சிறுகதை

நன்னயம் செய்துவிடல் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

“இப்படியே பித்துப்பிடிச்சாப்பல இருந்தா எப்படிங்க? அதெப்படி நீங்க தனியா கடையையும் பார்த்துக்கிட்டு, வெளியில் கொள்முதலுக்கும் கடையை அப்பப்ப மூடிக்கிட்டு போறீங்க.திரும்பி வந்தப்புறம் கடை திறந்து வியாபாரம் பண்ணினப்ப வராத நஷ்டம் இப்ப ஒரு வருஷமா வருது.அதுவும் நம்ம சொந்தக்காரப் பையன் முழு நேரமா கடையை பார்த்துக்கிறப்ப வருது?” என்றாள் என் மனைவி.

அதற்கு பதில் சொல்லத் தெரியாமல் உதட்டை பிதுக்கினேன்..

அவள் மறுபடி, “கடையில எல்லா சாமான்களும் ஸ்டாக் இருக்கா இல்லையா? இல்லை கடையில் ஒரு பையன்தானே இருக்கானானேனு யாரும் கடையாண்டை வரதில்லையா?”என்றாள்.

“நல்லா கேட்டே போ.. இவனுக்கு ரொம்ப நல்ல பேரு தெரியுமா? கடைக்கு வரவங்கள்ளாம் கூட” நல்ல பையனாதான் பிடிச்சிருக்கீங்க .. துளிக் கூட முகம் சுளிக்கறதில்லை இவன்..கடையில ஒரு சாமான் இல்லைனாக் கூட” நீங்க வீட்டுக்கு போங்க ஐயா. முதலாளி வந்ததும் சொல்லி வெளியிலிருந்து வாங்கி உங்க வீட்டிலய கொடுக்கிறேன்றானாம்..பக்கத்து பக்கத்து கடைக்காரங்கள்ளாம் கூட “நல்ல கெட்டிக்காரன்பா நீ.. பிடிச்சாலும் நல்ல புளியங்கொம்பா பிடிச்சு வேலைக்கு வச்சிருக்கே..

எனக்கும் இப்படி நம்பகமான ஒரு பையன் கிடைச்சா நல்லாயிருக்கும்னு சொல்றாங்க.

நான் அவங்ககிட்டல்லாம் “அட போப்பா இப்பல்லாம் வியாபாரத்தில் நஷ்டம்தான் அதிகம் வருது’’னு முறையிடறப்பல்லாம் “என்னப்பா..ஏன் பொய் சொல்றே? சுத்து வட்டாரத்தில் உன் கடைதான் எப்பவும் ஜேஜேனு இருக்கு..நல்ல வியாபாரம்..எங்க கண்ணு பட்டுடப் போகுதேனு பார்க்கிறியானு கேட்கிறாங்க..

ஆனா கடையில் கொள்முதல் பண்ணின சரக்குகள் என்னவோ காலியா யிடுது. . அடிக்கடி கொள்முதலுக்கு வேற நான் போய் வர வேண்டியிருக்கு.. ஆனா லாபம்னு பார்த்தா ..ஊம்.. என்ன பண்றதுனே விளங்கலை.. காக்கையா

தூக்கிகிட்டு போயிடும்? இல்லை பேய், பிசாசு எதனாச்சும்…”என்றேன்.

என்னை பார்த்து என் மனைவி “நீங்களா இப்படி பேசறீங்க? எனக்கென்ன

தோணுதுனா, சின்னப் பையன்..அதிகம் படிக்காதவன்..வியாபாரத்தில் அதிக பழக்கமும் இல்லை..அதனால் யார்கிட்டவாவது ஏமாந்து போய் துட்டு வாங்கா மலும் இருந்திருக்கலாம். இல்லைனா, பாக்கி சில்லறையை அதிகமாவும் கொடுத்திருக்கலாம்னு தோணுது..”என்றாள்.

“நீ சொல்றதை ஒத்துக்கிறதா வச்சுக்கிட்டாலும் தினமுமா இப்படி தவறு நடக்கும்? வியாபாரம் பழகப் பழக அனுபவம் வர வேணாமா என்ன?

நான் முதல் முதலாய் கடையில் கல்லாவில் உட்கார்த்தி வைக்கப்பட்டப்ப எனக்கும் ஒருவித படபடப்பு இருந்திச்சுத்தான். போகப்போக

பணத்தை கஸ்டமர்கள்கிட்டயிருந்து வாங்கறப்பவும் மிச்ச சில்லறையை கொடுக்கிறப்பவும் ஒரு வாட்டிக்கு மூணு வாட்டி எண்ணித்தான்

கொடுப்பேன்..அவங்களையும் அங்கேயே என் கண் எதிரா எண்ணிப் பார்க்க சொல்வேன்..ஏன்னா சில சமயங்களில் சின்ன அறியாப் பையன்களும் ஒரு உப்பு தட்டிச்சு, தீப்பெட்டி தட்டிச்சுனோ, இல்லை வீட்டு தலைவனோ தலைவியோ பசங்ககிட்ட லிஸ்ட் போட்டுக் கொடுக்கிறதோட பணத்தையும் கொடுத்து அனுப்புவாங்க. அப்பல்லாம் நான், ஒவொரு சாமான்களும் என்ன விலை, மொத் தம் எத்தனை பொருள்கள் கொடுத்திருக்கேன். கொணாந்த பணம் எவ்வளவு? பொருள்கள் விலை போக மிச்சம் எவ்வளவுனு அவங்க கொண்டுக்கிட்டு வர லிஸ்ட்லய எழுதி ஒருமுறைக்கு நாலுமுறைகள் மிச்ச பணத்தை எண்ணிக் கொடுத்து அனுப்புவேன். இந்த பொருள் நல்லாயில்லை, மக்கிப் போயிருக்கு. உலுத்து போயிருக்கு. வண்டுகள் அடிச்சிருக்குனு யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு கொடுத்து அனுப்புவேன். இதனால்தானோ

என்னவோ அந்த காலத்தில் ஒரு விளம்பரம் செய்தித்தாள்களில் இப்படி வரும்..”Shopping can be a childs play, if ISI Mark is there னு.

“எல்லாம் கரக்ட்தாங்க..ஆனா இப்படியும் நடக்கலாம்ல..”

“நீ என்ன சொல்ல வரே?”

“ஒருகால் சின்னப் பையன்தானேனு மாமூல் வாங்கறவங்க மிரட்டி எதனாச்சும் வாங்கக்கிட்டு போயிடலாம்? இல்லை சாமான்கள் வாங்கினப்புறம்

கடன் வச்சுட்டு போயிடறாங்களா என்ன?..குழப்பமாயிருக்கு..ஆனா நேத்து பக்கத்து கடைக்காரர், நமக்கு ரொம்ப பழக்கமானவர்,எங்கிட்ட

பேசிக் கிட்டிருந்தப்ப ஒரு கோடு காட்டினார். அப்படியெல்லாம் இருக்காதுனு ஒரு மனசு சொல்லுது. சொந்தக்கார பையனா வேற போயிட்டான்.

ஏதாவது கேட்கப்போய் இவன் ஓன்னு அழுதுக்கிட்டு கடையை விட்டு எங்காவது போயிட்டா…. அவங்க பெற்றோருக்கு யார் பதில் சொல்றதாம்?

என்றேன்.

“நான் சொல்றபடி கேளுங்க..பையனை கூப்பிட்டு அன்பா நாலு வார்த்தைகள் பேசி, அப்புறமா அவங்கிட்ட நம்ம கடை நஷ்டத்தில் போகுதுப்பா…இப்பல்லாம் போட்டிகள் அதிகமாயிருச்சு. அதனால் கடையை மூடிட்டு போயிடலாம்னு இருக்கேன்..பாவம்! நீ என்னை நம்பி வந்துட்டே..உன்னை அம்போனு விட எனக்கு மனசில்லை..நீயும் இப்ப வியபார நுணுக்கங்கள் தெரிஞ்சுக்கிட்டே..பக்கத்து

தெருவில் ஒரு கடை விலைக்கு வருது.அதை உனக்கு வாங்கித்தரேன்.புத்தியா பிழைச்சுக்கோனு சொல்லுங்க ..” என்றாள்.அவள் சொன்ன

படியே அவனிடம் நைச்சியமாய் பேசிய போது அவனால் எதுவும் பேச முடியவில்லை.

முத்தாய்ப்பாய் அவனிடம் சொன்னேன்..”நீ மேல, மேல வளரணும். அதுக்கு அய ராத உழைப்பு மட்டும் இருந்தா போதாது. நாணயம் அவசியம். இதை உணர்ந்து நீ நடந்துக்கிட்டியானா உன் வாழ்க்கை சிறப்பாயிருக்கும்” என்றேன்.

அப்போது அவன் தன் பார்வையைத் தரை நோக்கி செலுத்தியவாறு இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் தெறித்து நிற்பது தெரிந்தது.

மன்னிச்சிடுங்கன்னான்.

மன்னிச்சிட்டேன். திருந்திடுவான். சம்பிக்கைதானே வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *