சிறுகதை

நன்றிக்கடன் | கரூர் அ. செல்வராஜ்

ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தைத் தனது செல்பேசியில் அழைத்துப் பேச ஆரம்பித்தார் ஜெயராமன்.

‘ஹலோ! ஆனந்தா?’

‘ஆமாங்க அய்யா, பேசறது ஜெராமன் அய்யாதானுங்களே?’

‘ஆனந்த்! நான் தான் பேசறேன். அவசர விஷயமா என் மகள் வீட்டுக்குப் போகணும்பா. என் வீட்டுக்கு வாப்பா’

‘சரிங்க அய்யா! அடுத்த 10 வது நிமிஷம் உங்க வீட்டில இருப்பேன். சரிங்க அய்யா போனை வச்சிடறேன்’ என்று பேசி முடித்துவிட்டு ஆட்டோவை கிளப்பிக் கொண்டு ஜெயராமன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஆட்டோ ஆனந்த்.

ஆட்டோவில் பயணம் செய்யத் தயார் நிலையிலிருந்த ஜெயராமன் தனது வீட்டுக்கு ஆனந்தின் ஆட்டோ வந்து சேர்ந்ததும் அதில் ஏறி வசதியான நிலையில் அமர்ந்தார் ஜெயராமன்.

ஆட்டோவில் ஜெயராமன் ஏறி அமர்ந்து கொண்டதும் அவரிடம் பேசத் தொடங்கினான் ஆனந்த்.

‘அய்யா!’

‘சொல்லுப்பா ஆனந்த்’

‘மகள் வீட்டுக்குப் போகணும்னு சொன்னீங்க. ஆனா, பெரிய மகள் பிரியா வீட்டுக்கா? சின்னமகள் ஜெயச்சித்ரா வீட்டுக்கா? எந்த மகள் வீட்டுக்குப் போகணுமின்னு சொல்லுங்க அய்யா’ என்றான் ஆனந்த்.

ஆட்டோ ஆனந்துக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் ஜெயராமன்.

‘தம்பி ஆனந்த்! அவசரத்திலே அதைச் சொல்ல மறந்துட்டேன்பா. என் சின்ன மகள் ஜெயச்சித்ரா வீட்டுக்குத் தான் போகணும். இந்தப் பாக்கெட் டைரியிலே முக்கிய நபர்களின் வீட்டு அட்ரஸ், செல்போன் நம்பர் எல்லாம் எழுதி வச்சிருக்கேன். அதிலே சின்ன மகள் ஜெயச்சித்ரா வீட்டு அட்ரசும் புதுசா இருக்கும் பாரு’ என்றார் ஜெயராமன்.

அன்பான வாடிக்கையாளர் ஜெயராமன் தந்த அட்ரசைப் படித்துப் பார்த்தும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்து மிதமான வேகத்தில் ஓட்டிச் சென்றான் ஆனந்த்.

ஆட்டோ தனது சீரான வேகத்தில் சாலையில் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் ஆனந்த் வழக்கம் போல பேசத் தொடங்கினான்.

‘அய்யா! உங்க சின்ன மகள் ஜெயச்சித்ரா வீட்டை மாத்திட்டு புது வீட்டுக்குப் போயிருக்கிற விஷயத்தை அட்ரசைப் பாத்துத் தெரிஞ்சு கிட்டேன். அது சரி, சின்ன மகள் வீட்டுக்கு நீங்க மட்டும் தனியாப் போறீங்க, அம்மா வரலியே?’ என்று கேட்டான் ஆனந்த். அதற்கு ஜெயராமன் தனது பதிலாக ‘ஆனந்த்! என் மனைவி நேத்து திடீர்னு கிளம்பி பெரிய மகள் பிரியா வீட்டுக்குப் புறப்பட்டுப் போயிருக்கா. அவள் ஊரிலிருந்து திரும்பி வீட்டுக்கு வர்றதுக்கு கொறஞ்சது மூணு நாள் ஆகும்’ என்றார்.

அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு சின்ன மகள் ஜெயச்சித்ரா வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஜெயராமன்.

ஆட்டோவை வெயிட்டிங்கில் இருக்கச் சொல்லிவிட்டு சின்ன மகள் வீட்டுக்குள் நுழைந்தார். அவரை வரவேற்று, வழக்கமான நல விசாரிப்புகள் விசாரித்து, டீயைக் கொடுத்த ஜெயச்சித்ரா தனது அப்பா திடீரென வீட்டுக்கு வந்திருப்பது ஏன்? எதற்கு? என்று யோசிக்கத் தொடங்கினாள்.

டீயைக் குடித்து முடித்து விட்டு காலியான டம்பளரை மகளிடம் தந்து விட்டு

‘ஜெயா’

‘சொல்லுங்க அப்பா’

‘உன் மகன் அதாவது என் செல்லப் பேரனுக்கு நடந்த முதலாவது பிறந்த நாளுக்கு என்னாலே நேரில் வந்து கலந்துக்க முடியலே’

‘ஆமாப்பா, அந்த நேரத்தில் உங்களுக்கு உடம்பு சரியல்லாமே ஆஸ்பத்திரியிலே இருந்தீங்க. அதனால் தான் உங்களால் வர முடியலே. அதனாலே யாருக்கும் எந்த வருத்தமும் இல்லப்ப’

‘ஜெயா கண்ணு! நான் ஆஸ்பத்திரியிலே இருந்தபோது மாப்பிள்ளை கூட என் மருத்துவச் செலவுக்காக 30 ஆயிரம் பணம் செலவு செஞ்சிருக்காரும்மா. அந்தப் பணத்தை திருப்பித் தரலாம்னுதான் இப்ப, இங்கே வந்தேன். ஆனா, அந்தப் பணத்தை நீ வாங்கிக் மாட்டே, அதனாலே இன்னொரு யோசனை செஞ்சேன். அந்தப் பணத்தை என் செல்லப் பேரன் கையிலே தர்றேன். அந்தப் பணத்திலே குறைஞ்சது அரை பவுன் மோதிரமாவது வாங்கிக் குடும்மா. என் செல்லப் பேரனுக்கு செய்ய வேண்டியது என் கடமை. அப்பாவுக்கு மகள் செஞ்ச மருத்துவச் செலவுப் பணத்தை நான் திருப்பிக் குடுத்தா அது கடன். ஆனா, அந்தப் பணத்தை ‘நன்றிக் கடன்!’ அப்டீங்கிற பேர்லே நான் தர்றேன். தயவு செய்து மறுக்காமல் வாங்கிக்கம்மா. பணத்தை வாங்கிக்க என் செல்லப் பேரனை வரச்சொல்லும்மா’ என்றார் ஜெயராமன்.

அப்பா சென்னதைத் தட்ட முடியாத மகள் ஜெயச்சித்ரா தனது மகனை அழைத்து வந்து 30 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளச் செய்தாள்.

வந்த வேலை சுபமாக முடிந்ததும் மகளிடமும் பேரனிடமும் சொல்லிக்கொண்டு ஆட்டோவில் பயணம் செய்து தன் வீட்டுக்கு மிகவும் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார் ஜெயராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *