செய்திகள்

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காப்போம்: உலக தண்ணீர் நாளில் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 22–

‘நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காப்போம்’ என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலக தண்ணீர் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள உரையில் கூறியிருப்பதாவது:–

உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்த அளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும், தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால்தான், “நீரின்றி அமையாது உலகு” என்றார் அய்யன் வள்ளுவர்.

தமிழ் நிலமானது தண்ணீரை தனது பண்பாட்டுடன் சேர்த்து வளர்த்து வந்துள்ளது. தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் நிலம், தீ, நீர்வழி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்கிறது. தண்ணீர் என்று சொல்லாமல் அமிழ்தம் என்றவர் திருவள்ளுவர். மனித உடலில் தண்ணீரின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தீமை ஏற்படும் என்ற மருத்துவப் புலமையோடு “மிகினும், குறையினும் நோய் செய்யும்” என்றார் வள்ளுவர்.

திருமந்திரமும், தேவாரமும், திருவாசகமும் தண்ணீரின் அவசியத்தை அழகு தமிழில் சொல்கிறது. நீர் நிலைகளின் அளவைப் பொறுத்து பெயர் வைத்தவர் தமிழர். குட்டை, குளம், ஊருணி, ஏரி, ஏந்தல், கண்மாய், ஆறு, நீரோடை, கடல் என்று பிரித்துப் பெயர் சூட்டினர் தமிழர். எல்லாமே நீர் உள்ள இடம்தான். ஆனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை அளவு கொண்டது.

நீரின் பெயர்கள்

கடல் நீரை முந்நீர் என்றும், ஆற்று நீரை நன்னீர் என்றும், குடிநீரை இன்னீர் என்றும், குளிர்ந்த நீரை தண்ணீர் என்றும், நீரின் தன்மைக்கேற்ப பெயர் சூட்டிய இனம் தமிழினம். உடம்பைக் குளிர்வித்தலே குளித்தலானது. தாயைப் பழித்தாலும், தண்ணீரைப் பழிக்காது என்பது தமிழ் பழமொழி. நமது உடலின் அனைத்துச் செயல்பாடுகளும் முறையாகச் செயல்படுவதற்கு தண்ணீர் மிக மிக அவசியம். உணவின்றி கூட மனிதனால் பல நாட்கள் இருக்க முடியும். நீரின்றி இருக்க முடியாது.

தண்ணீரை காப்போம்

இத்தகைய உயிர்நாடி ஆன தண்ணீரை நாம் காக்கவேண்டும். அதாவது நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும். நீரை வீணாக்கக்கூடாது. பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நீர் நிலைகளை மாசுபடாமல் காக்க வேண்டும். தூர்வாரி வைத்திருக்கவேண்டும். இன்றைக்கு ஒரு நாட்டின் வளம் என்பது நீர் வளமாக -இயற்கை வளமாகக் கணக்கிடப்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். புவி வெப்பமயமாகி வருகிறது. இதிலிருந்து நம்மை காப்பது தண்ணீர் தான். நீர் இல்லையேல் உயிரில்லை என்பதை நீங்கள் அனைவரும் உணர்வீர். தண்ணீரைக் காப்போம்- தாய் நலத்தை காப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *