சிறுகதை

நன்மைகள் தோற்பதில்லை ! – எம் பாலகிருஷ்ணன்

Makkal Kural Official

அன்று. மாலை கடற்கரையில் கவலை தோய்ந்த முகத்துடனும் மனம் தேய்ந்த நிலையிலும் பலத்த சிந்தனையில் கடல் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருந்தார் மகேசுவரன்.

வீட்டில் நடந்த நினைவலைகள் அந்தக் கடலலைகளைக் காட்டிலும் அவர் மனதில் வேகமாக அடித்தது.

அன்று அவர் வீட்டில் நடந்த சம்பவங்கள் உயிர் பெற்று நிழலாடி பின்னோக்கி மனத்திரையில் ஓடத்தொடங்கியது.

” ஏங்க. நீங்க. என்னைக்கு வேலையிலிருந்து ரிட்டையர் ஆனீங்களோ‌ அன்னியிலிருந்து வீட்டுல ஒரே பிரச்சினை தான்” என்று ஆதங்கத்துடன் கணவன் மகேசுவரனிடம் பேசினாள் மனைவி செல்வி.

“என்னால என்ன பிரச்சினை? அதுதான் நான் ரிட்டயர் ஆகி வந்த பணத்தையெல்லாம் உனக்கும் பிள்ளைகளுக்கும் செட்டில்மென்ட் பண்ணிட்டேன்னில்ல அப்புறம் என்ன பிரச்சினை?”

“காசு பணமெல்லாம் கொடுத்தா போதுமா? ஒரு விவரமில்லாம இருக்கீங்களே!”

“என்ன விவரமில்லாம இருக்கேனா? என்கிட்ட என்ன குத்தம். கண்டுபிடிச்சே ?”

நீங்க வீட்டிலே ஒழுங்கா இருக்கீங்களா? நீங்க பாட்டுக்கு ஊருக்கு நல்லது செய்றேன்னு போயி ஊர் பிரச்சினையை இழுத்துட்டு வர்றீங்க!”

“என்ன சொல்ல வர்ற? எனக்கு ஒன்னும் புரியலை!”

“ஆமாங்க உங்களுக்கு “ஒன்னும் தெரியாதுங்க அதை என் வாயால வேற சொல்லனுமுன்னு எதிர் பார்க்கிறீர்களா?

தெருவுக்குள்ள யாரோ. எப்படியோ‌ போனா உங்களுக்கு என்ன? பிளாஸ்டிக் பை இருக்கக்கூடாது. பழைய எண்ணெயில பலகாரம் சுடக்கூடாது அப்பிடின்னு சொல்லி உங்க குடியிருப்போர் சங்கத்துல இருந்து கடை கடையாப் போயி அதிகாரமாக சொல்லிட்டு வந்துட்டீங்க. தெருவுல இருக்கிற கடைக்காரங்க நம்ம வீடு தேடி வந்து உன் புருசன்கிட்ட சொல்லி வையும்மா. எங்க பொழப்புல கை வைக்கிறாருனு சோல்லி என்னை மிரட்டிட்டு போறாங்க.

ஏங்க. நான் தெரியாமத் தான் கேட்குறேன். உங்க வாலை சுருட்டிட்டு, பேசாம இருக்க மாட்டீங்களா?

நீங்க இதெயெல்லாம் ஏன் கேட்கிறீங்க? நீங்க என்ன நகராட்சி அதிகாரியா? இதையெல்லாம் அதிகாரிகள் பாத்துக்குவாங்க.

நீங்களும் உங்க சங்கத்துக்காரங்களும் எதுக்கு கடைக்காரங்க கிட்ட போயி கெட்ட பேரு வாங்குறீங்க? அவங்கயெல்லாம் உங்க சங்கத்து மேல கொலை வெறியோடு இருக்காங்க!

அவனவன் காசைபோட்டு நாலு காசை சம்பாதிக்க பாப்பாங்களா இல்ல கடையை மூடிட்டு போவாங்களா?” என்று மனைவி செல்வி மகேசுவரனிடம் காராசாரமாக பேசினாள் மனைவி செல்வி.

இதைக் கேட்ட மகேசுவரன் “அடியே செல்வி! நான் ஒன்னும் கெட்ட விசியத்துக்கு போகலை! நல்ல விசியத்துக்குத்தான் போனேன் “

எதுங்க நல்ல விசியம்? நாலு பேரு வீடு தேடி வந்து நம்மை மிரட்டிட்டுபோறதா நல்ல விசயம்? “

“அடியே செல்வி !நல்ல விசியத்தை யாரு வேணுமுன்னாலும் செய்யலாம்; நான் தனிப்பட்ட‌ முறையில போயி கேட்கலையே!

எங்க சங்கம் மூலமாத் தானே ; அதுவும் நகராட்சி அதிகாரியோட சேர்ந்து போனோம்.

பிளாஸ்டிக் பைகளை கடையில பார்சலுக்கு பயன்படுத்தாமல், துணிப்பையைத்தான் பயன்படுத்தனுமுன்னு சொன்னோம். ஏன்னா பிளாஸ்டிக் பையை பொது மக்கள் யூஸ் பண்ணி அப்படியே கண்ட இடத்துலே போட்டுட்டு போயிடுவாங்க.

அதை மாடுக ஆடுக தின்னுட்டுட்டு அதுக்கு பாதிப்பாகுது. பிளாஸ்டிக் பைகளை சிலர் வாய்க்கால்கள்ள போடுறாங்க. அதனால் வாய்க்கால அடைச்சி தண்ணீ போகமா கொசுக்கள் உற்பத்தியாகுது. இதெல்லாம் உனக்குத் தெரியுமா?”

“சரிங்க இதெல்லாம் கண்டிச்சி கேட்குறதுக்கும் அதிகாரிக இருக்காங்கள்ள; நீங்க ஏன் கேட்கிறீங்க ?

அது மட்டுமா நீங்க பலகார சுடுற கடைக்காரங்களையும் நீங்க விட்டு வைக்கலையே.

அவங்க கிட்ட‌ போயி பலகாரத்தை பழைய எண்ணெயில சுடக்கூடாது. சுத்தமான எண்ணெயில சுடுங்கன்னு வேறசொல்லிட்டு வந்திட்டீங்க. அவங்களும் நம்ம வீட்டுக்கு வந்து சத்தம் போட்டுட்டு போறாங்க !”

“ஆமாடி பலகாரக் கடைக்காரங்க பலகாரத்தை பழைய எண்ணெயில சுடுறதுனால வாங்கி சாப்பிடுற பொது மக்களுக்கும் படிக்கிற சின்ன பசங்களுக்கும் நோயி வரக்கூடிய வாய்ப்பிருக்குறதுனால நாங்க எங்க சங்கத்து மூலமாக கேட்டோம் அதுல என்ன தப்பு?”

“ஏங்க ஊர்ல ஆயிரம் இடத்துலே தப்பு நடக்கும். அதெல்லாத்தையும் நாம சரிப்படுத்தமுடியுமா ?”

நம்ம கண்ணுமுன்னால நடக்குற தப்பையும் அதுவும் நம்ம குடியிருக்குற தெருவுல நடக்குறதை பாத்துட்டு சும்மா இருக்கமுடியுமா ?”

சும்மாதாங்க இருக்கணும்; நாளைக்கு எதாவது பிரச்சினை ஆயிட்டா உங்க சங்கத்துக்காரங்களா நம்மல காப்பாத்துவாங்க?”

“அப்படியெல்லாம் ஆகாதுடி! எங்க சங்கத்துக்காரங்க அப்படி நடக்க விடமாட்டாங்க !”என்று மகேசுவரன் பிடிவாதமாக பேசினார்.

“அப்போ நான் சொல்லுவதைகேட்க மாட்டீங்க? சரி நீங்க உங்க இஷ்டம்போலத்தான் செய்வீங்க?”

“ஏண்டி செல்வி இதை ஏன் பெரிய விசியமா பாக்குறே? நீ நினைக்கிற மாதிரி எதுவும் ஆகாது!”

“அப்படியா‌? சரி நான் சொல்லுறதை கேட்கமாட்டீங்க! இல்ல அப்ப நான் இந்த வீட்டில இருக்கல‌ ; நீங்களே உங்க இஷ்டம்‌போல வாழுங்க ; நான் இதுல தலையிடல!

நான் இப்பவே எங்கேயோ போறேன் என்னைத் தேடாதீங்க !

மனைவி செல்வி அதிரடியாக‌‌ பேசவே கணவன் மகேஸ்வரன் பெரும் அதிர்ச்சி‌யடைந்தார்!

உடனே அவரது மனைவி செல்வி அவர் பேச்சையும் மீறி‌ திடமான முடிவுடன் தீர்க்கமாக பேசிவிட்டு கோபத்தின் உச்சக் கட்டமாய் விருட்டென்று வீட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினாள் !

மகேசுவரன் ஒன்றும் புரியாமல் விழித்தார்! இது என்னடா பிரச்சினையா போச்சி. தம்முடைய சமுக சேவையை பிடிக்காமல் மனைவி வீட்டைவிட்டு போகிறாளே‌ என்ற அதிர்ச்சியுடன்

மனைவியை சமாதான படுத்த வேகமாக பின் தொடர்ந்தார் மகேசுவரன்! ஆனால் அவரின் மனைவி செல்வி

எடுத்த முடிவில் பின்வாங்காமல் வீட்டை‌ விட்டு வெளியேறும் முடிவுடன் வீட்டை விட்டு தெருவில் நடக்க அவள் பின்னே, மகேசுவரனும் பின்தொடர்ந்தார். மனைவியை தடுத்து நிறுத்த எவ்வளவோ போராடினார் ; ஆனாலும் முடியவில்லை!

அந்த நேரம் பார்த்து சவாரி ஆட்டோ ஒன்று வரவும் அதை மனைவி செல்வி நிறுத்தி பேருந்து நிலையத்துக்கு போகச் சொல்லி விருட்டென்று ஆட்டோவில் ஏற ஆட்டோ வேகமாகச் செல்லத் தொடங்கியது !

மகேசுவரன் செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டார்.

ஆட்டோ பேருந்து நிலையத்தை நோக்கி மின்னலாய்பறந்து சென்று விட்டது.

இதனால் மகேசுவரன் மனம் பதற்றத்துடன் சிறுதுதூரம் நடந்து சென்றுதானும் பேருந்து நிலையம் செல்ல ஒர் ஆட்டோவில் ஏறிபேருந்தை நிலையத்தை நோக்கி விரைந்து சென்றார். ஆனாலும் அவரால் பேருந்து நிலையத்தில் மனைவி செல்வியை பார்க்க முடியவில்லை !

ஏமாற்றத்துடன் அந்தக் கவலையில் நடந்தே கடற்கரைக்கு வந்து சேர்ந்து அங்கு உட்கார்ந்து கொண்டார் மகேசுவரன்!

இவரைப் பற்றி சிலவரிகள் மகேசுவரன் அரசு துறையில் எழுத்தராக பணியாற்றி பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்கள் தான் ஆயின.

நாட்டுப்பற்றுள்ளவர் ; சமூகஆர்வலர். இதனால் அவர் பணி ஓய்வு பெற்றாலும் தான் வசிக்கும் தெருவில் சமுக சேவை மன்றத்தில் தன்னை இணைத்து, அந்த மன்ற உறுப்பினர்களிடம் சேர்ந்து. தெருவில் அடிப்படை வசதிகளின் குறைகளை நகராட்சி அதிகாரிகளிடம்‌ முறையிட்டுவந்தார்.

ஆனால் இந்தத் தடவை அவர் நெகிழிப் பிரச்சினைகளையும் வடை எண்ணெய் பிரச்சினையிலும் கையில் எடுக்க, அது வீட்டில் பெரிய பிரச்சினையாகிவிட்டது. அவருக்கு இரண்டு மகள்கள். அவர்களை வெளியூர் மாப்பிள்ளை‌களுக்கு திருமணம் செய்து கொடுத்ததால் அவர்கள் வெளியூர்களில் உள்ளனர்.

கடற்கரையில் மனைவி வீட்டை விட்டு வெளியேறிய கவலையில் இருந்த மகேசுவரன் பழைய நினைவுகளில் இருந்து விடுபட்டு தனது வீட்டுக்குச் செல்ல. மெதுவாக எழ முயன்றார்.

அப்போது யாரோ ஒருவர் மகேசுவரனை பார்த்தபடி சத்தம் போட்டு அழைத்தவாறே வேகமாக வந்தார் !

மகேசுவரன் யாரது நமது பெயரைச் சொல்லி அழைப்பது என்று கண்களை துடைத்து உன்னிப்பாக‌ பார்த்தார்.

“அடே ! நமது சங்கத்து மெம்பர் மணி மாதிரி தெரியுது ; ஆமாம் மணியே தான் இவரு எதுக்கு நம்மை பார்க்க வேகமாக வர்றாரு?” என்று மனதில் மின்னலாய் வந்தக் கேள்விகளை ஓடி வந்தவரின் மேல் வீச ஓடிவந்த மணி என்பவர் மகேசுவரன் அருகில் வந்து விட்டார் !

“அண்ணே !மகேசுவர அண்ணே! ஒரு முக்கியமான‌ விசியமுண்ணே!” என்றவாறே அருகில் வந்தார்.

“என்ன முக்கிய விசியம் !”

“அண்ணே நம்ம தெருவுல நகராட்சிக்காரங்க வந்து நாம ரிப்போர்ட் பண்ணின பிளாஸ்டிக் பை வச்சகடைக்காரர்களுக்கும் பழைய எண்ணெயை வச்சி பலகாரம் போட்ட வடைகடைகாரர்களுக்கும் அபராதம் போட்டாங்கண்ணே! “

“அவங்களும் இனிமே பிளாஸ்டிக் பைகளோ பழைய எண்ணெயோ பயன்படுத்த மாட்டோமுன்னு எழுத்து மூலமாக எழுதி கொடுத்துட்டாங்களாம்! அதோட நம்ம சங்கத்துக்காரங்க கிட்டேயும் மன்னிப்பு கேட்டார்களாம்!

இதைப் பாராட்டி நகராட்சி அதிகாரிகள், நாங்க செய்ற‌ வேலையை நீங்க செஞ்சிட்டீங்கன்னு பாராட்டினாங்களாம்!

இன்னொரு முக்கியமான விசியம்! அதிகாரிகள் நம்மல பாரட்டி பேச நாளைக்கு பாராட்டு விழா வச்சிருக்காங்களாம். நாளைக்கு நம்ம சங்கத்துக்காரங்கள எல்லாரையும் வரச் சொல்லி இருக்காங்களாம்.

அதோட நம்மல கௌரவப்படுத்தி பரிசு பொருள் தருவாங்களாம்!” என்று சந்தோசம் முகத்தில் மின்ன மணி பேசினார்.

மகேசுவரன் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார்! அவருடைய‌ முகத்தை பார்த்த மணி” அண்ணே இன்னொரு சந்தோசமான விசியம்! உங்க சம்சாரம் இந்த விசியத்தை கேள்விபட்டாங்களாம்; வெளியூருக்கு போகாம அவங்க உங்க வீட்டுக்கு போயிட்டு இருக்காங்களாம்!” என்று மணி‌ சொல்லவும் மகேஸ்வரனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

பிறருக்கு செய்யும் நன்மைகள் சேவைகள் என்றும் தோற்பதில்லை என்று புரிந்து கொண்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *