சிறுகதை

நன்றியுள்ள ஜீவன் – எம்.பாலகிருஷ்ணன்

வேலம்மா…. நம்ம வீட்டு முன்னாடி கட்டியிருந்த நாய்க்குட்டியை காணோமே எங்கே போச்சு? வீட்டுவாசலில் தமது இருசக்கர வாகனத்தை நிறுத்தியபடி மனைவியிடம் கேட்டார் சொக்கர். அவர் குரல் கேட்டு வீட்டினுள் இருந்த வேலம்மாள் வெளியேவந்து.

“அதை நான் தான் துரத்தி விட்டேன் ’’என்றாள்!

இதைக் கேட்டதும் சூடேறிக் கோபத்துடன்

‘‘ ஏன் விரட்டிவிட்டே’’ என்றார்.

“அந்த நாய்க்குட்டியால பெரிய தொந்தரவா இருக்கு. எந்த நேரமும் வள்வள்ளுன்னு கத்திக்கிட்டு இருக்கு. அந்த நாய் போடுறசத்தத்தில் தெருவுக்குள்ள இருக்குற நாய்கள் எல்லாம் நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னுகிட்டு சத்தம் போடுது. பத்தாததுக்கு நாய் உண்ணிக வேற வீட்டுக்குள்ள வருது. அதனால நானே அதை விரட்டி விட்டேன்” என்று சொல்லியதும் மேலும் சொக்கருக்கு ஆத்திரம் தலைதுக்கியது.

“அதுக்காக நாயை விரட்டிவிடலாமா? என்கிட்ட நீ கேட்டிருக்கனும்.

“நீங்க ஒரு நாள் வீட்ல இருந்து பார்த்தா தான் தெரியும். அதோட இம்சை காலையில போயிட்டு நைட்டு தானே வர்றீங்க. உங்களுக்கு எங்கே தெரியப் போகுது?” என்று பதிலளித்தாள் வேலம்மாள் சொக்கருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“பேச்சை நிப்பாட்டு வேலம்மா நாயை விரட்டு விட்டுட்டு வியாக்கனம் பேசுற’ என்றவாறே வீட்டினுள் நுழைந்தார் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

“இந்தாப்பாரு…. அந்த நாய்க்குட்டி மேல எவ்வளவு செல்லம் வச்சிருக்கிறேன்னு உனக்கு நல்லா தெரியும் . விரட்டி விட்ட நாய்க்குட்டியை நீதான் எப்படியாவது தேடி கண்டுபிடிச்சுக் கொடுக்கனும். இல்ல நான் உன்கிட்ட பேசவே மாட்டேன். ஆவேசமாக பேசிவிட்டு சொக்கர் மாற்று உடைகளை அணிய உள் அறைக்குச் சென்றார்.

“என்ன இந்த மனுசன் இப்படி இருக்காரு? சாதாரண நாய்க்குட்டிக்காக இப்படி கோபப்படுகிறாரு என்று முனங்கினாள். அதற்கு காரணமில்லாமலில்லை சொக்கர் அந்தச் சின்னஞ்சிறு நாய்க்குட்டி மீது அதீத அன்பு வைத்து வளர்த்து வந்தார். அதை தினந்தோறும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் பால் பிஸ்கட் கொடுத்து செல்லமாக தடவி மடியில் தூக்கி வைத்து கொஞ்சுவார். அந்த நாய்க்குட்டியும் அவரிடம் வாலாட்டி அவர் விரல்களை செல்லமாக கடித்து விளையாடும் சிறிது நேரம் விளையாடி விட்டுத் தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார்.

சொக்கர் தனியார் துறையில் வாட்சுமேனாகப் பணி புரிபவர். அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அவர்களுக்கு திருமணம் முடிந்து முன்னூறு மைல் அப்பால் வெளியூரில் இருக்கிறார்கள். சொக்கருக்கு இரண்டு பேரக்குழந்தைகள்; இவர் நாய்க்குட்டி மீது அளப்பரிய பாசம் வைத்திருப்பது இந்தப் பேரக்குழந்தைகளால் தான்! ஆம் பேரக்குழந்தைகள் மீது அவர் வைத்திருப்பது பாசம் என்று சொல்வதை விட பைத்தியமாக இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு தாய் தம் பிள்ளைகள் மீது வைக்கும் பாசம் போல் தம் பேரன்கள் மேல் ஆயிரம் மடங்கு பாசம் கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் தாம் தலைப்பிரசவம் பார்த்து அவர் வீட்டிலே மூன்று மாதங்கள் குழந்தைகளுடன் இருந்ததால் சொக்கர் சூரியன் மலர்கள் மீது ஒளி கொடுப்பது போலவும் நிலவு பூமிக்குக் குளிர்ச்சி கொடுப்பது போலவும் தமது பாசத்தை தமது பிரியத்தை பேரக்குழந்தைகள் மேல அன்பு செலுத்தி கொண்டிருந்தவராவார் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது முதலில் தமது பேரக்குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சி விளையாடுவார். அதுவும் மணிக்கணக்கில் பொழுதே போவது தெரியாமல். ஞாயிறு விடுமுறை வந்துவிட்டாலே அவருக்கு தீபாவளிப் பண்டிகை வந்ததுபோல்தான் அவ்வளவு குதூகலத்துடன் பேரக்குழந்தைகளுடன் ஐக்கியமாகிவிடுவார்.

பசி தூக்கத்தை மறந்திடுவார்; அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்வார். அவருடைய மகள்கள் தலைபிரசவத்திற்கு தாய்வீட்டிற்கு வந்து குழந்தைகளை பெற்று நான்கு மாதங்கள் ஆனது. பிறகு கணவர் வீட்டிற்கு மகள்கள் புறப்படும் நேரத்தில் அன்று அவர் அன்பான பேரக்குழந்தைகள் தம்மை விட்டு பிரியப் போகிறார்களே என நினைத்து ஓவென அழுதுவிட்டார்.

அதுவும் குழந்தைகள் போல் தேம்பித் தேம்பி அழ ஆரமித்தார். மனைவி வேலம்மாள் அவரைத் தேற்றி ஆசுவாசப்படுத்தினாள்

“விடுங்க நம்ம பிள்ளைக எங்க போகப் போறாங்க? அவங்க கணவர் வீட்டுக்குத் தானே கிணற்று தண்ணிய வெள்ளமா அடிச்சிட்டு போகப் போகுது? நம்ம பேரக்குழந்தைகள் திரும்பவும் இங்க தானே வரப் போறாங்க என்று ஆறுதல் சொல்வாள். ஆனாலும் சொக்கர் பேரக்குழந்தைகளை விட்டு பிரிவது அவர் எதையோ இழந்ததுபோல் இருந்தது. மகள்கள் கணவர்கள் வீட்டுக்குச் சென்ற அன்று இரவு முழுவதும் அவர் தூங்காமல் புலம்பிக் கொண்டிருந்தார்.

அன்றொரு நாள் சொக்கர் இதைப் பற்றி அவருடன் வேலை பார்க்கும் சக பணியாளர் நண்பரிடம் என்னால பேரக்குழந்தைகளை மறக்க முடியலப்பா சதா அவங்க நினைப்பா இருக்குப்பா’’ என்றார். அவங்கமேல வச்ச பாசத்த சாதரணமாக எதுத்துக்க முடியவில்லை.

அதற்கு அவருடைய நண்பர் “பேரப்பிள்ளைக மேலே பாசம் வைக்க வேண்டியதான் அதுக்காக இப்படி வெறித்தனமான பாசம் வைக்க கூடாதுப்பா. எந்த நேரமும் அவங்க நினைப்பா இருந்தாயின்னா இங்கே எப்படி நீ நிம்மதியா வேலை பார்க்க முடியும் என்றார்.

நண்பர் சொன்ன பதில் சொக்கருக்கு சரியாகப்பட்டாலும் நடைமுறையில் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீ சொல்வது சரிதான் ஆனால் என் மனசு அவங்கள மறக்க முடியலப்பா நான் அவங்கள தூக்கி கொஞ்சுனது என் மேலே சிறுநீர் அடிச்சது என்முதுகுல சவாரி போனது இப்படி ஒவ்வொரு விசயத்தை என்னால மறக்கமுடியலஎன்றார்.

