சிறுகதை

நன்றி மறைந்த நாள் – ராஜா செல்லமுத்து

நேற்று இரவிலிருந்து பெமி கிறிஸ்டிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. பரபரப்பாகவே இருந்தாள்.

எப்படியும் பிழைக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கை பெமியின் மனதிற்குள் இருந்தது. பள்ளியில் இருக்கும் போதே அவளுக்கு நிலை கொள்ளவில்லை. ஆசிரியர்தான் என்றாலும் அவளுக்குள்ளும் ஒரு மனம் இருக்கிறது அல்லவா ? அந்த மனம் அவளைப் பாடாய்ப்படுத்தியது.

வீட்டிலிருக்கும் மகனுக்கு இரண்டு மூன்று முறை போன் செய்திருப்பாள் கட்டாே எப்படி இருக்கிறான் என்று?

இப்பப் பரவாயில்லமா. நல்லா இருக்கான் என்று பெமியின் மகன் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவளின் எண்ணமெல்லாம் கட்டாேவை எப்படியாவது காப்பாற்றிட வேண்டும் என்ற எண்ணம் அவளை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

5 மணிக்கு எல்லாம் பள்ளி முடிந்தவுடன் வேக வேகமாக சாப்பாட்டுக் கூடையும் ஹேண்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பினாள்.

சாதாரண நாட்களில் எல்லாம் பஸ்ஸில் வரும் பெமி இன்று ஆட்டோ பிடித்து வந்தாள்.

வரும் வழியில் எல்லாம் கட்டோவின் ஞாபகம் அவளைக் குடைந்தெடுத்தது.

எப்படி எல்லாம் உடன் இருந்தான். எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டோம் . அவன் செல்லச் சிணுங்கல்கள். அவனின் துறு துறு நடை, இதுவெல்லாம் இல்லாமல் போய் ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது .

அவனின் ஆயுள் அவ்வளவு தானா? அறிவியல் படி செல்களில் உயிர்ப்புப்படி கட்டாேவின் ஆயுள் காலம் இன்றோடு முடியப் போகிறதா ? இது என்ன கடவுளே கொடுமை. இன்னும் 20 ஆண்டுகள் ஏன் நாங்கள் இருக்கும் வரையில் கட்டாேவும் எங்களுடன் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே வந்தாள் பெமி.

நினைக்க நினைக்க அவள் அழுகையின் அடர்த்தி அதிகமானதேயாெழிய குறைந்த பாடில்லை.

அவள் அழுவதைத் திரும்பிப் பார்க்காத ஆட்டோக்காரன்

ஏன் மேடம் அழுறிங்க? என்றான்

அடிக்கடி அவள் ஏறும் ஆட்டோ இல்லை என்றாலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ஆட்டோவில் வந்திருக்கிறாள். அந்த ஓட்டுநர் அவளுக்கு கொஞ்சம் பரிச்சயம் தான். மறுபடியும் அந்த ஆட்டோக்காரன் திரும்பி பார்க்காமலே

மேடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டான்.

ஒன்றும் இல்ல என்று சொல்லியவாறு வழியும் கண்ணீரை இரு கைகளாலும் துடைத்துக் கொண்டாள்.

இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு சென்று விடலாம் .கட்டோவின் நிலைமை எப்படி இருக்கிறதோ? என்று அவள் மனது அலைபாய்ந்தது.

தூரங்கள் எல்லாம் துயரங்களாக மாறின. வீடு நெருங்க நெருங்க அவள் இதயத்துடிப்பு அதிகமானது.

ஆட்டோ டிரைவரிடம் ஒரு வார்த்தை கேட்டு வைத்தாள்.

நீங்க கொஞ்சம் என் கூட ஹாஸ்பிடலுக்கு வர முடியுமா? என்று பெமி கேட்க

கண்டிப்பா வரேன். ஏதாவது யாருக்காவது முடியலையா? என்று ஆட்டோ டிரைவர் கேட்க

ஆமா கட்டாேவுக்கு உடம்பு சரி இல்ல.

என்று பெமி சொல்ல

நிச்சயமா என்று சொன்ன ஆட்டோக்காரன்

பெமியின் வீட்டில் வட்டமடித்து நின்றான். வீடு வந்ததுதான் தாமதம் – பெமியின் கால்கள் இறக்கைகளாக பறந்தன.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் வளைய வளைய ஓடிவரும் கட்டோ இன்று வரவில்லையே ? நிச்சயம் இதுதான் அவனுக்கு கடைசி நாளாக இருக்கக் கூடுமோ என்று நினைத்த பெமி கட்டாே இருக்கும் இடத்திற்கு ஓடினாள்.

அது தன் வாலை மட்டுமே ஆட்ட முடிந்தது. கட்டோவிற்கு எழுந்து வந்து பெமியின் காலைச் சுற்றி வளைய வளைய வந்து நன்றியை தெரிவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் கட்டாேவிற்கு இருந்தது. எழுந்து பார்க்கத் எத்தனித்தான். முடியாமல் அப்படியே கீழே விழுந்தது .

வயோதிகத்தின் காரணமாய் அதன் சதைகள் எல்லாம் வலு விழுந்து கிடந்தன.

குழந்தையைப் போல கட்டோவைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள்; பெமி அழ ஆரம்பித்தாள்.

உனக்கு ஒன்னும் ஆகாதுடா நிச்சயமா உன்ன நான் காப்பாத்திடுவேன்

என்று தேம்பிய பெமியை மகன் பார்த்தான்.

வெளியில் ஆட்டோ நின்று இருப்பதை மறந்த பெமி கட்டாேவுடன் பரஸ்பரம் அன்பு பாராட்டிவிட்டு கட்டாவைந் தூக்கி ஆட்டோவில் ஏற்றினாள்.

அதுவரையில் மனிதர்களுக்கு தான் உடம்புக்கு முடியவில்லை போல. அதுதான் பெமி வரும் வழிகள் எல்லாம் புலம்பி அழுது கொண்டே வந்திருக்கிறாள் என்று நினைத்த ஆட்டோக்காரனுக்கு ஒரு நாயை ஆட்டோவில் ஏற்றவும் அவனுக்கு வியப்பும் ஆச்சரியமும் மேலிட்டது .

பெற்ற தாய் தகப்பனை கூட கண்டு கொள்ளாத இந்த உலகம், பணம் காசுக்கு மட்டுமே பாசமாக நடிக்கும் இந்த உலகத்தில் ஒரு நாயின் மீது இவ்வளவு கருணையா ? பெமியை நினைத்தபோது ஆட்டோக்காரனுக்கு அழுகையும் ஆச்சரியமும் ஒருசேரப் பற்றி கொண்டது

சீக்கிரம் போங்க என்று ஆட்டோக்காரனை விரட்டினாள் பெமி.

கிளினிக் முகவரியை கேட்ட ஆட்டோக்காரன் வேகமாக ஓட்டினான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஆட்டாே கிளினிக் வாசலில் நின்றது. ஆட்டோவில் வரும்போது கண்களை விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்த கட்டாே இப்போது கண்களை மூடி இருந்தது.

கட்டாேவைத் தூக்கிக் கொண்டு பெட் கிளினிக்குள் நுழைந்தார்கள்.

அப்போதுதான் கிளினிக்கை விட்டு வெளியேறக் காத்திருந்த அந்த மருத்துவர் கட்டாேவின் நிலையைக் கண்டு, பரிசோதனை செய்து பார்த்து உதடு பிதுக்கினார்.

டாக்டரின் செய்கையே இன்னதென்று பெமிக்குத் தெரிந்து விட்டது .

ஓவென அழுதாள். சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பெமியை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

இங்க பாருங்க, உங்களோட வலி வேதனை எனக்குப் புரியுது. ஆனா உன் நாயோட ஆயுட் காலம் பத்திலிருந்து, 13 வருஷம் தான். அதோட வாழ்க்கை முடிஞ்சுடும். கட்டாேவுக்கு இப்போ 14 வயசு தொடங்கி இருக்கு .உங்க அன்பால ஒரு வருஷம் அதிகமா உயிர் வாழ்ந்திருக்கு. அவ்வளவுதான்க உலகம். இது இயற்கை. இந்த பூமியில் தோன்றின எல்லா உயிர்களும் ஒரு நாள் சாகத்தான் வேணும் என்று மருத்துவர் சொன்னபோது

உயிர் பிரிந்த கட்டாே தரையில் கிடந்தது .

பெமியின் நினைவில் கட்டோ பால்குடி மறவாத குட்டியாக வாங்கி வந்ததிலிருந்து, இறக்கும் தருவாய் வரை அதனுடன் இருந்த எல்லா நிகழ்வுகளையும் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பெமி

அவளுடைய எண்ண அலைகளில் ஏகப்பட்ட நினைவுகள் வந்து வந்து போயின.

குட்டியாகத் தன் மடியில் தவழ்ந்து விளையாடிய கட்டாே இறக்கும் போதும் தன் மடியிலே இறந்ததை நினைத்துபோதும் தன் மடியிலேயே உயிர்விட்டதை நினைத்தும் சந்தோஷப்பட்டாள் பெமி.

மறுபுறம் ரொம்ப வருத்தப்பட்டாள். தன் பிள்ளைக்கு நிகராக வளர்த்த கட்டோ இன்று நம்மை விட்டுப் போய்விட்டது என்பதை நினைத்தபோது பெமிக்கு ஆறுதல் சொல்ல முடியாத சோகம் ஆட்கொண்டது.

சரி நான் கிளம்புறேன் என்று மருத்துவர் கிளினிக் விட்டு வெளியேற

உயிரை விட்டு, உடலாய்க் கிடந்த கட்டோவைக் கைகளில் ஏந்திய படியே அந்த கிளினிக்கை விட்டு வெளியேறினாள், பெமி

அப்போது பால்குடி மறவாத ஒரு நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு அந்த கிளினிக் குள்ள நுழைந்தாள் ஒரு தாய்.

அந்தக் குட்டியைப் பார்த்ததும் கட்டோவின் ஞாபகம் மறுபடியும் வந்துவிட அழுது கொண்டே வந்த ஆட்டோவில் ஏறினாள் பெமி

உயிரற்ற உடலாய் கிடந்த கட்டோவை மடியில் கிடத்தி அழுது கொண்டே வீடு நோக்கி நகர்ந்தார்கள்.

பெமியின் அழுகை மட்டும் நின்ற பாடில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *