நண்பர் வீட்டு விழாவிற்கு சென்று இருந்தான் விஜய். அங்கு விருந்து உபசாரம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. வருவோர் போவோர் எல்லாம் சாப்பாடு பற்றியும் சமைத்ததை பற்றியும் அதன் ருசி பற்றியும் பேசிக்கொண்டு சென்றார்கள். விஜய், நண்பர்கள் சாப்பிடுவதற்கு ஆயத்தமானார்கள்.
அதற்கு முன்பாக மேற்படி மேற்படி என்று அவர்கள் வேறுவிதமான விஷயங்களில் இறங்கி ஒருவிதமான சந்தோசத்தோடு சாப்பிடச் சென்றார்கள். அதற்கு முன் சாப்பிட்டவர்கள் விஜய் நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அவர்கள் எழுந்து போனார்கள் அந்த விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் சந்தோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க சாப்பிட்டு விட்டுப் போனார்கள்.
விஜய், நண்பர்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு சென்றார்கள்.
என்ன விஜய் அந்த சேர்ல உட்காராதீங்க. நல்லா உட்காருங்க. எடுத்துட்டு வா தம்பி. தண்ணி கொண்டு வாங்க என்ற இந்த நண்பர்கள் கட்டளையிடப் பணி செய்பவர்கள் இலை, தண்ணீரை கொண்டு வந்தார்கள்.
இன்னைக்கு நல்ல சாப்பிடணும் சூப்பரா சமைத்து இருக்காங்க போல. ஒரு பிடி பிடிக்கலாம் என்று நண்பர்கள் பேசிக்கொண்டே சாப்பிட ஆயத்தமாக விஜய்க்கும் இலை போடப்பட்டது. தண்ணீர் வைக்கப்பட்டது. விஜய் இலையில் தண்ணீர் தெளித்து சாப்பிட ஆயத்தமானான்.
நண்பர்களும் இலையில் தண்ணீரைத் தெளித்து சாப்பிட ஆயத்தமானார்கள். முதலில் விஜய்யை விட்டு விட்டு நண்பர்களுக்கு சாப்பாடு பரிமாறப்பட்டது. வகைவகையான அசைவ உணவுகள் போடப்பட்டன.
நண்பர்கள் நன்றாக சாப்பிட ஆரம்பித்தார்கள். அசைவ உணவு வகைகளை உச்சுக் கொட்டி எப்படி பேசி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
விஜய் தன்னுடைய இலையில் இருந்த சாப்பாட்டை பிசைந்தபடியே சாப்பிடாமல் இருந்தான்.
இதை கவனித்த நண்பர்கள் ஏன் விஜய் என்னாச்சு? ஏன் சாப்பிடல சாப்பிடு என்று சொல்ல விஜய் அதற்கு பதில் சொல்லாமல் கண்ணீர் மட்டுமே சிந்தினான்.
என்ன ஏன் அழுகிற ? என்ன ஆச்சு? என்று நண்பர்கள் கேட்டனர்.
என்னால இதை சாப்பிட முடியல என்று பதில் சொன்னான் விஜய்
ஏன்? என்று உடன் இருந்த நண்பர்கள் கேட்க,
இல்ல நான் இங்க வந்து உங்க கூட சேர்ந்து நல்ல சாப்பாடு அசைவம் சாப்பிடலாம். நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவன் எங்க வீட்டில இந்த மாதிரி உணவுகள் எல்லாம் வழியில்லை. இப்போ நான் இந்த உயர்தர உணவு சாப்பிட்டு விட்டுப் போனா, வீட்ல இருக்கிற என்னோட அப்பா, அம்மா என் கூட பிறந்தவங்க இதைவிட குறைவான உணவு தான் சாப்பிடுவாங்க. அத நெனச்சேன் அதனால தான் என்னால சாப்பிட முடியல.
ஸாரி என்ன மன்னிச்சிடுங்க. நான் மட்டும் இந்த உணவை சாப்பிட்டுப் போயி, அவங்கள பார்க்கிறது எனக்கு ஒரு மாதிரியான வெட்க உணர்வு வரும். வீட்டுக்குப்போய் அவங்க கூட எங்க வீட்டு உணவை சாப்பிட்டுகிறேன். தயவுசெஞ்சு என்ன படுத்தாதீங்க என்று விஜய் அந்த உயர்தர உணவை சாப்பிடாமல் எழுந்து போனான்.
இதை பார்த்த நண்பர்களுக்கு என்னவோ போல் ஆனது.