சிறுகதை

நல்ல உள்ளங்கள் – மு.வெ.சம்பத்

தினரீசன், பால சுந்தரம் இருவரும் ஒரே நிறுவனத்தில் ஒரே துறையில் பணி புரிபவர்கள்.

தினரீசன் தனக்கு கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து விடுவான். பால சுந்தரம் பணியில் தினரீசனை விட ஒரு படி மேலே செய்து தனது புத்திசாலித்தினால் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து வைத்திருந்தான். சில வேலைகள் பால சுந்தரம் செய்வதை தினரீசன் தடுத்து நிறுத்தி விடுவான். அவ்வாறு அவன் செய்யவில்லையெனில் பால சுந்தரம் மோசமான வலையில் சிக்கியிருப்பான். இவர்களது மனைவிமார்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.

ஒரே காம்பவுண்டில் இருவரும் வீடு வாங்கி சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர். தினரீசன் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் வேறு துறைக்கு மாற்றலானான். பால சுந்தரம் என்ன சொல்லியும் கேட்காமல் அவன் செய்த ஒரு சிறு தவறால் அவனுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. இதற்குப் பிறகு இருவரும் அலுவலகத்தில் சந்திப்பது குறைந்தது.

பால சுந்தரம் வர வர வீட்டிற்கு வருவது நாள்தோறும் இரவு 9.00 மணி ஆனது. அவன் மனைவி ஏதாவது கேட்டால் எரிந்தெரிந்து விழுந்தான். சில நாட்களில் கோபப்பட்டுக் கொண்டு உண்ணாமல் உறங்கினான். ஆக்ரோஷ அலையில் தவிக்கும் படகு போலானது பால சுந்தரம் குடும்பம். பால சுந்தரம் மனைவி இவரது செய்கையை வெளியில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாள். தினரீசன் அலுவலகத்தில் பால சுந்தரத்திடம் பேச சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், பால சுந்தரம் அவனிடம் மேலுக்குப் பேசி விட்டு நகர்ந்து விடுவான். தினரீசனுக்கு அவன் நடவடிக்கையில் உள்ள மாறுபாட்டை உணர்ந்த வேளையில், அங்கு பணிபுரியும் நண்பர்கள் பால சுந்தரம் பற்றி நிறையவே கூறினார்கள். அவர் அடிக்கடி எரிச்சலடைவாதகவும், பதட்டமாக இருப்பதாகவும், யாரிடமோ அடிக்கடி போனில் பேசி விட்டு வருவதாகவும் கூறினார்கள். அன்று எனது கைப்பேசியை வாங்கி அவர் பேசிய நபர் எண் இது தான் என குறித்துக் கொடுத்தனர்.

தினரீசன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். எப்படி இதை முன்னெடுத்தி முடிப்பதென மனதிற்குள் பல திட்டங்கள் தீட்டினான். சில நாட்களாக அலுவலகத்திற்கு பால சுந்தரம் வராததைக் கண்ட தினரீசன் அவன் மனைவியிடம் கேட்கலாமா என்ற யோசனையில் அவன் வீட்டு வாசல் வரை சென்றவன் மனது மாறி காம்பவுண்டை விட்டு வெளியேறினான்.

இன்னும் சில தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தினரீசன் மும்முரமாக இருந்தான். அன்று அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் மானேஜர் பால சுந்தரத்தைப் பற்றிச் சிறு தகவலைக் குறிப்பிட்டார். அதாவது பால சுந்தரம் இனிமேலாவது பணியை சிறப்பாகச் செய்தால் தான் அவருக்கு நல்லது. நான் அவரது பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளேன். ஆனால் அவரது சில நடவடிக்கைகள் தான் முட்டுக் கட்டையாக உள்ளது என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த பால சுந்தரம் எந்த வித ஒரு சலனமில்லாமல் அமர்ந்திருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து தினரீசன் மானேஜரை அலுவலக நேரம் முடிந்ததும் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பால சுந்தரம் பற்றி அவர் கூட்டத்தில் பேசியதில் உள்ள விஷயத்தை கேட்க அவர் தயவு செய்து யாரிடமும் கூறாதீர்கள் என்று மட மடவென வானம் பொத்துக் கொண்டு ஊற்றுவது போல் பல விஷயங்களைக் கூறினார். அவரிடம் விடை பெற்ற தினரீசன் எப்படி அடுத்த நடவடிக்கையைத் தொடங்குவதென யோசிக்கலானான்.

அன்று பால சுந்தரம் வீட்டிற்கு வந்த தினரீசன் அவன் மனைவியிடம் உங்கள் கணவர் வங்கியில் போட்ட ஐந்து லட்சம் ரூபாய் ரசீதைக் கொண்டு வாருங்கள் என்றான். சிறிது நேரம் கழித்து வந்த பால சுந்தரம் மனைவி என்னங்க அந்த ரசீதை பீரோவில் காணுமே என்றதும் பால சுந்தரம் நன்றாகத் தேடிப் பார் என்று சொல்லி விட்டு தினரீசனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். மறுபடியும் பால சுந்தரம் மனைவி சப்தமாக உள்ளே இல்லை எனக் கூற, பால சுந்தரம் காதில் விழுகாத மாதிரி ஏதோ யோசனையில் இருப்பது போன்று நடித்தான்.

சற்றுப் பொறுத்திருந்த தினரீசன் பால சுந்தரம் மனைவியிடம் அந்த ரசீது வீட்டில் இல்லை. அது தற்போது எங்கு உள்ளது என்று எனக்குத் தெரியும் என்றதும் பால சுந்தரம் மனைவி என்ன அண்ணே சொல்லுகிறீர்கள் என்று சொல்ல, தினரீசன் நடந்த எல்லாவற்றையும் கூறினான்.

நான், காவல் துறையில் பணி புரியும் எனது மாமா மற்றும் எங்களது அலுவலக மானேஜர் மூவரும் பங்கு வர்த்தகம் செய்யும் ஒரு நபரைச் சந்தித்தோம். அவரிடம் இவன் அந்த ரசீதைக் குடுத்து ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு பங்குகள் வாங்கியுள்ளான். அதன் தற்போதைய மதிப்பு ரூபாய் ஒன்றே கால் லட்சம் தான். இவனுக்கு பங்கு சந்தை பற்றி ஏதாவது தெரியுமா? ஒரு கம்பெனியின் பங்கு வாங்குவதற்கு முன் அதைப் பற்றி நன்கு அறிய வேண்டும். அது எத்தனை வருடமாக இருக்கிறது. அதன் லாப நஷ்டக் கணக்கைப் பற்றி அறிய வேண்டும். அந்தக் கம்பெனிக்கு நிறைய ஆர்டர்கள் இருக்கிறதா, அவர்கள் ஆர்டர்களை சரியாக அனுப்புகிறார்களா, வரி முறையாக செலுத்துகிறார்களா, வர வேண்டிய நிலுவைத் தொகை கட்டுக்குள் இருக்கிறதா, பங்கு ஈட்டியிருக்கும் மதிப்பு, பங்குதாரர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கிறதா, அந்த கம்பெனியின் இருப்புகள், மொத்த எத்தனை பங்குகள் விற்று வாங்கப்படுகின்றன போன்ற அடிப்படை விஷயங்கள் இவனுக்குத் தெரிந்திருக்குமா, கேளுங்கள் என்றான். எங்களது போட்டிக் கம்பெனி ஒருவருடன் இவன் தொடர்பு வைத்துள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது என்றான். விக்கித்து நின்ற பால சுந்தரம் ஏதும் பேச முடியாமல் அவனது மனைவியை நோக்க, அவன் மனைவி அண்ணா இதிலிருந்து எப்படி மீள்வது எனக் கேட்க தினரீசன் நாங்கள் தற்போதுள்ள விலையில் பங்குகளை விற்கச் சொல்லி விட்டோம். எப்படியும் ரூபாய் அறுபதாயிரம் நஷ்டம் வருமென்றான்.

பால சுந்தரம் மனைவி என்ன செய்வது எப்படியாவது இக்கட்டிலிருந்து வெளியே வந்தால் சரியென்றாள்.

அப்போது வீட்டிற்கு நுழைந்த மானேஜரிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்ட பால சுந்தரம், போட்டி கம்பெனி பாலு தான் என்னை பங்கு மார்க்கெட்டில் இழுத்து விட்டான். நான் அவனிடம் நமது கம்பெனி விஷயம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

இது சத்தியம் என்றான் உடைந்த குரலில்.

மானேஜர் சரி இனிமேல் அலுவலகப் பணியை சிறப்பாகச் செய்யுங்கள். உங்கள் நண்பன் தினரீசனுக்குத் தான் நீங்கள் நன்றி சொல்லணும். அவர் தான் உங்களுக்காக இவ்வளவு சிரமப்பட்டார் என்றதும்

பாலசுந்தரம் மற்றும் அவன் மனைவி கோரஸாக உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் நாங்கள் காப்பற்றப் பட்டோம் என்றனர்.

, மானேஜர் பால சுந்தரிடம் பிடியுங்கள் உங்கள் பதவியுவர்வு ஆர்டர் என்றதும், அங்கு ஏற்பட்ட மகிழ்ச்சி அலைகளுடன் பால சுந்தரம் மற்றும் அவன் மனைவி கண்ணீர் அலைகளும் சேர்ந்து கொண்டன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *