சிறுகதை

நம்பிக்கை | கரூர். அ.செல்வராஜ்

தற்காலிக காய்கறிச் சந்தையில் காய்கறிகளை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் மீனா.

மீனாவைப் பின் தொடர்ந்து நடந்து வந்த பெண் ஒருத்தி சற்று வேகம் வேகமாக நடந்து வந்து மீனாவின் முன்னே நின்றாள்.

தனக்கு முன்னே வந்து நிற்பவள் தனது தோழி ராதா என்பதை அடையாளம் கண்டு கொண்ட மீனா மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள்.

‘‘ராதா! நீயா…? இங்கே எங்கே வந்தே? உன்னைப் பாத்து ஆறு மாசம் ஆச்சே. நீ வீட்டை காலி செஞ்சிட்டு வேற ஏரியாவுக்கு குடியிருக்க போயிட்டே, போனவ அட்ரஸை போன்லே விவரமா அனுப்பி வைக்கிறேன்னு சொன்னே. அதுக்கப்புறம் மறந்துட்டே… என்னையும் சேர்த்து மொத்தமா மறந்துட்டே’’ என்றாள்.

மீனாவுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தாள் ராதா. ‘‘மீனா அக்கா! உங்க ஏரியாவிலிருந்து வீட்டைக் காலி செஞ்சுட்டு வேற ஏரியாவுக்குப் போன ஒரு வாரம் மட்டும் தான் நானும் எங்க குடும்பத்தாரும் சுகமா இருந்தோம். அதற்கப்புறம் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் உடம்பு சரியில்லாமப் போயி ரொம்பவும் கஷ்டப்பட்டோம். டாக்டர் பீஸ், மருந்து, மாத்திரை, ஊசின்னு செலவுக்கு மேல செலவு ஆச்சு. அது தான் அந்த வீட்டைக் காலி பண்ணிட்டு மறுபடியும் உங்க ஏரியாவுக்கே வந்துட்டோம். புது வீட்டுக்கு வந்து ஒரு வாரம் தான் ஆச்சு. உங்களைப் பாத்ததிலே எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்’’ என்றாள் ராதா.

ராதாவின் பேச்சைப் பொறுமையாய் கேட்டுக் கொண்ட மீனா தனது தோழியிடம்

‘‘ராதா! நானும் நீயும் நடந்துகிட்டே பேசுவோம். நீ சொன்னதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும். கொஞ்சம் பொறுமையாய் கேளு. புது வீட்டுக்கு குடி போனது ராசி இல்லைன்னு சொல்லறே. அதிருக்கட்டும்.

புது வீட்டுக்கு குடி போனது மழைக்காலம். அதுவும் சரியான அடை மழை காலம். நகரப் பகுதியை விட்டு ரொம்பவும் தூரத்திலே புதுசாக் கட்டிய வீடுகள் எல்லாம் முற்காலத்திலே விவசாய நிலங்களா இருந்திருக்கும். கொஞ்சமான அளவு மழை வந்தாக்கூட தண்ணீர் தேங்கி நிற்கும். சேறும் சகதியும் அதிகமா இருக்கும். தண்ணீர் தேங்கி நிற்கும் சமயத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை தரும்.

மழைக் காலத்திலே உற்பத்தி ஆகிற நோய்களிலே புளூ காய்ச்சல், ஆஸ்துமா, மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா இதெல்லாம் முக்கியமானது. இந்த நோய்களை பத்தியெல்லாம் உனக்கு கொஞ்சம் கூடத் தெரியாதா? மழைக் காலத்தில் வீட்டை மாத்தக் கூடாது. அப்படீங்கிற விஷயம் தெரியாமல் வீட்டை மாத்திட்டு விதியை நம்பி, மூட நம்பிக்கையிலே ராசி இல்லாத வீடுன்னு’ சொல்றியே?’’ என்றாள் மீனா.

மீனாவின் விளக்கத்தை கேட்ட ராதா ,

‘‘மீனா அக்கா! நானும் 10–ஆம் வகுப்பு தான் படிச்சவ, மழைக்கால வியாதிகளைப் பத்தி ஓரளவு விவரம் தெரிஞ்சவள் தான். ஆனா, வசதியான வீட்டுக்கு குடி போகலாம்னு ஒரு ஆசையிலே தான் போனேன். புது வீட்டுக்கு போனதிலேயிருந்து நான், என் வீட்டுக்காரரு, மூணாம் வகுப்பு படிக்கிற சின்னப் பொண்ணுன்னு மூணு பேரும் சுகமில்லாம கஷ்டப்பட்டோம். உங்க மாதிரி அனுபவம் உள்ளவங்கிட்ட ஆலோசனை கேட்காதது தப்புதான்’’ என்றாள்.

அதற்கு மீனா ‘‘சிந்திக்கிற காரியத்தை சரியான நேரத்திலே சரியான வழியிலே செயல்படுத்தணும். செயல்பாட்டிலே வேகத்தோடு விவேகமும் வேணும் ராதா’’ என்றாள்.

மீனாவிடம் பேசியதில் மனம் தெளிவு பெற்ற ராதா நன்றி கூறி விடை பெற்று வீடு சென்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *