செய்திகள்

நந்தம்பாக்கம், தாம்பரத்தில் 5 மினி சூப்பர் மார்க்கெட்: செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்

சென்னை, செப்.14–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க இன்று மவுண்ட் – பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் ஐடிபிஎல் வணிக வளாகத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் அருகே சிறு கூட்டுறவு சிறப்பங்காடியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :–

முதலமைச்சரின் ஆணையின்படி, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுச் சங்கங்கள் சார்பாக 100 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளைத் திறக்க திட்டமிட்டதின் தொடர்ச்சியாக, திருச்சிராப்பள்ளி பீமநகரில் 16.8.2018 அன்று ஒரு சிறு கூட்டுறவு சிறப்பங்காடியும், 24.8.2018 அன்று சென்னை தியாகராய நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் டி.யூ.சி.எஸ். நியாய விலைக்கடை அருகில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடியும், 1.9.2018 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவானைக்கோயிலில் ஒன்றும், 5.9.2018 அன்று தூத்துக்குடி மாவட்டம் போல்பேட்டையில் ஒன்றும் என 4 சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இன்று, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பாக நந்தம்பாக்கத்தில் ஒன்றும், தாம்பரம் கிழக்கில் செம்பாக்கம் மற்றும் மகாலட்சுமி நகர் பகுதிகளில் இரண்டு சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளும், தாம்பரம் மேற்கில் தாம்பரம்–4 நியாயவிலைக் கடை, ஆர்.கே.தெரு 1 நியாயவிலைக் கடை அருகில் இரண்டு சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளும் என 5 சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

300 வகை பொருட்கள்

இச்சிறு கூட்டுறவுச்சிறப்பங்காடிகளில் தலா ரூ.7 லட்சம் மதிப்புள்ள 300 வகையான மளிகை மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூட்டுறவு சங்க தயாரிப்புகளான மங்களம் மஞ்சள் தூள், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், வரகு, சாமை, தினை, புளி, மிளகாய் போன்ற பொருட்களுடன் அம்மா உப்பு, ஊட்டி டீ ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. பொருட்களின் அதிகபட்ச சில்லரை விலையிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவிகிதம் விலை குறைவாக விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் நுகர்வோரின் ஆதரவு மற்றும் தேவையைப் பொறுத்து, அதிக எண்ணிக்கையிலான பொருட்கள் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளில் விற்பனை செய்யப்படும். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இத்தகைய அங்காடிகள் அமையப் பெற்றுள்ளதால், பொதுமக்கள் தரமான பொருட்களை குறைவான விலையில் பெற்று பயன் பெற மிகவும் வசதியாக இருக்கும்.

பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வடசென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பாகவும், பிற மாவட்டங்களிலும் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் விரைவில் திறக்கப்படவுள்ளன என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இரா.பழனிசாமி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மேலாண்மை இயக்குநர் எஸ்.பாபு, காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் ஆர்.கே.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன், ‘டியூசிஎஸ்’ பி.சீனிவாசன் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *