செய்திகள்

‘‘நன்றாகப் படியுங்கள்; வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல பெயர் வாங்கித் தாருங்கள்’’: அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவுரை

சென்னை, ஜூலை 20

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ் ஆர் எஸ் வித்தியா மந்திர் பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாணவ, மாணவிகள் 70 பேர், நேற்று தமிழக சட்டசபைக்கு வந்திருந்து சுமார் ஒரு மணிநேரம் சபை நடவடிக்கைகளை பார்த்து மகிழ்ந்தனர்.

சட்டசபை எப்படி நடைபெறுகிறது? உறுப்பினர்கள் எப்படிப் பேசுகிறார்கள்? சபாநாயகர் எப்படி சபையை நடத்துகிறார்? வைக்கப்படும் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள்? என்று சுமார் ஒரு மணிநேரம் சபையில் தங்கி இருந்து நடவடிக்கைகளை மாணவர்கள் கண்டு களித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி வடகடாம்பாடி பகுதியில் மாமல்லபுரம் – திருக்கழுகுன்றம் சாலையில் அமைந்துள்ளது எஸ். ஆர். எஸ். வித்யாமந்திர். இப்பள்ளியை நிர்வகிக்கும் எஸ் கே கல்வி அறக்கட்டளையின் செயலாளரும் செட்டிநாட்டு அரசர் மறைந்த எம். ஏ. எம்.ராமஸ்வாமியின் தனிச் செயலாளருமான ராஜேந்திரன், பள்ளியின் துணை முதல்வர் சுபாஷினி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஏழு ஆசிரியைகளுடன் மாணவ மாணவிகள் நேற்று சட்டசபைக்கு வந்தார்கள்.

சபை நடவடிக்கைகளை பார்த்துவிட்டு விடை பெற்ற மாணவர்கள் மத்தியில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சிறிது நேரம் கலந்துரையாடினார். அவர்களிடம் அனுபவம் பற்றிக் கேட்டறிந்தார்

‘எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகள் நீங்கள். வளமான – அமைதியான தமிழகத்தை இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் நீங்கள். சட்டசபை நடவடிக்கைகளை நேரில் பார்த்து கண்டறிவதற்காக வந்திருக்கும் உங்கள் ஆர்வத்தை மனம் திறந்து பாராட்டுகிறேன். அதற்கு அழைத்து வந்திருக்கும் ஆசிரியப் பெருமக்களையும் பாராட்டுகிறேன்’ என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

படிப்பில் கவனம் வை

‘நேரம் தவறாமை இருக்க வேண்டும் படிப்பில் கவனம் இருக்க வேண்டும்; உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்; உங்களுடைய கல்வி பள்ளி வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டம். நீங்கள் பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் காலகட்டம் மிக முக்கியம். அந்த ஆண்டிலிருந்து +2 முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் வரை உங்களுடைய காலம் பொன்னான காலம். அதை நேர் வழியில் பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவுரை கூறினார்.

‘அந்த மூன்றாண்டு காலம் தான் ஒரு மாணவ – மாணவியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய முக்கிய காலகட்டம். ஆகவே நீங்கள் படிப்பு ஒன்றிலேயே கவனமாக இருந்து நன்றாக படிக்க வேண்டும். அம்மா – அப்பா இருவரையும் மதித்து, குருவின் பேச்சை கேட்டு நடந்து பள்ளியிலும் வீட்டிலும் நல்ல பிள்ளை என்று பெயர் எடுக்க வேண்டும்.

நன்றாகப் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் நீங்கள் வருகிறபட்சத்தில் உங்களுக்கு மரியாதை கூடும். அப்பா அம்மாவுக்கு அதிகம் சிரமம் இல்லாமல் நீங்கள் படிப்பதனால் கல்லூரிகளில் சுலபமாக இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆகவே கிடைக்கிற நேரத்தை வீணாக்காமல் கல்வியிலேயே முழு கவனம் வைத்து படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கிராம மாணவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்த…

அடுத்த ஆண்டு அதாவது 2020 இப்பள்ளியிலிருந்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முதல் பேட்ச் மாணவர்கள் வருகிறார்கள். ஆகவே முன்கூட்டியே அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார் அமைச்சர் அன்பழகன்.

கிராமப்புற மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கத்தோடு எஸ்ஆர்எஸ் வித்யாமந்திர் பள்ளியை 2013ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி துவக்கினார் எஸ் ராஜேந்திரன். தன்னுடைய தந்தை எஸ். கைலாசம் மற்றும் தாயார் சாரதாம்பாள் கைலாசம் நினைவாக சரோஜினி ராஜேந்திரன் உருவாக்கியிருக்கும் எஸ். கே.கல்வி அறக்கட்டளை செயலாளராக கணவர் ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர் செட்டிநாடு அரசர் எம்ஏஎம் ராமசாமியின் குடும்பத்தோடு 40 ஆண்டு காலம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறைகள், மைதானம், நூலகம், ஆய்வுக்கூடம் ஆகியவற்றுடன் விசாலமான காற்றோட்டமான அறைகளைக் கொண்டுள்ளது இப்பள்ளி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *