சிறுகதை

நரம்பில்லாத நாக்கு | டாக்டர். கல்யாணி

சாந்திக்கு ஒரே பரபரப்பாய் இருந்தது.

எழுந்தது முதல், இரவு வரை ஒரே பிசி தான். ‘‘வாழ்க்கையில் ஓடி, ஓடி என்னதான் சுகம் கண்டோம்?’’ எந்த நேரமும் பதட்டமாய் இருக்கவே பகவான் என்னை படைச்சானோ.’’

மாம்பலத்தில் ரங்கநாதன் சந்தின் நெருக்கடியில் ஒரே கூச்சல். மக்களின் கூட்ட நெரிசல் முண்டியத்து சேறும் சகதியும் இருப்பதையும் மறந்து சென்றது.

மக்கள் வெள்ளத்தின் உடை மோகமும் நகை மோகமும் காய்கறி கடைகளில் பெண்களின் கூட்டமும் அப்பப்பா… பெரும் அமளி துமளியாய் இருந்தது.

‘‘பாண்டிபஜார் இல்லை இது. பட்டு பஜார். மணியான சேவை செய்யுதே…’’ என்று விளம்பரங்களின் ஒலி அதிர்வுகள் ஒரு பக்கம் காதை பிளக்க,

‘‘இங்க பாருடி, நல்லா டார்க் கலர் சாரீஸ் மட்டும் செலெக்ட் பண்ணுடி. உன் கலருக்கு ரொம்ப நன்னா… அது சூட் ஆகும்.

‘‘நோக்கு, டார்க் கலர் பிடிக்காதும்மா…’’

என மூலைக்கு மூலை அவரவர்களின் எண்ண அலைகள்.

எருமை மாடுகள் நகர்வது போல மெதுவாக அந்த தெருவில் நடந்து சாந்தி, ஒரு வழியாக, ‘‘ராமன் தெருவுக்கு வந்து, இடது புறத்தில் உள்ள, ‘‘கனியன் ப்ளாட்ஸின்’’ ஒன் ஏக்குள் நுழைவதற்குள், ‘அப்பா’ என ஆனது.

அவள் மைத்துனனின் மனைவி வந்திருந்தாள். ராஜி, நல்ல வெள்ளை நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட புடவையும் அதற்கு மேட்சிங் ஜாக்கெட்டும் போட்டிருந்தனர்.

ஆண்டாள் போன்று பெரிய திலகம், அவள் பரந்த நெற்றிக்கு பளிச்சென தெரிந்தது.

‘‘மன்னி, என் தங்கை உங்கக்கிட்ட ஏதோ பேசணுன்னு வந்துண்டிருக்கா. அவ ரொம்ப ஆத்திரத்தோட இருக்கா.’’

சாந்திக்கு பகீரென்றது,

‘‘என்னவாக இருக்கும்?’’ அடுக்களைக்குள் நுழைந்து காபி கலந்தாள்.

‘‘பஜ கோவிந்தம்…’’ காலிங் பெல் அலறியது.

கதவைத் திறந்தாள். ருத்ர காளியாய் ஷோபனா. பதட்டத்தில், புருவங்கள் படபடவென்று துடிக்க, அதீத ஆத்திரக் கனவோடு உள்ளே நுழைந்தாள்.

‘‘சாந்தி அக்கா. நீங்க என்ன நினைச்சிண்டிருக்கேள்? இருங்கோ, எங்க ஆத்துக்காரரும் வரார்.’’

படபடவென்று பேசினாள்.

‘‘என்னம்மா! என்ன ரொம்பப் பேசற. என்னாச்சு? எனக்கு. ஆத்துக்காரர் போய் சேர்ந்துட்டார். உன்னை மாதிரி எனக்குன்னு, எமோஷனல் சப்போர்ட்டர் யாருமில்லை.’’

‘‘ஆமாம், எங்க ஆத்துக்காருக்கு விடி நோய் இருக்கிறதா, ஊரெல்லாம் சொல்லிண்டு அலையறளாமே!’’

களீரென்று நினைவுகள் பளிச்சிட்டின. சாந்திக்கு மனம் பதறியது.

‘‘சொல்றேண்டிம்மா. உங்க அக்கா, ராஜி தான் போன வாரம், அச்சுதன் கல்யாணத்தில எங்கிட்ட பேசிண்டிருந்த போது, ‘‘என் தங்கை ஆத்துக்காரருக்கு, விவஸ்தையே இருக்காதா? அவருக்கு விடியாம். ஆனா ஷோபனா மறைக்கிறா. இதை ‘யாரிடமும் சொல்லிடாதீங்கோ’ என சொன்னாள். அவட்ட கேளேன்.’’

ராஜிக்கு சுரீரென்று கோபம் ஏறியது.

‘‘மன்னி, ஏன் அநியாயமா பழி போடறேள்?’’

‘‘ஆமாம், நீ என்கிட்ட சொன்னா மாதிரி, எத்தனை பேரிடம் சொன்னியோ?’’

‘‘நான் தான் சொன்னேங்கறத்துக்கு, என்ன ஆதாரம்? என்ற போது, வேலைக்கரி காமாட்சி.

‘‘அம்மா இதுக்கு மேல, ஏமா பேசாம இருக்கீங்க? அந்த டேப்பை போடுங்க. பாவம் நீங்களே நொந்து இருக்கீங்க. வீடேறி வம்புக்குன்னே வந்தா..’’

அவளின் மொபைலிலிருந்து, ராஜி பேசியதை ஆன் செய்தாள். ‘‘நான் நிச்சயமா, இதைப் பதிவு பண்ணவே நினைக்கலை. என் தம்பி ராமோட போன் பாடியதை டேப் பண்ணினபோது, அதை ஆப் பண்ணாம, மறந்து வச்சிருந்தேன். அதில் நீ பேசினதும் ரெகார்ட் ஆயிடுச்சு.’’

ராஜி தயங்கியபடியே திருடனுக்குத் தேள் கொட்டியது போல தர்ம சங்கடமானாள்.

‘‘ஷோபனா, ரகசியத்தை காப்பாத்தறவாளிடம் மட்டும் சொல்லணும். இல்லன்னா, இப்படி நரம்பில்லாத நாக்கெல்லாம் எதை எதையோ பேசும். நான் மறதியா ஆன் பண்ணின ‘மொபைல்ல’ ரெகார்டான ராஜி வாய்ஸ், இந்த இழிந்த செயலை, நான் செய்யலன்னு சொல்லிருத்தா?

‘‘ம்ம்…. பாவம் ஒரு பக்கம். பழி ஒரு பக்கம்’’

‘‘சித்த உட்காரு. காபி போட்டுத்தாரேன். ராஜி நீ டிபன் சூடா சாப்பிட்டு போ…’’

எனச் சொல்ல ராஜியை நிமிர்ந்து பார்க்கக் கூட பிடிக்காமல் ஷோபனா, விறுவிறுவென நடை போட்டாள்.

ஊர் வம்புக்கு அலையும் ராஜி, ‘‘மன்னி. நானும் வாரேன்’’ன்னு பூனை போல பதுங்கி புறப்பட்டாள்.

‘‘தாங்க்ஸ் காமாட்சி’’ என அழுகையுடன் காமாட்சியின் கரம் பற்றினாள் சாந்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *