மகேந்திரனுக்கு படிப்பு என்றால் குழப்பங்கள். வேப்பங்காயாய்க் கசக்கும். பார்டர் மார்க்கில் தான் பாஸ் செய்வான். இல்லையென்றால் சில நேரங்களில் ஃபெயில் கூட ஆகி விடுவான் .அதனால் அவனை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் முயற்சி செய்தார்கள். அவன் மரமண்டையில் படிப்பு ஏறாமல் இருந்தது.
“இவனைப் படிக்க வைப்பதற்கு என்ன வழி? “
என்று யோசித்தார் மகேந்திரனின் அப்பா, அண்ணாமலை.
ஒரு நாள் வீட்டில் அமர்ந்து தன் நிலைமை ,தன் குடும்பத்தின் நிலைமை என்று எடுத்துச் சொல்லி மகேந்திரனை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று குடும்பத்தில் உள்ளவர்கள் வேண்டிக் கொண்டார்கள்
” இவன என்ன செஞ்சா படிக்க வைக்கலாம் ? “
என்று யோசித்தார் அண்ணாமலை
” மகேந்திரா உனக்கு என்ன பிடிக்கும் ?. “
என்ற அண்ணாமலை கேட்க
” எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும்ப்பா” என்றான் மகேந்திரன்.
“சாப்பாட்டு ராமா எப்ப பாத்தாலும் ஒனக்கு சாப்பாடு
தானா ? படிக்க மாட்டியா? நீ நல்லா படிச்சா? உனக்கு என்ன வேணுமாே எல்லாம் வாங்கி கொடுப்பேன். நீ படிக்க மாட்டேங்கறியே ?
என்று வருத்தப்பட்டார் அண்ணாமலை.
“அப்ப நான் என்ன பண்ணனும்ப்பா “
என்று மகேந்திரன் கேட்க
“நீ ஒன்னும் பண்ண வேணாம். நல்லா படிச்சா போதும். இந்தா பார் இந்த பெட்டியில ஒரு லட்ச ரூபா இருக்கு .இந்த ஒரு லட்ச ரூபாயும் உனக்கு தான் .நீ படிச்சு பாஸ் பண்ணிட்டேன்னா, இந்த ஒரு லட்ச ரூபாயும் நீ எடுத்துக்கலாம். இந்த ரூபாய நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம் “
என்ற அண்ணாமலை கட்டுக் கட்டாக நோட்டுகளைக் காண்பித்தார். அதைப் பார்த்த மகேந்திரனுக்கு சந்தோஷம்.
” இவ்வளவு பணமும் எனக்காப்பா ?”
என்று மகேந்திரன் கேட்க
” ஆமாப்பா எல்லா பணமும் உனக்கு தான். இந்தப் பெட்டியில பணம் இருக்கு. நீ இத எடுத்துக்கோ. நீ நல்லா படிக்கணும். அவ்வளவு தான் ” என்றார் அண்ணாமலை
அதிலிருந்து தினமும் அந்த பணத்தைப் பார்ப்பதும் இந்தப் பணம் முழுவதும் நமக்குத் தான் என்றும் நன்றாகப் படித்தான். அவனின் கவனம் வேறு திசையில் திரும்பாமல் படிப்பதிலேயே மூழ்கியிருந்தது. காலை, மாலை, இரவு என்று எந்த நேரத்திலும் படித்த வண்ணமே இருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக மாறிய மகேந்திரனைப் பார்த்து பள்ளியிலும் தெருவிலும் மெச்சிப் பேசினார்கள்.
” எப்படி இது? “
என்று எல்லோரும் ஆச்சரியமாகக் கேட்க யாரிடமும் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
அந்த ஒரு லட்சம் மட்டுமே அவன் கண்ணின் முன்னால் வந்து நின்று கொண்டிருந்தது.
” ஒரு நாள் தேர்வு எழுதிவிட்டு அப்பா நிச்சயமா நான் ஸ்டேட்லயே முதல் மார்க் எடுத்துடுவேன். அப்ப இந்தப் பணத்த நான் எடுத்துக் கிரலாமா அப்பா “
என்று மகேந்திரன் கேட்க
” பரீட்சை எல்லாம் முடிஞ்சப்பறம் முதல் மார்க் வந்த பெறகு நீ எடுத்துக்கலாம்பா “
என்றார் அண்ணாமலை.
எப்படியும் பொதுத் தேர்வில் முதல் மார்க் எடுத்து விட்டால், ஒரு லட்ச ரூபா அப்பா தந்து விடுவார் .முதல் மார்க் எடுத்து விட வேண்டும்
என்று கடினமாக உழைத்தான். அவன் சொன்னது போலவே தமிழகத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றான்.
“ஊரே அவனை மெச்சியது. அப்பா இப்பவாவது நான் இந்தப் பணத்தை எடுத்துக்கிரலாமா? “
என்று சொல்ல
” சரி … ஆனா, நான் என்ன சொல்றதுன்னு தெரியல”
என்றார் அண்ணாமலை.
” அப்பா, என்னுடைய பிரண்ட்சுக்கு எல்லாம் பார்ட்டி வைக்கணும்பா”
என்று மகேந்திரன் சொல்ல, வேறு வழியின்றி அப்பா கொடுத்த பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அங்கு பணம் ஏதும் இல்லாமல் இருந்தது.
” என்னப்பா பணத்தைக் காணோம். பணம் எங்க போச்சு? நல்லா படிச்சா ஒரு லட்ச ரூபா தாரேன்னு சொன்னிங்க. நான் நல்லா படிச்சு தமிழ்நாட்டிலே முதல் மார்க் எடுத்திட்டேன்ப்பா . அந்த ஒரு லட்சம் எங்கப்பா ? “
என்று கேட்க
” தம்பி, என்ன மன்னிச்சிருப்பா. அந்த ஒரு லட்சம் நம்ம பணம் இல்லப்பா.. உன்கிட்ட காமிச்சுட்டு அப்படியே எடுத்துக் கொண்டு போய் அதை வாங்கினவங்கக் கிட்டயே கொடுத்துட்டேன்பா. நீ ஒரு லட்ச ரூபாய் பெட்டியில இருக்குன்னு நினைச்சு படிச்ச , பெட்டியில உண்மையிலேயே அந்த ஒரு லட்ச ரூபாய் இல்லப்பா. நீ வெற்றி பெற்றதுக்கு உன் மனசு தான்பா காரணம். ஒரு லட்ச ரூபா நமக்கு கிடைக்கும்னு. நீ நல்லா படிச்ச , இவ்வளவு நாள் நீ பார்த்துட்டு இருந்தது வெறும் பெட்டி தான்பா அதில் பணம் இல்ல. இன்னைக்கு படிச்சு முடிச்சுட்டு தமிழ்நாட்டிலேயே நம்பர் ஒன்னா வந்து நிற்கிறேன்னா அதுக்கு காரணம் உன்னுடைய முயற்சியும் உழைப்பும் நேர்மையான சிந்தனையும் தான். அதனால என்னை மன்னிச்சிருப்பா”
என்றார் அண்ணாமலை.
“நீங்க சொன்னது சரிதாப்பா. படிச்சு என்ன வரப்போகுது? படிச்சவன் எல்லாம் சும்மா தானே இருக்கான் அப்படின்னு விரக்தி அடஞ்சு போய் பேசுறத விட, படிக்கும்போதே ஒரு லட்ச ரூபா கெடைக்குதுன்னு நினைச்சு படிச்சேன். இன்னைக்கு தமிழ்நாட்டில் நம்பர் ஒன்னா வந்து இருக்கேன். ஆனா, நீங்க கொடுத்த பெட்டியில் ஒரு லட்ச ரூபாய் இல்ல. ஆனா நீங்க காட்டுன வழியில பல்லாயிரம் கோடி கணக்கான ரூபாய் என் கண்ணுக்கு தெரியுதுப்பா .என்ன மன்னிச்சிருப்பா “
என்று அப்பாவின் காலில் விழுந்தான் மகேந்திரன்.
” தம்பி ,நீ என்னை முதல்ல மன்னிச்சிரு .உன்னைய நான் ஏமாத்துனதுக்கு. என்னை மன்னிச்சிரு. ஒரு லட்சம் இருக்குன்னு தானே படிச்ச . நான் ஒரு வகையில உன்னைய ஏமாத்திட்டேன் “
என்று அண்ணாமலை அவனிடம் மன்னிப்பு கேட்க
“இல்லப்பா அந்த ஒரு லட்ச ரூபாய் இருக்குன்னு நான் நினைச்சதுனால தானே எனக்குள்ள தூங்கிட்டு இருந்த அறிவ நீங்க தட்டி எழுப்புனீங்க .இது ஏமாத்தறது இல்லப்பா . இது ஒரு விதமான மோட்டிவேசன். உங்க மனசுக்கு வேணா , என்னை ஏமாத்துனதா நினைக்கலாம்.
இத நான் ஒரு வாய்ப்பா எடுத்துக்கிட்டேன்பா “
என்று மகேந்திரன் சொல்ல
தமிழ்நாட்டில் முதலாக வந்த மகேந்திரனுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் வந்து குவிந்து கொண்டே இருந்தன.
அப்பா அண்ணாமலை கூறிய அந்த வார்த்தைகளை விட, ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசுப் பொருட்களும் பணமுடிப்புகளும் மகேந்திரனுக்கு வந்து சேர்த்தன
இதைப் பார்த்த அண்ணாமலைக்கு கண்ணீர் வந்தது. மகேந்திரனுக்கு நம்பிக்கை வந்தது.