சிறுகதை

நல்லா இருக்கீங்களா? | ராஜா செல்லமுத்து

சொந்த பந்தங்கேளே என்ன ஏது என்று கேட்காமல் இருக்கும் இந்தக் கலிகாலத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று “நீங்க எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா, உடம்பு எப்படி இருக்கு, இப்ப தேவலை தானே அம்மா நீங்க எப்படி இருக்கீங்க, சார் உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு என்று ஒவ்வொரு வீட்டின் காலிங்பெல்லை தட்டிக்கொண்டே நலம் விசாரித்து வருவாள் ஜெயலட்சுமி. கொரோனா காரணமாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஊழியர் அவள்.

தோளில் ஒரு பை. இடதுபக்கம் தொங்கும் அந்த பையில் தெர்மல் ஸ்கேனர் கருவி இருக்கும் . கழுத்தில் தன் பெயர் தாங்கிய ஐடி கார்டு’ கபசுரக் குடிநீர் பொடி, விட்டமின் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் என்று அத்தனையும் சுமந்து கொண்டு கையில் டெமி சைஸ் நோட்டையும் விரலுக்கு இடையில் பால்பாயிண்ட் பேனாவை வைத்துக் கொண்டு முகத்தில் முக கவசம் அணிந்து கொண்டு கைகளில் உறை மாட்டிக்கொண்டு விபி அகிலன் தெருவில் நடந்து வருவாள் விஜயலட்சுமி.

நீங்க எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு எப்படி இருக்கு? நல்லா இருக்கா? என்று கேட்கும் ஜெயலட்சுமியை சிலர் உதாசீனப்படுத்துவது உண்டு.

சில வீடுகளில் காலிங்பெல்லை அடித்துக் கொண்டு நிற்கும் ஜெயலட்சுமியை சிலர் அலட்சியமாக பார்ப்பதுண்டு. அம்மா வீட்ல யார் இருக்கீங்களா? சார் யாராவது இருக்கீங்களா? மேடம்.. சார்… என்று திறக்கப்படாத வீட்டின் முன்னால் நின்றுகொண்டு ஜெயலட்சுமி கத்திக் கொண்டிருப்பாள்.

இந்த பொண்ணுக்கு வேற வேலையே இல்ல. எப்ப பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா? உடம்பு எப்படி இருக்குது? அப்படின்னு தினமும் வந்து உசுரு எடுத்துக்கிட்டு இருக்கு. நேத்து தானே கேட்டு விட்டு போச்சு. அதுக்குள்ள நமக்கு எது ஆயிடுமா என்ன ? என்னமோ சோறு போட்டு நம்மள காப்பாத்திற பொண்ணு மாதிரி தினமும் வீட்டுக்கு வந்து முன்னாடி நின்னு ,

‘‘நீங்க நல்லா இருக்கீங்களா? நீங்க நல்லா இருக்கீங்களா? உங்கள் உடம்பு எப்படி இருக்கு’’து அப்படின்னு உசுர வாங்கி கிட்டு இருக்கு என்று சில பேர் ஏளனம் பேசுவார்கள்.

சிலர் ஜெயலட்சுமியை கிண்டல் செய்வார்கள் .

இது அத்தனையும் பொருட்படுத்தாமல் ஜெயலட்சுமி ஒவ்வொரு வீடாக சென்று நலம் விசாரித்துக் கொண்டு இருப்பாள்.

‘‘சார், மேடம் ’’என்று திறக்காத வீட்டின் முன்பு சில மணித் துளிகள் அவள் கத்தாமல் போவதே இல்லை.

இவள் இப்படி கத்துவதை பார்த்த ஈரமுள்ள ஒருவர்,

‘‘|மேடம் அதான் நீங்க இவ்வளவு கூப்பிடுறீங்க. அது கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணாம திமிரா வீட்டுக்குள்ளே இருக்காங்க பாருங்க . அந்த மாதிரி ஆளுக்கெல்லாம் விடுங்க மேடம் . அந்த வீட்டுக்கு அடுத்த வீட்டுல இருக்குறவங்க நல்லாதான் இருக்காங்கன்னு, ஏதாவது எழுதி விட்டுப் போங்கள் என்று ஒருவர் சொல்ல….

‘‘அப்படி இல்ல சார், இது அவங்கள மட்டுமே சேர்ந்த விஷயமில்லை. இது மொத்த மக்களோட விஷயம். அவர்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா அது அவங்களை மட்டும் பாதிக்காது. அவங்க குடுத்பத்தையும் மத்தவங்களையும் சேர்த்துதான் பாதிக்கும். அதை ஏன் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க . எனக்கு தெரியல நான் வந்து நீங்க நல்லா இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க? உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு ? ன்னு கேட்கிறது சாதாரண விஷயம் இல்லை சார்- ஒரு சின்ன இருமல் காய்ச்சல் சளி இருந்தால் கூட அதனால மத்தவங்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதான் நான் கேட்டுட்டு இருக்கேன்…. சார். இவ்ளோ தூரம் நான் கத்திட்டு இருக்கேன் – ஏதாவது அவங்க கேட்கிறாங்களான்னு பாருங்க. தவறு என்றால் கூட பரவாயில்லை. நான் அவங்ககிட்ட இருந்து இந்த உண்மையான நிலவரத்தை கேட்காமல் போக மாட்டேன் சார் என்று பிடிவாதமாக சொல்வாள் ஜெயலட்சுமி.

‘‘அதான் அவங்களுக்கு நீங்க சொல்றது கேட்கலையே. நாட்டு மேலயும் இந்த மக்கள் மேலயும் அக்கற இருந்துச்சுன்னா எந்திரிச்சு வந்து நீங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி இருப்பாங்க இல்ல. ஆனா அவங்க அப்படி பதில் சொல்லாமல் இருக்கிறது அது அவங்க தப்பு அப்படிங்கிறது உங்களுக்கு தெரியாது . தொண்டைத் தண்ணி வத்த நீங்க கத்திட்டு இருக்கிறீங்க. மூச்சுக் காட்டாமல் வீட்டுக்குள்ளே இருக்காங்க பாருங்க – இவங்க கொரானாவ விட ரொம்ப மோசமானவங்க என்று ஒரு பெரியவர் சொல்ல

‘‘ஆமா சார் நீங்க சொல்றது 100 சதவீத உண்மை அது ஏன் அவங்களுக்கு புரிய மாட்டேங்குதுனு தெரியல. எனக்கு நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டா எனக்கு மனசு திருப்தியா இருக்கும். நானும் எழுதிட்டு போயிடுவேன் சார் என்று ஜெயலட்சுமி சொல்லிக்கொண்டே…

‘‘சார் நீங்க எப்படி இருக்கீங்க? – உங்க உடம்பு நல்லா இருக்குல்ல. உங்களுக்கு ஒன்னும் இல்லையே’’ என்று விசாரிக்க நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கு ஒன்னும் இல்லம்மா ’’என்று அந்த பெரியவர் சொன்னார்.

ஓகே சார் என்று அவரின் நெற்றிக்கு நேரே தெர்மல் ஸ்கேனர் ஐ எடுத்து அவரின் உடம்பு சூடு பார்த்தாள்,

அது 96 என்று காட்டியது.

‘‘ஓகே சார். குட் .நீங்க நல்லா இருக்கீங்க. உங்களுடைய பாடி டெம்பரேச்சர் ரொம்பவே நல்லா இருக்கு’’ என்று ஜெயலட்சுமி அந்த பெரியவரிடம் சொல்ல அந்த பெரியவர் லேசாக புன்னகை சிந்தினார்.

‘‘சார் கொரானா வோட 13 சிம்டம்ஸ் உங்களுக்கு என்னென்ன தெரியுமா? என்று கேள்வியை கேட்டாள் ஜெயலட்சுமி.

தெரியும்மா என்று அந்தப் பெரியவர் சொன்னதும்

‘‘ஓகே சார் தெரிஞ்சாலும் பரவால்ல. என்னோட கடமைக்கு நான் சொல்றதை சொல்றேன்; கேட்டுக்கங்க ’’என்று ஜெயலட்சுமி கொரானா நோயின் அறிகுறிகளை விளக்கியபோது இன்னும் சில ஆட்கள் ஜெயலட்சுமியை சூழ்ந்து கொண்டார்கள்.

காய்ச்சல் இருமல் சளி தொண்டை கரகரப்பு உடம்பு வலி தலைவலி ஏன் இப்ப உடம்பு லேசாக வலி எடுத்தால் கூட அதுவும் கூட அறிகுறிதான். அப்படி என்று 13 சிம்டம்ஸ் ஜெயலட்சுமி விளக்கியபோது கொரானா பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்குக் கூட ஜெயலட்சுமியும் வார்த்தை அவர்களுக்கு நோயை ரொம்பவே புரிய வைத்தது.

‘‘அப்பா என்ன இது இந்த புள்ள சொல்றத பார்த்தா நமக்குள்ளே இருமல் வந்தால் கூட அது கொரானாவாகத் தான் இருக்கும் போல தெரியுது’’ என்று பயந்துபோய் சிலபேர் ஒதுங்கி நின்றார்கள் .

‘‘இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்ததுன்னா என்கிட்ட வாங்க நான் வந்து உங்களுக்கு மாத்திரை மருந்து தாரேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் ’’ என்று மிகவும் அக்கறையோடு சொல்லியே ஜெயலட்சுமி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

‘‘சார், மேடம்’’ என்று அடுத்த வீட்டின் கதவை காலிங் பெல்லை அழுத்திக் கொண்டிருந்தாள்.

மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த வீட்டுக்காரர்களிடம் கீழ் இருந்தவாரே உரத்த குரலில் கூப்பிட்டாள்.

‘‘சார் நல்லா இருக்கீங்களா? எப்படி இருக்கீங்க ?- உடம்பு எப்படி இருக்கு? என்று மிகவும் அக்கறையோடும் பணிவோடும் கேட்டாள் ஜெயலட்சுமி.

மேலே இருந்து மாடியின் மேலே இருந்து ரொம்பவே அசட்டுத்தனமாக

‘‘ நல்லா இருக்கு…. நல்லா இருக்கு’’ என்று பதில் சொன்னார்கள் அந்த மாடி வீட்டுக்காரர்கள்-

‘‘ஓகே சார் ’’என்று தன் நோட்டில் எழுதிய ஜெயலட்சுமி அந்த வீட்டை விட்டு அடுத்து விட்டு நகர்ந்தாள் .

இப்படி ஒவ்வொரு வீடாகச் சென்று அத்தனை பேரையும் நலம் விசாரிப்பதை தினமும் பார்த்துக்கொண்டே இருந்தான் முத்து.

ஒவ்வொரு வீடாக நலம் விசாரித்து வந்த ஜெயலட்சுமியை பார்த்த முத்து வழக்கமாக ஜெயலட்சுமி கேட்கும் வார்த்தையை முந்திக்கொண்டு அவன் கேட்டான்:

‘‘நீங்க எப்படி இருக்கீங்க?’’ என்று ஜெயலட்சுமி இடம் கேட்க அவளுக்கு என்னவோ போலானது.

எல்லாரையும் நல்லா இருக்கீங்களான்னு நாம கேட்போம். ஆனா இவரு ஏன் நம்மள வந்து நல்லா இருக்கீங்களா? என்று கேட்கிறார் என்ற ஜெயலட்சுமி

நான் நல்லா இருக்கேங்க என்று சொன்னாள்.

‘‘ஆமாங்க மத்தவங்கள நல்லா இருக்கீங்களா? ன்னு கேட்கிற நீங்க முதல்ல நீங்க நல்லா இருக்கணும். அதை இறைவனிடம் வேண்டுகிறேன்’’ என்று முத்து சொன்னபோது

‘‘கண்டிப்பா நீங்க நல்லா இருப்பீங்க’’ என்று வேண்டுகிறேன் என்று ஜெயலட்சுமி சொன்னதும்

‘‘ஓகே சார் உங்களுக்கு உடம்பு எப்படி இருக்குது? நல்லா இருக்குதா? என்று முத்துவிடம் கேட்ட ஜெயலட்சுமி சின்ன புன்னகையை அங்கே சிந்திவிட்டு….. -மறுபடியும்….

அடுத்த வீட்டுக்கு ஆயத்தமானாள்.

‘‘-சார் -மேடம் எப்படி இருக்கீங்க? உங்க உடம்பு எப்படி இருக்கு?- நல்லா இருக்கீங்களா ? என்று அவள் கேட்டுக் கொண்டே போகும் சத்தம் முத்துவின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஜெயலட்சுமி அடுத்தடுத்த வீடுகளில் தன்னுடைய கடமையை தவறாது செய்து கொண்டே போய்க் கொண்டிருந்தாள் –

அவளை பின்தொடர்ந்து தென்றல் காற்றும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *