சிறுகதை

நன்றி மறக்காதவர் – எம்.பாலகிருஷ்ணன்

‘‘அப்பா நீங்க எப்ப ரிட்டையர்மென்ட் ஆகப் போறீங்க ’’ என்று மகன் செல்வன் தன் தந்தையிடம் கேட்டான்.

அதற்கு தந்தை முத்தையா ,‘‘ஏன் இப்படி திடீர்ன்னு கேட்குறே ’’எனக்கேட்டார்.

அதற்கு மகன், ‘‘சும்மா தெரிஞ்சிக்கலா முன்னு கேட்டேன்பா’’

நான் ரிட்டையர்மென்ட் ஆகுறதுக்கு இன்னும் ரெண்டு வருசம் இருக்கு என்றார் அப்பா.

அப்படியாப்பா என்று தன் மனதில் எதோ நினைத்தான்.

இதையறிந்த தந்தை முத்தையா ‘‘என்னடா பலமா யோசிக்கிறே ’’என்றுக் கேட்டார்.

‘‘இல்லப்பா நீங்க ரிட்டையர் ஆனதும் உங்களுக்கு பணம்வரும் அதுல நம்ம பணக் கஷ்டமெல்லாம் தீர்ந்திடுமே என்று சொன்னான் மகன் செல்வம்.

ஏன்டா இதுக்குத் தான் நான் ரிட்டையர் எப்ப ஆவேன்னு கேட்டியா. என் மேல் அக்கறையில தான் விசாரிச்சி யோன்னு நினைச்சேன். ஆனா நீ காசுக்காகத் தான் பேசுனேன்னு இப்பதான் புரியுது’’.

அப்பா அப்படி நினைக்காதீங்க. நம்ம குடும்பத்து மேல இருக்குற அக்கறையில தான் பேசினேன்’’.

அந்த நேரம் பார்த்து மனைவி தேவி வந்தாள்,‘‘ என்ன அப்பாவும் பிள்ளையும் காலையிலேயே வாக்குவாதம்’’ என்றாள்.

ஒன்னும் இல்லைம்மா நான் அப்பா கிட்ட எப்பப்பா ரிட்டையர் ஆகப் போறீங்கன்னு கேட்டேன். அவ்வளவுதான்

நீ தெரிஞ்சிகிட்டு என்ன பண்ணப் போற?. எதுக்காக இப்படி கேட்டேன்னு எனக்குத் தெரியாதா?

காசு பணம் வரும் அதுல ஜாலியா ஊர்சுத்தலாமுன்னு நினைச்சி கேட்டிருப்ப. முதல்ல நீ ஒழுங்கா வேலைக்கு போடா.

அம்மா இப்படி சொன்னதும் செல்வன் , ‘‘நான் வேலைக்கு போகமாட்டேன்னு சொன்னேனா? இப்பதைக்கு எனக்கு வேலை அமையல. எனக்கு வேலை கிடைச்ச உடனே நான் போகப்போறேன் என பதில்சொன்னான்.

‘‘வீட்டிலே இருந்தா வேலை எப்படி கிடைக்கும் நாலு இடத்தைதேடி போனாத் தானே கிடைக்கும் உன்ன மாதிரி பயல்களெல்லாம் படிச்சி உடனே கிடைக்கிற வேலைக்கு போறாங்க. நீ அவங்கள மாதிரி படிச்சித் தானே இருக்க. கிடைக்கிற வேலைக்கு போகலாமில்ல. உங்க அக்கா படிச்சி முடிச்சவுடனே வேலைக்கு போகுது . நீயும் போகலாமில்ல’’

அம்மாவின் அடுக்கடுக்கான கேள்விகளால் திக்கு முக்காடி போன மகன் செல்வத்தை பார்த்த தந்தை முத்தையா

தேவி விடும்மா. வேலை கிடைக்கிறப் போ செல்வம் போவான். பையனைத் திட்டாதே என்று அவர் சொல்ல

இப்படியே அவனுக்கு செல்லம் கொடுங்க என்று கூறிகொண்டே சமையல் கூடத்துக்குச் சென்று காபி போடப்போனாள் தேவி.

முத்தையா அரசு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களே சர்வீஸ் உள்ளது.

அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்றும் பெண் ஒன்றும்.

மூத்தது பெண் பிள்ளை. அவள் படித்து முடிந்ததும் தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் சென்டரில் பணிபுரிந்து வருகிறாள். இரண்டாவது செல்வம் இவன் படித்து முடித்து பல வேலைகளுக்கு முயற்சி செய்து பரீட்சையெல்லாம் எழுதியிருக்கிறான். ஆனால் இன்னும் அவனுக்கு வேலை அமையவில்லை.

அது வரை கிடைக்கும் வேலைக்குப் போகாமல் வீட்டில் சும்மா…. பல மாதங்களாக….. இருந்துகொண்டு வருகிறான்.

அதனால் தான் தேவி செல்வத்தை கோபமாக பேசினாள். ஆனால் கணவர் இருக்கும் போது கோபமாக பேசுபவள் அவர் இல்லாத சமயத்தில் கனிவுடன் பேசுவாள். ஏனென்றால் ஒரே ஆண்பிள்ளை யாச்சே.

முத்தையாவும் செல்வத்தின் மீது கோபப்பட்டாலும் அவரும் சில நேரங்களில் அனுசரித்துப் போவார்.

இரண்டு பிள்ளைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் செயல்படுகிறது.

மகன் செல்வம் அப்பா பணி ஓய்வில் கிடைக்கும் பணத்தில் பெரிய கோட்டையைக் கட்டலாம் என்று திட்டம் தீட்டியிருக்கிறான்.

முத்தையா பணி ஓய்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன. பணி ஓய்வுக்கு வேண்டிய முன் பணிகளை செய்து கொண்டிருந்தார்.

பணி ஓய்வுச் சான்று வாங்க அதிகாரிகளிடம் கையொப்பம் வாங்கும் பணிகள் மற்றும் பணிக் கொடை வாங்க கோப்புகளை தயார் செய்து அதை உரிய அதிகாரிகளின் ஒப்புதல் பார்வைக்கு அனுப்புவது என்று

எண்ணற்ற வேலைகளில் ஈடுபட்டார் முத்தையா.

ஆனால் மகன் செல்வம் அப்பாவின் பணி ஓய்வுக்கு வர வேண்டிய பணம் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தான்.

அப்பாவின் பணம் வந்தவுடன் சொந்தமா பிசினெஸ் ஆரம்பிக்க வேண்டும் எனவும் வட்டிக்கு பணம் கொடுத்து வாழ வேண்டுமெனவும் திட்டங்கள் போட்டிருந்தான்.

அதன் விளைவாக தன் அப்பாவிற்குத் தெரியாமல் அவர் அலுவலகத்திற்குச் சென்று பணி ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு பணம் வரும் என்று தெரிந்துகொண்டான்

முத்தையா பணி ஓய்வு பணத்தில் முதலில் மகளுக்குத் திருமணம் செய்துவிட்டு பிறகு மற்ற செலவுகளைப் பற்றி பார்ப்போம் என்று மனைவியிடம் பேசி வைத்திருந்தார்.

அன்று முத்தையா பணி ஓய்வு நாள். பரபரப்பான அந்த நாளில் அவருக்கு அலுவலகத்தில் சக பணியாளர்கள் ஒன்று சேர்ந்து பணி ஓய்வுக்கு விழா வைத்து மரியாதை செய்து வாழ்த்துகள் சொல்லி பிரியா விடைகொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

முத்தையாவிற்கு மனதில் வருத்தமாக இருந்தது. இவ்வளவு காலம் பணி பார்த்து கவலையில்லாமல் இருந்தோம். இப்படிப் பணி ஓய்வு வந்து வேதனை ஏற்படுத்துகிறதே என்று எண்ணிக் கலங்கினார். இருந்தாலும் என்ன செய்ய முடியும் . பணி ஓய்வு என்பது காலத்தின் கட்டாயமல்லவா என்று மனதைத் தேற்றிக் கொண்டார்.

செல்வம் ஏகப்பட்ட மகிழ்ச்சியிலிருந்தான். அப்பாவின் ஓய்வு பணம் அவன் கண்கள்முன் நின்று நிழலாடிக் கொண்டிருந்தது.

அலுவலர்கள் முத்தையாவை அவர் வீடு வரை அழைத்து வந்து விட்டுச் சென்றனர். மனைவி தேவி அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.

மறுநாள் முத்தையா வீட்டில் மனைவியையும் மகளையும் மகன் செல்வனையும் அழைத்துப் பணி ஓய்வில் தனக்கு கிடைத்த பண விபரங்களைப் பற்றியும் இதை வைத்து என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டுமெனவும் விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

முதலில் மகள் திருமண செலவுக்கு இவ்வளவு என்றும் குடும்பச் செலவுக்கு இவ்வளவு என்று முத்தையா பேசும்போது

மகன் செல்வம் இடையில் குறுக்கிட்டு,‘‘அப்பா உங்கள் ஓய்வுப்பணம் மொத்தம் எவ்வளவு வந்தது? எனக் கேட்டான். அதற்கு முத்தையா ஓய்வுப் பணமாக வந்த மொத்த தொகையைச் சொன்னார்.

அக்கா கல்யாணச் செலவு போக மீதம் எவ்வளவு

இருக்கும் ? என்று மறுபடியும் கேட்டான் செல்வம்.

முத்தையாவும் திருமண செலவு போக மீதமிருக்கும் தொகையைக் கூறினார்.

உடனே செல்வம் அப்பா நான் சொந்தமா பிசினெஸ் ஆரம்பிக்கலாமுன்னு இருக்கேன்; அதுக்குப் பணம் தேவைப்படுது.

‘‘நீ தான் கவர்மென்ட்வேலைக்கு எக்ஸாம் எழுதிட்டு வர்றேயில்ல. அப்பறம் எதுக்கு சொந்த பிசினெஸ்’’ முத்தையா கேட்டார்.

கவர்மென்ட் வேலைஅவ்வளவு சீக்கிரம் கிடைக்காதுப்பா. தனியார் வேலை தான் கிடைக்கும்.

அதுக்கு சொந்தமா பிசினெஸ் செஞ்சா நல்லாயிருக்கும்.

இதைக் கேட்ட முத்தையா அதெல்லாம் அப்புறம் பாக்கலாம். நீ இப் போதைக்கு ஏதாவது கிடைக்கிற வேலைக்கு போ என்றார்.

பிறகு மனைவி பக்கம் திரும்பிய முத்தையா,‘‘ தேவி முதல்ல மகளுக்கு கல்யாண வேலையை பார்ப்போம். நான் நாளைக்கு புரோக்கரை பாத்து நம்ம பொண்ணோட ஜாதகத்தை கொடுத்துட்டு வர்றேன் என்றுக் கூறியவர்.

டேய்… செல்வா நான் சொன்னதை மறந்திடாதே இப்போதைக்கு ஏதாவது வேலைக்கு போகப் பாரு. நானும் உனக்கு வேலைக்கு முயற்சி செய்றேன்; கவலைபடாதே என்று செல்வத்திடம் பேசினார்.

மறுநாள் காலை மகளுக்கு வரன் பார்க்க ஜாதக நோட்டுடன் முத்தையா கிளம்பினார்.

தமது இருசக்கரவாகனத்தை எடுத்து வழக்கமாக போகும் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது

முத்தையா ஒரு பழைய கட்டிடத்தை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார்.

அது சாதரண கட்டிடம் அல்ல அது அவர் படித்த ஊராட்சிப் பள்ளிக் கட்டிடம்தான் அது.

அவர் படிக்கும் காலத்திலிருந்த அழகான பள்ளிக்கூடம் இன்று சீர்குலைந்து காணப்படுகிறது. விரிசலான காட்சிகளுடன் எங்கும் பார்த்தாலும் குப்பைக் கூளங்களுடன் இருந்ததை பார்த்ததும் அவர்

அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் பள்ளியையே வெரித்து பார்த்தார். ஓடியாடி விளையாடிய பள்ளிக்கூடம்;

கல்வி சொல்லிக் கொடுத்த பள்ளிக்கூடம்; தமது வளர்ச்சியில் பங்கு கொண்ட நடுநிலைப்பள்ளி

ஆசிரியர்களின் அன்பும் கல்வி சேவையும் கடமையின் அர்ப்பணிப்பும் ஒரு தாய்ப்போல இருந்த பள்ளி இன்று அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டதே.

வயதான பெற்றோரை மறக்கும் சிலரை போல் இல்லாமல் அவர்களை பாதுகாக்கும் பிள்ளையாக நாம் ஏன் இருக்கக் கூடாது என்று நினைத்த முத்தையா கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த அவர்

வழக்கமாக இந்த வழியாக வேலைக்குப் போகும் அவர் பணி நினைவில் பள்ளிக்கூடத்தைக் கவனிக்க மறந்த அவர்

பணி ஓய்வில் தன்னை வளர்த்து ஆளாக்கிய பள்ளிக்கு நன்றி செலுத்தும் விதமாக தன்னால் எதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார் முத்தையா.

உடனே அவர் படித்தபள்ளிக்கு தமது இருசக்கர வாகனத்தை திருப்பி பள்ளிக்குள் நுழைந்தார்.

தற்போது இருக்கும் தலைமையாசிரியர் பார்த்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு தான் படித்த பள்ளிக் கூடத்துக்கு மராமத்து செலவையும் பராமரிப்பு செலவையும் தாமே ஏற்றுக் கொண்டார். மறுநாள் உடனே பணிகளை ஆரம்பித்து விட்டார்.

அவர் வீட்டில் அவர் குடும்ப ஆதரவுடன் சீர் குலைந்த பள்ளியை சீராய் ஆக்கினார் முத்தையா.

மாணவர்களும் ஆசியர்களும் பொது மக்ககளும் மனதார அவரின் சேவையைப் பாராட்டி வாழ்த்தினார்கள். வாழ்த்தியவர்கள் மூலமாகவே மகளுக்கு மாப்பிள்ளை கிடைத்தது. மகளுக்கும் திருமணமானது.

மகன் செல்வத்திற்கும் அரசாங்க பணிகிடைத்தது.

நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்று எண்ணி நன்றிப் பெருக்கோடு பெருமூச்சு விட்டார் முத்தையா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *