செய்திகள்

நந்திகிராம் கூட்டுறவு சங்கத் தேர்தல்: திரிணாமுல் கட்சிக்கு 51 இடம்; பாஜக–0

கொல்கத்தா, ஆக. 23–

நந்திகிராமில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற பாஜக படுதோல்வியை சந்தித்தது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது அரசியல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் வகையில் மாநில கட்சிகளை குறிவைத்து ஆபரேஷன்களை நடத்தி வருகிறது. அந்த லிஸ்டில் மேற்குவங்க மாநிலமும் ஒன்று. இதற்கான அச்சாரம் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போடப்பட்டது. 3 சீட்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களை தன்வசப்படுத்தி 77 சீட்களாக தன்னை உயர்த்திக் கொண்டது.

பாஜகவுக்கு அதிர்ச்சி

இந்நிலையில் பாஜகவிற்கு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஒன்று அண்மையில் அரங்கேறியுள்ளது. அதாவது, நந்திகிராமில் கூட்டுறவு சங்கத்திற்கு நடந்த தேர்தலில் 99 சதவீதம் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரு சதவீதம் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் தோல்வியை தழுவியிருக்கிறது. மொத்தமுள்ள 52 சீட்களில் திரிணாமூல் காங்கிரஸ் 51, இடதுசாரிகள் 1 இடத்தில் வென்றனர்.

இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் சரியான முறையில் எடுத்துரைத்து எங்களின் செல்வாக்கை நிரூபிக்க தவறிவிட்டோம் என்றனர். நந்திகிராம் என்றதும் அனைவருக்கும் நினைவில் தோன்றுவது 2021 சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி வாகை சூடியது தான்.

நந்திகிராம் போராட்டம் தான் மம்தா பானர்ஜி அரசியல் விஸ்வரூபம் எடுக்கவும், முதலமைச்சராக முடி சூடவும் அடித்தளமாக இருந்தது. இந்த தொகுதியில் 2009ஆம் ஆண்டில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கொடி தான் பறக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் பாஜக வென்றது முக்கியத்துவம் பெற்றது. அங்கேயே பாஜக தற்போது வீழ்த்தப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.