செய்திகள் வர்த்தகம்

நரம்பியல் சிகிச்சையில் திருச்சி அப்போலோ மருத்துவமனை சாதனை

திருச்சி, பிப்..14–

திருச்சி அப்போலோ மருத்துவமனை நரம்பியல் சிகிச்சையில் சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து திருச்சியில் அப்போலோ மருத்துவமனை மண்டல தலைமை அதிகாரி மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:–

கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 54 வயது இளங்கோவன் இடதுக் கால் செயலிழப்புடன் நடக்க முடியாத நிலையில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய வலது கால் ஏற்கெனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி கலந்தாய்வில் அவருக்கு இடது காலில் ஒரு வித இறுக்கமும் மிதமான பலவீனமும் இருப்பது தெரியவந்தது. அதோடு அவருக்கு இரு தோள்களிலும் வலியும் பலவீனமும் இருந்திருக்கிறது. அவர் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி உடலின் எடையைச் சுமந்து நடப்பதால் ஏற்பட்டிருக்கும் தொய்வு என்பதாக நினைத்துக் கொண்டு சிகிச்சை பெறாமல் இருந்து வந்திருக்கிறார்.

இப்போது திடீரென நடக்க முடியாத அளவிற்கு சிக்கல் வந்ததும் மருத்துமனை அனுமதிப்பின் போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்ற பதட்டத்துடன் அவர் இருந்தார். ஏனெனில் அவர் ஏற்கெனவே இருதய தொந்தரவு, சர்க்கரை – இரத்தக் கொதிப்பு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருபவர்.

அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதும் அறுவை சிகிச்சை மருத்துவர்களால் அவரது மூளை – தண்டுவடம் பரிசோதிக்கப்பட்டு அவருக்கு கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நோயாளி சிறுநீர் கழிக்கும் சக்தியை இழந்திருப்பதும் அந்நேரத்தில் தெரியவந்தது. கிட்டத்தட்ட 1300 மில்லி சிறுநீர் நீர்ப்பையில் இருந்தும் அவர் அதனை உணர முடியாத நிலையில் இருந்தார்.

அவருக்கு கழுத்து தண்டுவடத்தை சுற்றியிருக்கும் தசை நார்கள் கெட்டியாகவும் தடிமனாகவும் ஆகி அதுவே ஒரு எலும்பைப் போல துருத்திக்கொண்டு தண்டுவடத்தை மிக மோசமாக நசுக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அப்படியாக நசுங்கியிருப்பதை விடுவிக்காவிடின் அவர் மிகுந்த மோசமான நிலைக்குச் செல்லக் கூடிய சாத்தியங்கள் (பூரண வாதம், மூச்சுத் திணறல், சிறுநீர், மலம் கழிக்க முடியாத நிலை) குறித்து அவருக்கு தெளிவாக விளக்கிக் கூறப்பட்டது.

தற்போது அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டிருந்த இரண்டு கழுத்துத் தண்டுவட எலும்புகள் அகற்றப்பட்டு தண்டுவட நரம்பு மண்டலத்தை நசுக்கிக் கொண்டிருந்த கெட்டியான தசை நார்கள் அதீத நுணுக்கத்துடன் கரைத்து அகற்றப்பட்டன. முடிவில் டைட்டானியம் சாதன உதவியுடன் அவ்வெலும்புகள் இணைக்கப்பட்டு திடமாக்கப்பட்டன.

திருச்சி அப்போலோ மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மயிலன் சின்னப்பன் மற்றும் கெவின் ஜோசப் ஆகியோர் இந்தக் கடினமான சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றினர். சிகிச்சையின் சிறு பிசகு கூட நோயாளிக்கு மிக மோசமான பாதகத்தை அளிக்கக் கூடும் என்ற நிலையில் மிகுந்த துல்லியத்துடன் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை போன்ற பெருநகரங்களில் கிடைக்கப் பெறும் உயர் சிகிச்சைகள் திருச்சியில் கிடைக்க வழிவகுக்கிறது என்று கூறினார்.

பேட்டியின் போது மருத்துவமனை பொதுமேலாளர் சாமுவேல், சிவம் மற்றும் துணைப் பொதுமேலாளர் சங்கீத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *