரிய பெரிய உதவிகளை எல்லாம் என்னாலே எப்படி மறக்க முடியும்? நான் இன்னிக்கு வேலையிலே இருக்கேன், வசதியா இருக்கேன், அதுக்கெல்லாம் உங்க நல்ல மனசு தான் காரணம். இனிமேலும் பிடிவாதம் பிடிக்காமே என்னோடு வாங்க. கார்லே வீட்டுக்குப் போகலாம்’ என்று ஜெயந்தியின் வலது கையைப் பிடித்தாள் இனியா.

இனியாவின் பேச்சைத் தட்ட முடியாத ஜெயந்தி மனமகிழ்ச்சியோடு இனியாவைப் பின் தொடர்ந்தாள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *