சிறுகதை

நன்றி மறப்பது… | ராஜா செல்லமுத்து

‘‘உறவுகள் உதறிவிட்ட உறவுகள் – வேறு உருவில் வந்து சேரும்’’

* * *

அழுகையும் கண்ணீருமாக நடந்து வந்து கொண்டிருந்தாள் மஞ்சுளா. அவள் விழிகளில் விழுந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து கழுத்தின் வழியே வழிந்தோடியது. இருந்தும் அவள் கண்ணீரைத் துடைக்க முனையவேயில்லை. எதையும் லட்சியம் செய்யாது, வேகு வேகுவென நடந்து கொண்டிருந்தாள். அவள் அப்படி வந்ததை யாரும் பார்த்து யாரும் பின்னால் வரவே இல்லை. மாலை மயங்கி இரவுக்கு தயாரானது வானம்.

என்ன மனுஷங்க இவங்க?

இப்படியும் நெஞ்சிலே ஈரம் இல்லாமல் இருப்பாங்களா?

ஒரு பொண்ணு இப்படி நடந்து போறாளேன்னு யாரும் ஒத்த வார்த்த கேக்கல. என்ன ஆனாலும்? எப்படி போனாளோன்னு தெரியாது. அவங்க வீட்டிலேயும் பொம்பள புள்ளைங்க இருக்கத்தானே செய்யறாங்க. அவங்க இப்படி போனால் பாக்காம இருப்பாங்களா என்ன? என்ன ஆனாலும் சரி, நீ அந்த வீட்டுக்கு போகவே கூடாது.

வரதட்சிணை, அடுத்தவங்க பணத்தை புடுங்கிற கெட்ட எண்ணம், ச்சீ.. பணம் தான் இவங்களோட வாழ்க்கையா? போதும்… போதும்…. இவ்வளவு நாளா உங்க கூட குப்பை கொட்டுனது போதும். இனிமே அவங்க வீட்டில குடித்தனம் நடத்த முடியாது’ என்ற வைராக்கிய உணர்வோடு நடந்து கொண்டே இருந்தாள்.

ம்ஹுக்கும்…. ஒரு ஆள் கூட வரவே இல்லை. எப்படியெல்லாம் வாழ்ந்தோம். எப்படியெல்லாம் வளர்ந்தோம். ஆனா இங்க வந்து இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. கல்யாணம் பண்ணும் போதே இதெல்லாம் சொல்ல வேண்டியது தானே. இது என்ன வியாபாரமா? நினைத்த நேரமெல்லாம் பணம், நகை கேட்க. இவங்க வீட்டுல இருக்குற பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா, இப்படித்தான் விடுவாங்களா ? இல்ல இப்பிடித்தான் இவங்க பொண்ணுங்க கிட்ட கொடுத்து விடுவாங்களா? எங்கயோ பெறந்து, எங்கேயோ வளர்ந்து, எங்கேயோ வந்து இப்படி நாம சீரழிய வேண்டியிருக்கு. கடவுள் கண்டிப்பா இதுக்கு ஒரு வழிய சொல்லாம இருக்க மாட்டாரு என்று புலம்பிக் கொண்டே நடந்தாள்.

‘யாராவது ஒருத்தங்களுக்கு ஈரம் இருக்குமா’ என்று திரும்பிப் பார்த்தபோது, அவள் நெஞ்சில் ‘பக்’ என அடித்தது. மனிதர்கள் அல்லாத ஓர் உயிர், நன்றியின் வடிவாய் அந்த வீட்டிலிருந்த நாய் மஞ்சுளாவைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தது. நாலு கால் பாய்ச்சலில் அது மூச்சிரைக்க மூச்சிரைக்க மஞ்சுளாவை முன்னேறிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை மேலும் மேலும் கூடியது.

‘ ஓ ‘ என வாய்விட்டு அழுது அங்கேயே உட்கார்ந்தாள். முகத்தில் கை வைத்து குலுங்கி குலுங்கி அழுதாள். எங்கோ ஓடி வந்து கொண்டிருந்த அந்த நாய் மஞ்சுளா அருகே வந்து, அவள் முகம், கை, கால் என்று தொட்டுத் தடவி தன் மொழியில் ஏதேதோ சொல்லியது.

ச்சே, இந்த அஞ்சறிவு ஜீவனுக்கு இருக்கிற அன்பு கூட இந்த மனுஷங்களுக்கு இல்லையே என்று நாயின் கழுத்தை கட்டிக்கொண்டு அழுதாள். அந்த நாயும் மஞ்சுளா மீது ஏறியது. அவள் முகம் முழுவதும் தன் அன்பு எச்சிலை தொட்டு தொட்டு பாசம் பொழிந்தது.

என்னடா, உனக்காவது கொஞ்சம் ஈரம் இருந்துச்சே பணம், காசு தான் முக்கியம்னு அலையுற இந்த உலகத்துல நீயாவது அன்போட இருக்கியே, வா… என்று அந்த நாயுடனே நடந்து கொண்டிருந்தாள்.

நான், நீ என்னோட வீட்டுக்கு போறேன். எங்க அம்மா அப்பா கூடவே இருக்கேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இப்படியே வாழ்ந்து விட்டுப் போறேன். எவ்வளவு நாளைக்குத் தான் இந்த நிம்மதியில்லாத வாழ்க்கை வாழறது போதும்… போதும்… இதோட போதும்.. என்று நடந்தவள், ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றாள்.

வரும் பேருந்தை எதிர்நோக்கி நின்றவளை, அந்த நன்றியுள்ள நாய், மஞ்சுளாவையே பார்த்துக் கொண்டிருந்தது.

‘ என்னடா… ஏன் இப்படி பாக்குற?’ என்றபோது, நாயின் கண்களிலும் கண்ணீர் வந்தது.

‘ டேய்… என்னடா ‘ என்றும் மஞ்சுளாவும் சேர்ந்து அழுதாள்.

வரும் பேருந்தில் ஏறி உள்ளே போகும் போது,

ச்சே… இதுயென்ன நாய் வருது… என்று பேருந்திலிருந்த ஒரு சிலர் பேச ‘ ஐயய்யோ.. டேய் போடா கீழே இறங்கு இறங்கு என்று வளைய , வளைய வந்த நாய் மெல்ல கீழே இறங்கியது.

‘ நல்ல பாசமான நாயாயிருக்கும் போலங்க.. மனுஷங்க கூட அப்படியிருக்க மாட்டாங்க ‘ என்று பேருந்தில் இருந்தவர்கள் சொல்ல, மஞ்சுளாவிற்கு முன்னைவிட கண்ணீர் பொங்கியது மெல்ல மெல்ல நகர்ந்து பேருந்தின் பின்னாலேயே வந்து கொண்டிருந்தது அந்த நன்றியுள்ள நாய் மஞ்சுளாவின் கண்களில் முன்னைவிட இப்போது கண்ணீர் அதிகமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *