சிறுகதை

நல்லதுக்கு காலமில்ல … ஆர்.வசந்தா

பூங்குன்றம் ஒரு அமைதியான அழகான கிராமம். அங்கு ஒரு விவசாயி நல்ல முறையில் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு வீடும் அதைச் சுற்றி சிறிது நிலமும் இருந்தது. அவன் ஒரு குதிரையையும் சில ஆடுகளையும் வளர்த்து வந்தான்.

ஆடுகள் குட்டிகளை ஈன்றதும் அவற்றை பெரிதாக வளர்ப்பான். வளர்ந்ததும் ஆடுகளை விற்று பணம் சம்பாதிப்பான்.

குதிரையை ஒரு வண்டி வாங்கி அதில் பூட்டி சவாரிக்கு விடுவான். அதன்மூலமும் பணம் சம்பாதிப்பான்.

திருமண காலங்களில் குதிரையை மணமகனை அழைத்து வரும் வேலைக்கும் பயன்படுத்துவான். இப்படி அந்த குதிரை அவனுக்கு நல்ல வருமானம் கொடுத்து வந்தது.அந்தக்குதிரை பார்க்க ஒயிலாகவும் கம்பீரமாகவும் இருந்தது.

அந்தக் குதிரையும் விவசாயின் மந்தையிலிருந்த ஒரு ஆடும் நட்புடன் பழகி வந்தன.

காலம் நல்லமுறையில் ஓடியது.

குதிரையும் ஆடும் தங்களுக்கு போடும் இலை தழைகளை பகிர்ந்து கொள்வதும் உண்டு.

குதிரை, திடீரென ஒரு நாள் உடல் நலக்குறைவால் சுணங்கி படுத்துவிட்டது. என்ன கை வைத்தியம் செய்தும் பலனில்லை. மிருகநல டாக்டரிடம் விவசாயி காண்பித்தான். நேரில் வந்து பார்ப்பதாகக் கூறினார்.

பார்த்த அந்த மருத்துவர்,

‘‘இக்குதிரைக்கு விஷக் காய்ச்சல் வந்துள்ளது. நான் குதிரைக்கு ஊசிப் போடுகிறேன். இரண்டு நாட்கள் பார்த்து விட்டு என்ன செய்யலாம் என்று யோசிப்போம்’’ என்று கூறினார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. குதிரைக்கு என்ன முன்னேற்றமும் இல்லை.

‘‘இந்த குதிரைக்கு வந்துள்ளது விஷக் காய்ச்சல். அது மற்ற ஆடு மாடுகளுக்கும் பரவும் தன்மை உள்ளது. நாம் இக்குதிரையை கொல்வதே நல்லது’’ என்று டாக்டர் யோசனை சொன்னார்.

அதை ஏற்ற விவசாயி இக்குதிரையை கொல்வதே நல்லது என்று முடிவெடுத்தான்.இதைக் கேட்ட ஆட்டுக்கோ மிகவும் வருத்தமாயிற்று,

ஆடு தினமும் குதிரையின் அருகே சென்று ‘‘எழுந்திரு எழுந்திரு’’ என்று சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனாலும் எந்த பயனும் இல்லை.

ஒரு நாள் குதிரையை பார்க்க வந்த அந்த மிருகநல வைத்தியர், ‘‘இரு நாட்கள் கழித்து கொன்று விடலாம்’’ என முடிவு சொன்னார்.

ஆடு, குதிரையை இழக்க மனமில்லை, மறுநாள் காலையில் எழுந்தவுடன் குதிரையின் அருகே சென்று, ‘‘அய்யா குதிரையாரே உன்னை சாகடிக்க திட்டமிட்டுள்ளனர். நாளைக் காலையில் உன்னை வெட்ட ஆள் வரப் போகிறார்கள். அதனால் நீர் சீக்கிரம் எழ வேண்டும் என்று காதருகே விடாமல் சொல்லிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் அலுக்காமல் சொல்லிக் கொண்டிருந்தது.

ஆடு விடாமல் முயற்சித்ததால் குதிரைக்கும் நிலமை புரிந்தது. திடீரென மாலை ஆறு மணி அளவில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. குதிரை விஷக்காய்ச்சல் குணமடைந்து எழுந்து நிற்கத் தொடங்கியது.

குதிரையைக் காலையில் பார்த்த விவசாயி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குதிரையும் மீண்டும் எழுந்து நின்றது. வழக்கமாக வரும் வைத்தியரும் வந்தார். குதிரை விஷக்காய்ச்சல் குணமடைந்து எழுந்து நிற்கத் தொடங்கியது கண்டு ஆச்சரியப்பட்டார்.

விவசாயி வைத்தியரிடம் சொன்னார் :

‘‘இனி பயமில்லை. பிழைத்து விட்டது என் குதிரை. உங்களுக்கான பணத்தையும் தந்து விடுகிறேன். அதோடு உங்களுக்கு ஒரு விருந்து வைக்கலாம் என்றிருக்கிறேன்.

இன்று மதியம் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் எங்கள் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். இந்த கொழுத்த ஆட்டை வெட்டி கறி சமைத்து உங்களுக்கு உணவளிப்பேன் என்று கூறினான் விவசாயி.

நண்பன் ஆடு அதிர்ச்சியில் உறைந்து நின்றது. குதிரையும் திகைத்து நின்றது செய்வதியாது.

ஆடு மனதில் நினைத்தது : ‘‘நல்லதுக்கு காலமில்லை’’.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *