செய்திகள்

‘நம்ம சென்னை’ செயலியில் சொத்துவரி செலுத்தலாம்

சென்னை, ஜன. 12–

‘பெருநகர சென்னை மாநகராட்சி “நம்ம சென்னை” செயலியில் பொதுமக்கள் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியால் வடிவமைக்கப்பட்டுள்ள மக்கள் குறை தீர்க்கும் செயலியான ‘‘நம்ம சென்னை” செயலியில் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்துவரி, தொழில்வரி மற்றும் வர்த்தக உரிமம் ஆகிய ஐந்து சேவைகளுடன் செயல்பாட்டில் உள்ளது.

மேலும், ‘‘நம்ம சென்னை” செயலியினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களும் பதிவிறக்கம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இதுவரை 48,212க்கும் மேற்பட்ட பயனீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்து பயனடைந்துள்ளார்கள். இச்செயலியின் மூலம் பொதுமக்களிடமிருந்து இதுவரை 18,735 புகார்கள் பெறப்பட்டு அதில் 18,528 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 207 புகார்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேல்நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

தற்போது ‘‘நம்ம சென்னை” செயலியில் கூடுதல் சேவையாக பொதுமக்கள் மேலும் பயன்பெரும் வகையில் Net Banking, Debit Card, Credit Card, RTGS/NEFT, UPI ஆகிய கட்டண விருப்பங்களுடன் சொத்துவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திகேயன், தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *