உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெப்ப நேரத்தில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார் பெருமாள்.
காலையில் அலுவலகத்திற்கு வந்து வேலைகளைப் பார்த்துவிட்டு மதிய உணவிற்கு முன்னால் அவர் ஒரு பழச்சாறு குடிப்பது வழக்கம்.
நீண்ட நேரம் சேரில் அமர்ந்து வேலை செய்வது உடலுக்கு நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு காலாற வெளியே நடந்து வந்து ஒரு பழச்சாறையும் அருந்தி விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பெருமாள்,
அன்று எப்போதும் போல மதிய உணவு இடைவேளைக்கு முன்னால் சாலை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவரை எதிர்கொண்ட துரை
என்ன பெருமாள் அண்ணா எப்படி இருக்கீங்க . இப்படி இளைச்சு போயிட்டீங்களே? இரண்டு மாதத்திற்கு முன்னாடி பார்க்கும்போது ஆளு கும்முனு இருந்தீங்களே. இப்போ சட்டுன்னு எளைச்சது மாதிரி தெரியுது. எதுவும் பிரச்சனையா? உடம்புக்கு பிரச்சனையா? மனசுக்கு பிரச்சனையா ?என்று எந்த பிரச்சனையும் இல்லாம நடந்து கொண்டிருந்த பெருமாளின் மனதில் விஷ விதையைத் தூவினான் துரை.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. நல்லா தான் இருக்கேன் என்று பெருமாள் சொல்லியும் கேட்காத துரை
இல்ல அண்ணே… இரண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி பாக்குறப்ப ஆளு அப்படி இருந்தீங்க. ஆனா இப்போ எளைச்சி போயிட்டீங்க. நல்லா சாப்பிடுங்க அண்ணே. உடம்ப பாத்துக்கோங்க என்று போகும் போது அனுதாப விதைகளைப் பெருமாள் மீது வீசிச் சென்றான் துரை.
அதுவரையில் உடம்பைப் பற்றி எந்த விதத்திலும் கவலை கொள்ளாத பெருமாள் தன்னை மறுபடியும் மேலும் கீழும் பார்த்து சோதித்து கொண்டார்.
என்ன இது? நல்லா தான் இருக்கம். இப்படி சொல்றானே? அது உண்மையா? என்று அவருக்கு அவரே கேள்விகளை கேட்டுக் கொண்டார்.
அவருக்கு மனது ஒரு நிலையில் இல்லை. நாம் இளைத்து விட்டோம் போல என்று அந்த நினைவு அவரை சுத்தி சுத்தி வட்டமடித்தது.
அலுவலகத்தில் கூட அவரால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை.
துரை சொன்னதே அவரின் ஞாபகத்திற்கு வந்தது. அலுவலகத்தில் இருக்கும் எடை பார்க்கும் எந்திரத்தில் கூடத் தன் எடையைச் சோதித்துப் பார்த்தார் அப்போது எடையும் சரியாகத்தான் இருந்தது.
நம்மை ஏன் இப்படி சொன்னான்? என்று அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
வீட்டிற்கு வந்து அதையே பேசிக் கொண்டிருந்தார்.
அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க. நல்லா தான் இருக்கீங்க .யார் சொன்னது ? என்று மனைவி சொல்லிப் பார்த்தாள்.
இல்லம்மா ஏதோ உடம்பு இளைச்சிட்டேன் போல. அதான் துரை சொல்லிட்டு போறான் என்று மனைவியிடம் சொன்னார். மகன் மகள் எவ்வளவு சொல்லிப் பார்த்தனர். துரை சொன்ன வார்த்தை பெருமாளின் மூளையில் அப்படியே அப்பிக் கிடந்தது.
மறு நாள் உடம்பு ஜுரம் கண்டது பரிசோதித்த டாக்டர்கள் ஊசியும் மருந்து மாத்திரையும் எழுதி கொடுத்தாார்கள்.
நல்லா தான் இருந்தாரு; திடீர்னு ஏன் இப்படி உடம்பு சரியில்லாம போச்சு ?என்று அலுவலகத்தில் இருந்தவர்கள் கேள்வி கேட்டார்கள்.
என்னவோ தெரியல. திடீர்னு இப்படி உடம்பு சரி இல்லாமப் போச்சு என்று பெருமாள் மனைவி நண்பர்களுக்குப் பதில் சொன்னாள்.
ஒரு வழியாக ஒரு வாரம் கழித்து அலுவலகத்திற்கு வந்தார். பெருமாள் முன்னைவிட இப்போது தேறியிருப்பதாக அவரின் உள் மனது சொன்னது.
துரை சொன்ன வார்த்தைகள் மூளையில் இருந்து சற்று விலகி இருந்தன.
அலுவலகத்தில் இருக்கும் அதே எடை பார்க்கும் இயந்திரத்தில் தன்னை சோதித்துப் பார்த்தார். பழைய எடை கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் அப்படியே இருந்தது.
எடை சரியாத்தான் என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து பழச்சாறு குடிப்பதற்காக வீதியில் நடந்தார் பெருமாள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு பெருமாளை மறுபடியும் எதிர்கொண்டான் துரை.
என்ன பெருமாள் அண்ணே போன முறை பார்த்ததைவிட இந்த தடவை ரொம்ப இளைச்சுருக்கு ? உடம்ப பாத்துக்கோங்க. பணம், பணம்னு சம்பாதித்து உடம்பை பார்க்காம விட்டுறாதீங்க
என்று அப்போதும் விஷ விதைகளைப் பெருமாளின் மனதில் தூவினான் துரை.
அதுவரை அவன் பேசியதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பெருமாள்.
இவன்தான் நல்ல இருந்த நம்ம மனச கெடுத்து விட்டவன். இந்த முறையும் நம்மை இப்படியே சொல்றான். இவன சும்மா விடக்கூடாது என்று அவன் கையை தூக்கிமடக்கி அவன் முதுகில் நாலு குத்து விட்டார்.
ஏன்டா டேய் நான் நல்லாத்தானே இருக்கேன். ஏன் இப்படி இளைச்சிட்டீங்கன்னு நீ கேட்ட? அதனாலதான் என் மனசு அதையே நினைச்சுட்டு இருந்து நோய்வாய்ப்பட்டு இப்பதான் நல்லா வந்து இருக்கேன். திரும்பவும் அதையே நீ ஏன் கேக்குற? உண்மையிலேயே ஒரு மனுஷன் நோய் வாய்ப்பட்டு மெலிந்து போயிருந்தா கூட அவங்கள பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கீங்க. முன்ன பார்த்தது விட இப்ப தெளிவா இருக்கீங்க. அப்படின்னு சொல்லி பாரு.
நெகட்டிவா நினைக்கிற மனசு கூட பாசிட்டிவா திங்க் பண்ணும். நீ என்னடான்னா பாக்குற ஆளுகள எல்லாம் இளைச்சிட்டீங்க; மெலிஞ்சுட்டீங்கன்னு சொன்னா, நல்லா இருக்கறவனுக்கு கூட நெகட்டிவான சிந்தனை தான் வரும் .
இனிமேல் இந்த மாதிரி எவன் கிட்டயும் பேசக்கூடாது. எப்பவுமே பாசிட்டிவா திங்க் பண்ணு. பாசிட்டிவான வார்த்தைகளை பேசு என்று துரைக்கு இரண்டு உதை கொடுத்து அனுப்பினார் பெருமாள்.
எவன் என்ன சொன்னாலும் அத மனசுல ஏத்திக்கக் கூடாது. அது நமக்குத்தான் பிரச்சனை என்று வழக்கத்தை விட அன்று பழச்சாறு கொஞ்சம் அதிகமாக அருந்தி விட்டு, அலுவலகத்தை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டிருந்தார் பெருமாள்.