செய்திகள்

நன்னிலம் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள் அமைச்சர் காமராஜ் அடிக்கல் நாட்டினார்

திருவாரூர், பிப்.11–

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் பேரூந்து நிலையம் விரிவாக்க பணிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிசந்திரன் தலைமை வகிக்க, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:–

மக்களின் தேவைகளை அறிந்து அதை முழுமையாக நிறைவேற்றுகிற அரசாக புரட்சித் தலைவி அம்மாவின் அரசு திகழ்ந்து வருகிறது. சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களையும்,வளர்ச்சி திட்டங்களையும் முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

நன்னிலத்தில் அரசு கல்லூரி தந்து நன்னிலம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா. தொடர்ந்து குடவாசலில் அரசு கலை கல்லூரி, வலங்கைமானில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி போன்றவற்றை தந்து என்றைக்கும் மக்களுக்கு உறுதுணையாக திகழ்ந்த வருகிற அரசு அம்மா அரசு.

அந்தவகையில் இன்றையதினம் நன்னிலத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையமானது 42 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 24 வணிக வளாக கடைகள் மற்றும் உணவகம், 2 பயணிகள் காத்திருப்பு கூடம், 10 பேருந்து நிறுத்துமிடம், கழிப்பறை வசதி, 200 மீட்டருக்கு சுற்று சுவர் ஆகிய அனைத்து வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இப்பேருந்து நிலையத்தில் தினந்தோறும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் 1,443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதன் மூலம் இதுவரை 6 லட்சத்து 69 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ப.குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் சோ.சிவகுமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் இராமகுணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத் துணைத் தலைவர் சி.பி.ஜி.அன்பு, நன்னிலம் கூட்டுறவு சங்க தலைவர் பக்கரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *