நாடும் நடப்பும்

நல்லாட்சி வழங்க வரும் ஸ்டாலின் : வாழ்த்தி வரவேற்கிறது மக்கள் குரல்

மாற்றமே, நிரந்தரம்! தமிழகம் அதை நன்கு உணர்ந்த மாநிலமாகும்!

இதோ தி.மு.க. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியில் அமர வைக்கப்பட்டுள்ளது.

முன்பு கருணாநிதியை மீண்டும் முதல்வராக பதவியேற்க வைத்தாக வேண்டும் என படு தீவிரமாக உழைத்து அக்கட்சியினர் போராடினர்.

ஆனால் கால ஓட்டத்தில் அது நடைபெறாது போனது! அதை தி.மு.கவினர் மிகுந்த மனவருத்தத்துடனே பார்த்திருப்பார்கள். மாற்றம் தானே நிரந்தரம்…

அந்த வழியில் அக்கட்சி தனது தலைமைக்கு – 14 வயது முதலே அரசியலில் ஈடுபட்டுள்ள கருணாநிதியின் மகன் ஸ்டாலினை தலைவராக்கி தி.மு.க. கட்சியை வழி நடத்தும் பொறுப்பை வழங்கியது.

அவர் தி.மு.கவின் 6 வது முறை வெற்றியை உறுதி செய்து விட்டார்.

எம்.எல்.ஏ., சென்னை மேயர், துணை முதல்வர் என அரசியல்வாதியின் அனைத்து அனுபவ பாடத்தையும் கருணாநிதியின் நிழலாக இருந்து படித்தவர் ஸ்டாலின் , வாரிசு அரசியல் என்ற நிலைப்பாட்டிற்கு அப்பால், தீயில் வார்க்கப்பட்ட தங்கம் என்பது போல் உருவாகிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தற்போது தி.மு.கவை 6 வது முறையாக தமிழகத்தில் வெற்றி பெறச் செய்து ஆட்சியை பிடித்து விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்த பல்வேறு திட்டங்களையும் கோரி வந்த திட்டங்கள், செயல்பாடுகளை எல்லாம் எப்படி தமிழகத்தின் வளர்ச்சிக்கு செயல்படுத்த போகிறார் என்பதை அனைத்துத் தரப்பினரும் மிக உன்னிப்பாக கவனித்துப் பார்க்கப் போகிறார்கள்.

தி.மு.க. ஆட்சியில் அமர இருக்கும் இத்தருணத்தில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் அவர்களுக்கு சாதகமாகவே இருக்கும்! பல சோதனைகளும் இருக்கும்!

தமிழகத்தின் பெருவாரியான மக்கள் உங்களின் தலைமையில் புதுப்புது நன்மைகள் வரும் என்ற எதிர்பார்ப்போடு வாக்களித்து வெற்றி தந்து இருக்கிறார்கள். அது தி.மு.க. கூட்டணியையும் தாண்டி ஸ்டாலின் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும்.

அண்ணா தி.மு.க. ஆட்சியில்….

கடந்த 10 ஆண்டுகளில் பொதுப் பிரச்சனைகளை தமிழகம் சந்தித்த போதெல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்த தி.மு.க. தலைமைக்கு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்த ஆட்சியையே அண்ணா தி.மு.க. வழங்கியதையும் அறிவார்கள்.

மின்சார தட்டுப்பாட்டை சமாளித்தது, தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தது, புயல், மழை சீற்றத்தை சமாளித்தது முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்ட ஆட்சி தலைமைக்கும் கட்சி தலைமைக்கும் ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளித்தது; தற்போது கொரோனா பெரும் தொற்று பரவலையும் சமாளித்து வரும் பாங்கு; அண்ணா தி.மு.கவின் ஆட்சியின் முத்தாய்ப்பு நடவடிக்கைகளாகும்.

அது தமிழக சரித்திரத்தில் ஓர் அத்தியாத்தின் முடிவு! உங்கள் ஆட்சியில் வெளிவர இருக்கும் பல்வேறு புதுப்புது நடவடிக்கைகளின் பயனாக மலர இருக்கும் நல்லாட்சிக்கு புது அத்தியாயம் துவக்கம்!

ஸ்டாலின் மீது நம்பிக்கை

ஸ்டாலின் மேயராக இருந்தபோது கட்டப்பட்ட பாலங்கள் என்று சென்னை வாக்காளர்கள் மனம் விட்டு பேசும்போது குறிப்பிட்டு சுட்டிக்காட்டுவது வாடிக்கை. அதன் பிரதிபலனாக சென்னை உட்பட 6 மாவட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் பரிபூரணமான வெற்றியை எல்லா தொகுதிகளிலும் உங்களுக்கு வழங்கியுள்ளனர்.

இனி சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் நலனை உறுதி செய்யும் பொறுப்பு உங்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இது சவால்கள் நிறைந்த காலக்கட்டம், கொரோனா பெரும் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள், மருத்துவ சேவையில் உள்ள தட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு உடனடி நிவாரணம் செய்திட பணிகளை துவக்கியாக வேண்டும்.

ஆக மனமகிழ்ச்சி தரும் பூரண வெற்றியை ஆனந்தமாய் ரசிக்கக் கூட நேரம் கிடையாது! கோடையிலே உங்கள் வழிகாட்டுதலில் எல்லா துறைகளும் செயல்பட காத்துக் கொண்டிருக்கிறது.

கல்வித்துறை, சுகாதாரத்துறை சமுாயத்தின் அதிமுக்கிய அம்சங்கள் என்பதை உணர்ந்தவர் என்பதால் அத்துறையை புதிய வேகத்துடன் செயல்பட வைத்தாக வேண்டும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை நன்கு பணியாற்றியதால் அதே வழிமுறைகள் தொடர வைப்பதே விவேகமான ஒன்றாக இருக்கும், அதை நீங்கள் எப்படி பார்க்கப் போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள தமிழகம் ஆர்வமாகவே இருக்கிறது.

ஸ்டாலின் முன்னுள்ள சாவல்கள்

தமிழகத்தின் மிகப்பெரிய எதிர்கால சவால் தண்ணீர் பிரச்சனை! உடனடி முதலுதவி ரக தீர்வுகள் நடைமுறையில் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டாலும் வரும் தலைமுறைகளும் தட்டுப்பாடின்றி வாழ வழி கண்டாக வேண்டும்.

உங்களது 50 ஆண்டு அரசியல் அனுபவத்தில் முன்பெல்லாம் 10 ஆண்டுகளுக்கு இருந்த நடைமுறைகள் சமீப காலத்தில் ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டிருப்பதை நன்கு புரிந்தவர் என்ற முறையில் உங்கள் மீது புது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பில் தமிழகம் அமர்த்தியுள்ளது.

எதிர்கால சிக்கல்களை இன்றே சீர் செய்ய வேண்டிய கட்டாயத்துடன் இன்றைய தலைவலிகளுக்கும் உடனடி சிகிச்சைகள் வழங்கியாக வேண்டும்.

முன்பு தி.மு.க. ஆட்சியின்போது எழுந்த தவறுகளை தட்டிக் கேட்கும் வண்ணம் இருந்த தேசிய காங்கிரஸ் கட்சியே மத்திய அரசாக இருந்தது, அதே கட்சிதான் இன்று கூட்டணி கட்சியாக கொள்கை ரீதியாக துணை நிற்கிறது.

முன்பு தி.மு.க. தவறுகளைத் தட்டிக் கேட்க எம்ஜிஆர் கண்ட அண்ணா தி.மு.கவும் பின்னர் ஜெயலலிதா தலைமையில் இயங்கிய அதே கட்சியும் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது.

இன்று மக்களால் நல்லாட்சியை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியாக செயல்படத் தயாராகி விட்டனர். அவர்களுடன் கூட்டணி ரீதியாக இணைந்து இருக்கும் பாரதீய ஜனதா கட்சியே மத்தியில் நிரந்தர தன்மை கொண்ட ஆட்சியை வழங்கி வருகிறது.

உரிமை குரல்

தமிழகத்தின் உரிமைகளை குரல் கொடுத்து பெற்றவர் ஜெயலலிதா! அதற்கு தமிழகத்தின் காவிரி உரிமைகளை அரசியல் சாசனமாக பெற்றது நல்ல உதாரணமாகும்.

அதே வழியில் உங்களது சீரிய தலைமையில் நல்ல திட்டங்களை தமிழகத்தின் உரிமைகளை தடுக்கவோ, பறிக்கவோ முயற்சிக்காது. அப்படி விட்டு விடவும் முடியாது.

உங்களது நல்ல திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்றிருந்தால் அதை மத்திய அரசு அரசியல் லாபத்திற்கு மறைமுக முட்டுக்கட்டைகள் போட்டால் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உங்களுக்கு எம்.பிக்களின் பலம் இருப்பதை அறிவோம்.

அப்படி நல்ல திட்டங்களை அமுல்படுத்த தமிழகமே ஆர்வமாக காத்திருப்பதை நடுநிலை பத்திரிகையாளர்களும் புரிந்துகொண்டு விட்டோம். துவங்கட்டும் உங்கள் ஆட்சி, மக்கள் விரும்பும் நல்ல திட்டங்களை வாரி வழங்க உங்களது ஆட்சி அனுபவங்கள் உறுதுணையாக இருக்க எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கருணாநிதி வழியில்…

மக்கள் நல திட்டங்களை ஜாதி, மதம், நட்பு அனைத்திற்கும் அப்பாற்பட்டு அரசியல் நிர்பந்தங்களையெல்லாம் கடந்து உங்கள் தந்தையும் ஆட்சி நிர்வாகத்தில் பழுத்த அனுபவசாலி என்று புகழ் பெற்றவருமான மறைந்த மூத்த தலைவர் கலைஞர் கருணாநிதி வழியில் உலகமே பாராட்டும் வகையில் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நல்லாட்சியைத் தரத் தயாராகுங்கள்.

மக்கள் குரல் 1973 முதலே தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள், ஏற்ற – இறக்கங்கள், வளர்ச்சிகள், மேன்மைகளை கண்கூடாக பார்த்து வரும் பத்திரிகை என்பதை சுட்டிக்காட்டி இன்றைய மாற்றத்தை ஏற்படுத்திய தமிழக வாக்காளர்களை பாராட்டி புதிய ஆட்சியில் முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறது.

இன்றைய சிக்கல்கள் நிறைந்த பெருந்தொற்று முட்புதரில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற ஆட்சியை வழி நடத்தி செல்லும் சிரமம் மிகுந்த பணியில் உங்களது வழி துணைக்கு மக்கள் குரலும் – டிரினிட்டி மிரர் பத்திரிகையும் உறுதுணையாகவே இருக்கும் என உறுதி கூறுகிறது.

எம்.எஸ். காட்டிய வழியில்…

ஆட்சி மாறினால் காட்சிகள் மாறத்தான் செய்யும். அதில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருக்கும் நல்ல அம்சங்களை மக்களிடம் கொண்டுச் செல்லும் பணி எங்களுக்கு பிரதானமான பணி என்று எங்களது முன்னோடி ஆசிரியர் மறைந்த எடிட்டர் எம்.எஸ்.( ஆசிரியர் எம்.சண்முகவேல்) எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்த பால பாடங்களாகும்.

அதையே எங்களது வேத வாக்காக ஏற்று உங்களது சீரிய தலைமையில் நடைபெற இருக்கும் நல்லாட்சியையும் உங்களது திட்டங்களையெல்லாம் மக்கள் மன்றத்தில் கொண்டுச் செல்வோம்;அதற்கு உறுதியாக செயல்படுவோம்.

‘இப்படித்தான் இருக்க வேண்டும்; அப்படி மாறி இருப்பது தவறு’ என்று நீதிபதியின் கம்பீரத்தோடு பத்திரிகை தர்மத்தை புதுப்பொலிவோடு நடத்தியவர் எங்கள் ஆசிரியர் எம்.சண்முகவேல்.

எடிட்டர் எம்.எஸ் . காட்டிய வழியில் இன்றுள்ள தலைமுறையான நாங்கள் நடை போடுகிறோம்; எதிர்கொள்ள வேண்டிய சாவல்களை சமாளித்துக் கொண்டும் இருக்கிறோம்.

துவங்கட்டும் உங்களது நல்லாட்சி; சிறக்கட்டும் தமிழகத்தின் புகழ் பாரெங்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *