செய்திகள்

நந்தனத்தில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை சென்னை வருகை

5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ட்ரோன்கள் பறக்க தடை

சென்னை, மார்ச்.3-–

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதையொட்டி 15 ஆயிரம் போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஏப்ரல் 29–ந்தேதி வரை சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 27ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வந்தார். அங்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ‘என் மண்; என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்றார். பின் மோடி மதுரை சென்று, அங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அடுத்த நாள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். அதன் பின்னர் திருநெல்வேலியில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

4 நாட்கள் கழித்து திரும்பவும் பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். சென்னை நந்தனத்தில் நாளை நடைபெறும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத்தில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.45 மணிக்கு வருகிறார்.

பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, கல்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்று மதியம் 3.30 முதல் மாலை 4.15 மணி வரை கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு (உற்பத்தி) திட்டத்தை பார்வையிடுகிறார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் கல்பாக்கம் ஹெலிபேடு சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 5 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலைய ஹெலிகாப்டர் தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்ட திடலுக்கு மாலை 5.10 மணிக்கு வருகிறார். மாலை 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில் பா.ஜ.க.கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களான வாசன், ஏ.சி.சண்முகம், தேவேந்திரநாதன் யாதவ், ஜான் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

கூட்டம் முடிந்ததும், மாலை 6.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக விமான நிலையம் செல்கிறார். மாலை 6.35 மணிக்கு சென்னையில் இருந்து தெலுங்கானா நோக்கி விமானத்தில் அவர் புறப்பட்டு செல்கிறார். தெலுங்கானாவை இரவு 7.45 மணிக்கு சென்றடைகிறார்.

5 அடுக்கு பாதுகாப்பு

பிரதமர் சென்னை வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து, சென்னை கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து கமிஷனர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர போலீஸ் கூடுதல் கமிஷனர்கள், இணை– துணை–உதவி கமிஷனர்கள் , சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் போலீஸ் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார் உள்பட 15,000 போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் நிகழ்ச்சி நடைபெறும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம், சென்னை விமான நிலையம் மற்றும் சுற்றுப்புறங்களிலும், வழித்தடங்களிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு,தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சென்னையில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும், முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னையில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் போலீசார் மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி சென்னையில் ஏப்ரல் 29–ந்தேதி வரை டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணமாக தற்காலிக தடைவிதிக்கப்பட்ட டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பாக எச்சரிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *