செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் மேயர் சரவணன் பதவி தப்பியது

கமிஷனர் தாக்கரே அறிவிப்பு

நெல்லை, ஜன. 12–

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வாக்களிக்க கவுன்சிலர்கள் வராததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக கமிஷனர் அறிவித்தார்.

நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 51 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 4 பேரும் உள்ளனர். நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மனுவில் கையெழுத்திட்ட கவுன்சிலர்களிடம் நேரில் விளக்கம் கேட்டார். தொடர்ந்து அவரது உத்தரவுப்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தாக்கரே அறிவித்தார்.

அமைச்சர்

சமரச முயற்சி

இதற்கிடையில், திமுக கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஈடுபட்டார். தமிழக முதல்வரால் நியமிக்கப்பட்டுள்ள மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். வாக்கெடுப்பில் யாரும்கலந்துகொள்ளக் கூடாது’ என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் சமரசத்தை திமுக கவுன்சிலர்கள் ஏற்றுக்கொண்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விருதுநகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே,கூடுதல் உடைகளை எடுத்துக்கொண்டு அப்துல்வகாப் எம்எல்ஏவின் அலுவலகத்துக்கு வாருங்கள்” என திமுக கவுன்சிலர்கள் 20 பேருக்கு தொலைபேசியில் நேற்று அழைப்புகள் வந்தன.

இதையடுத்து, மண்டலத் தலைவர்கள் மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூர்), இக்லாம்பாசிலா (மேலப்பாளையம்) மற்றும் கவுன்சிலர்கள் சிலர்நேற்று காலை எம்எல்ஏ அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கிருந்து விருதுநகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அதேநேரத்தில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பவுல்ராஜ் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் தனியாக விருதுநகருக்கு புறப்பட்டுச் சென்றது குழப்பத்தை ஏற்படுத்தியது. கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்பேரில், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஆலோசிக்க விருதுநகருக்கு இவர்கள் சென்றதாக கூறப்பட்டது.

ஒரு கவுன்சிலர் கூட

வரவில்லை

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு இன்று காலை 11 மணிக்கு மாமன்ற கூட்டத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நெல்லை மாநகர ஆணையாளர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் மாமன்ற கூட்ட அரங்கிற்கு காலை 10.30 மணியளவில் வருகை தந்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மாமன்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாக்கரே சுபம் ஞான தேவராவ் தெரிவித்துச் சென்றார். அதன்படி, 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் ஆரம்பமான நிலையில் ஒரு கவுன்சிலர்கூட மாநகராட்சிக்கு வரவில்லை. 5-ல் 4 பங்கு உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெறும். அரை மணிநேரம் வரை ஒரு கவுன்சிலர் கூட வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுமா? இல்லையா? என்ற பரபரப்பு ஏற்பட்டது. 44 உறுப்பினர்கள் பங்கேற்றால் மட்டுமே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதால் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற ஐயம் ஏற்பட்டது. அரைமணி நேரம் ஆகியும் எந்த ஒரு கவுன்சிலர் வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது என்று மாநகராட்சி கமிஷர் தெரிவித்தார். போதிய ‘கோரம்’ (உறுப்பினர்கள் பலம்) இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது என்றார். மேலும், மாமன்ற விதிப்படி அடுத்த ஓராண்டுக்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இயலாது என்று கூறினார். இதன்படி மேயர் சரவணன் பதவி ஒருவருடத்திற்கு தப்பியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *