ஆர். முத்துக்குமார்
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நம் மூளையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெருந்தொற்று நமது மன ஆரோக்கியத்தில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகுந்த மன அழுத்தத்திற்கு நாம் ஆளாகியிருக்கிறோம். நமது தினசரி செயல்பாடுகள் தடைபட்டுவிட்டன. நம் அன்புக்கு உரியவர்களைப் பார்த்து அச்சம் கொண்டு விலகி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ள நாம் வழக்கமாக செய்யக் கூடிய செயல்களை இப்போது செய்வதில்லை. நமக்குப் பழக்கம் இல்லாத விஷயங்களை செய்வதற்கு நிறைய முயற்சி தேவைப்படுகிறது.
அதுபோல இந்தச் சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, சமூக அழுத்தங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள மற்றொரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலம் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பது சிகிச்சைக்குப் பிந்தைய மன அழுத்தம், உணர்வுகள் பாதிப்பு, மனச்சோர்வு, தூக்கமின்மை, பதற்றம், எரிச்சல், வெறுப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதனால் தான் இரவில் நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுப் பழக்கம், புகையிலை, மது, போதை மருந்துகளைத் தவிர்த்தல் போன்ற ஆரோக்கியத்துக்கு உகந்த பழக்கங்களைக் கடைபிடிப்பது முக்கியமானதாக இருக்கிறது.
முடிந்த வரையில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்வது குறிப்பிட்ட நேரத்தில் எழுவது, படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது அவசியம்.
நமது சமூகத் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். நமது இயல்பான மனநிலையை வளர்த்துக் கொள்ள இந்தத் தொடர்புகள் உதவிகரமாக இருக்கும். நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள உதவும். பல இடங்களில் நேரில் சந்திப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.