நீ பேரக்குழந்தைகள் நினைப்பாலே இருக்கேயில்ல. உனக்கு பேரக்குழந்தை மாதிரி வீட்டில கொஞ்சி விளையாட ஒரு நாய்க்குட்டியை வாங்கி வளர்த்துவா. நீ தினமும் அந்த நாய்க்குட்டியோட கொஞ்சி விளையாடு. உனக்கும் மனசு ஆறுதல்டையும் என்ன சொல்றே’’

நண்பர் சொன்ன யோசனை சொக்கருக்கு பிடித்திருந்தது.

அவர் அதையே செய்தார்.

*

அன்று வெள்ளிக்கிழமை

சொக்கர் வழக்கம் போல் காலையில் வேலைக்குச் சென்று விட்டார். வேலம்மாள் ஊரிலிருந்து இருபது கிலோமீட்டர் தள்ளி உள்ள ஒரு பிரசித்திப் பெற்ற அம்மன் கோவிலுக்கு போவதற்கு முடிவெடுத்து கோவிலுக்குச் சென்று விட்டாள். கோவிலில் பக்தர்கள் கூட்டம் பெரும் திரளாக இருந்தது. வேலம்மாள் மணிக்கணக்காக வரிசையில் அர்ச்சனை தட்டோட காத்திருந்து ஒரு வழியாக சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டு ஊர்வந்து சேர்வதற்கு இரவு ஏழுமணியாகிவிட்டது.

மெயின் ரோட்டிலிருந்து அவள் வீட்டுக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவு ஆட்டோ பஸ் வரவில்லை; ஒரே நிசப்தமாக இருந்தது.

அந்த நீளமான தெருவில் இரவில் தனியாக நடந்து வந்தாள். அன்று மின்தடை ஏற்பட்டது. தெரு விளக்குகள் எதுவும் எரியவில்லை. எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. வேலம்மாள் மட்டும் அந்த வேளையில் நடந்து வந்தாள். ஆட்கள் நடமாட்டமே இல்லை; அவளுக்கு அச்சமும் பயமும் ஏற்பட்டது. யாரவது ஓர் ஆள் வந்தாலும் அவரிடம் பேச்சுக்கொடுத்து வீடுவரை போகலாமே! அதற்கு வழியில்லாமல் போய்விட்டது . அவளுக்கு நடக்க நடக்க பீதியும் அதிர்ச்சியும் சேர்ந்தது மனதில். அவள் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாள். அம்மனை நினைத்து வாறே மெதுவாக இருள் நேரத்தில் ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து வந்து கொண்டிருந்தாள். எங்கோ நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டது.

அப்போது ஒரு கட்டத்தில் அவள் சந்து திருப்பத்தில் நடந்து வரும் போது திடீரென்று இரண்டு மர்ம மனிதர்கள் வேகமாக பாய்ந்தவாறே வேலம்மாவை நோக்கி வந்து அவள் வாயையும் கைகளையும் பிடித்தனர்! திகைத்து போன அவள் கத்தினாள். அவள் சத்தம் வெளியே கேட்காமலிருக்க அவள் வாயைப் பொத்தினான்.

அவளது கழுத்தில ஒருவன் பெரிய கத்தியை அழுத்தியபடி கழுத்தில் இருக்கிற செயினை ஒழுங்கா கழற்றிக்கொடு இல்லையின்னா உன் கழுத்தை அறுத்துடுவேன் என்று மிரட்டினான்.

வந்திருப்பவர்கள் திருடர்கள் தான் என்று தெரிந்து கொண்டு அய்யோ திருடன் திருடன் என்று கத்துக் கூச்சலிட்டாள். அவளது அலறல் சத்தம் இரவு நேரத்தில் எவர் செவிகளில் விழவில்லை. கழுத்தில் கத்தி வைத்தவன் அவளை இரும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டே நீ உயிரோடு போக முடியாது என்று அவளை எச்சரித்தான்.

இன்னொருவன் ‘டேய் இவகிட்ட என்ன பேச்சு வேண்டி கிடக்கு கழுத்துல கீரல் போடு அப்பதான் பயந்து நகையை கழட்டிக் கொடுப்பா என்று கூறி முடிப்பதற்குள் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு வெள்ளை நிற நாய் ஒன்று பெரும் சத்தத்துடன் குலைத்துக் கொண்டே வேகமாக வந்தது.

அந்த நாய் புயல் போல் சீறி அந்தத் திருடர்கள் மீது பாய்ந்து தாக்கிக் கடிக்க அவர்கள் அய்யோ அம்மா என்றுக் கத்திக்கொண்டு ஓட ஆரம்பித்தனர்.

இருந்தாலும் அந்த நாய் அவர்களை விடாமல் துரத்தி துரத்திக் கடித்தது. வலி தங்கமுடியாமல் கத்தியை கீழே போட்டுவிட்டு ஆளை விட்டால் போதும் என்று தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு ஓடி இருளில் மறைந்தனர். அந்த நேரம் மின்தடையால் எரியாமல் இருந்த தெரு விளக்குகள் மீண்டும் அனைத்து விளக்குகளும் எரியத் தொடங்கின.

அந்தத் திருடர்களை ஊர் எல்லை வரை விடாமல் துரத்தி விட்டு அந்த வெள்ளை நிற நாய் திரும்பவும் வேலம்மாவை நோக்கி வேகமாக வந்தது. அவள் அருகில் வந்து நின்றதை பார்த்த வேலம்மாள் அதிர்ச்சியில் உறைந்து சிலையாக நின்று விட்டாள். ஆம் அந்தத் திருடர்களை ஓட ஓட விரட்டிவிட்டதுஅந்த நாய்.

அது வேலம்மாவால் விரட்டி அடித்து விரட்டப்பட்ட அவள் வீட்டு நாய்தான்! சொக்கரால் வளர்க்கப்பட்ட தேடப்பட்ட அதே செல்ல நாய் தான் அது!

வேலம்மாள் நாயை பார்த்து உன்னை அடிச்சி விரட்டினேன் ஆனா நீ என்னை சரியான நேரத்தில் வந்து காப்பாத்திட்ட . சுற்றி வீடுகள் இருக்கு. ஆனா ஒருத்தர் கூட என்னை காப்பாத்தவரலை. நீ வந்து என்னை காப்பாத்திட்ட . நீ மட்டும் வராமலிருந்தால் என் கழுத்த அறுத்திட்டு போயிருப்பார்களே…. என்று கண்ணீர் மழையாய் சிந்தி கதறி அழுதாள் தெருவில் குடியிருப்பவர்களில் சிலர் அவளுக்கு ஆறுதல் கூறி அவளைத் தூக்கி ஒரு வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்தனர்.

இந்த விசயத்தை கேள்விப்பட்டவுடன் சொக்கர் விரைந்து அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

கூட்டத்தில் அவரைப் பார்த்த அவருடைய செல்ல நாய் ஓடி வந்து அவரின் அருகில் வந்து வாலாட்டி நின்றது! அதை பார்த்த உடனே சொக்கருடைய முகம் மகிழ்ச்சியால் வளர்பிறையை போல பிரகாசமானது.

பல நாட்கள் தாயைப் பிரிந்த பிள்ளை போல அந்த நாய்க்குட்டி அவரை நாக்கால் அவரின் முகத்தை நக்கியது. இதைப் பார்த்த வேலம்மாள் சொக்கரிடம் நடந்த விசயத்தை கூறி அழுது நம்ம நாய் தாங்க திருடன்களிடமிருந்து என்னை காப்பாத்திச்சு. என்னை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்ன மாதிரி இது நாய் இல்லை; நம்ம பிள்ளை ; நம்ம குலசாமி என்றவாறே அவரிடம் இருந்து நாயை தூக்கி அவள் வைத்துக் கொண்டாள். அப்போது சொக்கர் இப்பயாவது உனக்கு புத்தி வந்ததே என்று அன்பாக ஆறுதல் கூறினார்.

எல்லா உயிர்களுக்கிட்டையும் அன்பா இருந்தோமுன்னா அதுவும் நம்மகிட்ட அன்பா இருக்கும்.எந்த நாயை நீ கோபத்துடன் அடிச்சு விரட்டினீயோ இன்னைக்கு அந்த நாய் உன்ன காப்பாத்திருக்கு. ஐந்தறிவு உள்ள இது ஆறறிவு உள்ள உனக்கு புத்தி புகட்டிருக்கு. இனிமேலாவது நாய் மேல அன்பா நடந்துக்க என்று அவளுக்கு புரியும்படி கூறி வேலம்மாளை நாயுடன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *